For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜல்லிக்கட்டு நடத்துவதை உறுதி செய்ய மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் - கருணாநிதி

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதை உறுதி செய்ய மத்திய அரசு அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு அவசர ஆணை பிறப்பித்த நிலையில், உச்ச நீதி மன்றம் அதற்கு திடீரென்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழக மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் அறிவிப்பாணையை கடந்த 7ஆம் தேதியன்று வெளியிட்டது.

statement issued by dmk leader karunanidhi about jallikattu

இதைத் தொடர்ந்து தமிழக அரசும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கேற்ற நடவடிக்கை களைச் செய்யும்படி பணித்து, அவர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விட்டார்கள். இந்த நிலையில் தான் உச்ச நீதி மன்றத்தில் இதுகுறித்து வழக்கு விசாரணை நடைபெற்று, இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014இல், உச்ச நீதி மன்றத்தில் விலங்குகள் நல வாரியம் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்ய வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கில் தான் 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு சட்டத்தை ரத்து செய்து அப்போது தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆகவே விலங்குகள் கொடுமைத் தடுப்புச் சட்டம் 1960 திருத்தப்படாமல், ஜல்லிக்கட்டு விளையாட்டை அனுமதிக்க வசதியாக ஒரு புதிய பிரிவை அந்தச் சட்டத்தில் இயற்றாமல், மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது.

அதனால் தான் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கைக்கு உடன்படவில்லை. ஒரு நீதி மன்றத் தீர்ப்பை அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ் வழங்கியுள்ள அதிகாரத்தின்படி ஒரு மாநில அரசோ அல்லது மத்திய அரசோ அவசரச் சட்டத்தின் மூலமாக அந்தத் தீர்ப்பின் அடிப்படையை மாற்றி அமைக்க முடியும் என்று பல்வேறு தீர்ப்புகளில் உச்ச நீதி மன்றமே கூறியுள்ளது. அந்த அணுகு முறையை ஏன் பின்பற்றவில்லை என்று தெரியவில்லை.

ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவது குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி திரு. மார்கண்டேய கட்ஜு அவர்கள், "பேஸ்புக்"" பக்கத்தில் கூறும்போது, "ஜெயலலிதாவுக்கு அவருடைய வழக்கறிஞர்கள் தவறான ஆலோசனை தந்ததால், பிராணிகள் வதைத் தடுப்புச் சட்டத்தைத் திருத்துமாறு கோரி, பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். அரசியல் அமைப்புச் சட்டத்தின், 7வது பிரிவின்படி, விளையாட்டு பொழுதுபோக்கு போன்றவை, மாநிலங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

எனவே, ஜல்லிக்கட்டு நடத்த, அவசரச் சட்டத்தைப் பிறப்பிக்கும்படி மாநில ஆளுநரிடம் கேட்பதே போதுமானது. அதில், காளைகளுக்கும், மனிதர்களுக் கும் அதிகப் பாதிப்பு ஏற்படாத வகையில் சில அம்சங்களைச் சேர்க்கவேண்டும்"" என்று தெரிவித்திருந்தார். எனவே இன்றைய நிலையில், திரு. மார்கண்டேய கட்ஜு அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளையும் தமிழக அரசு உடனடியாக பரிசீலிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினை குறித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமருக்கு இன்று எழுதிய கடிதத்தில், மத்திய அரசு இந்தப் பிரச்சினையில் அறிவிக்கை மூலமாக ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதற்கு ஆணை பிறப்பிக்காமல், அவசரச் சட்டத்தின் மூலமாக அறிவித்திருக்க வேண்டும், அப்படி செய்திருந்தால் உச்ச நீதி மன்றம் இடைக்காலத் தடை விதித்திருக்க முடியாது என்றும், எனவே இந்தக் கட்டத்திலாவது இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் உடனடியாக அவசரச் சட்டம் பிறப்பித்து, ஜல்லிக்கட்டு விழாவினை நடத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

முதலமைச்சர் ஜெயலலிதா கடிதத்தில் எழுதியுள்ள கருத்துகளைத் தான் தமிழகத்திலே உள்ள அனைத்து எதிர்க் கட்சிகளும் எடுத்துக் கூறியுள்ளன. எனவே மத்திய அரசு, குறிப்பாக இந்தியப் பிரதமர், நரேந்திர மோடி அவர்கள், தமிழக மக்களின் உணர்ச்சி பூர்வமான இந்தப் பிரச்சினையிலே உடனடியாக நடவடிக்கை எடுத்து, அவசரச் சட்டம் ஒன்றினை, விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டம் 1960இல் திருத்தம் கொண்டு வந்து பிறப்பித்து, இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்துவதற்கான அனுமதியினை வழங்க உதவிட வேண்டுமென்று திமுகவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

English summary
Dravida Munnetra Kazhagam chief karunanidhi urged to central government about jallikattu
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X