For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழ்நாடு வளர்ச்சிப்பாதையில் செல்கிறது: முதல்வர் ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: பொதுவாக தேசியக் கட்சிகளின் சிந்தனை எல்லாம், டெல்லியை மத்திய அரசை சுற்றித் தான் இருக்குமே தவிர, தமிழ்நாட்டில் இருக்காது. தமிழ் நாட்டைப் பற்றிய சிந்தனை கூட தேசிய கட்சிகளுக்கு இருக்காது என்று முதல்வர் ஜெயலலிதா சாடியுள்ளார். தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி இடைத்தேர்தலையொட்டி மேயர் வேட்பாளர் கணபதி.ப.ராஜ்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

Tamil Nadu economy getting strong: Jayalalithaa

"இந்தியா என்பது ஒரு கூட்டுக் குடும்பம் போன்றது. இந்தக் கூட்டுக் குடும்பத்தை ஒரு கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் இந்தியா என்கிற கூட்டுக் குடும்பத்தின் கீழ் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா என பல கிளைக் குடும்பங்கள் உள்ளன. அந்தக் கிளைக் குடும்பங்களின் நலனில் முழு அக்கறை கொண்டுள்ளவர்கள் அந்தக் கிளைக் குடும்பங்களின் தலைவர்களே தவிர, கூட்டுக் குடும்பத்தின் தலைவர்கள் அல்ல.

இந்திய நாட்டை பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யலாம். ஆனால் அவர்களுக்கு தமிழர்களின் உரிமைகளை எப்பாடுபட்டாவது நிலைநாட்ட வேண்டும் என்ற அக்கறை இருக்கிறதா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. ஏனென்றால், அவர்கள் பல மாநில மக்களின் வாக்குகளைப் பெற்று மத்தியிலே ஆட்சி அமைத்து இருக்கிறார்கள். தமிழர் நலனில் மட்டுமே அக்கறை கொண்டுள்ள கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிடமுன்னேற்றக் கழகம்தான்.

காவிரி பிரச்சினை

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதை கண்காணிக்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும். இதற்காக நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு கூட தொடர்ந்து இருக்கிறோம். ஆனால் இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு இன்னமும் நியாயம் வழங்கவில்லை. இதற்குக் காரணம் என்ன?

கர்நாடக வாக்கு வங்கி

கர்நாடகாவிலே பாரதிய ஜனதா கட்சிக்கு என்று ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுத்தால், கர்நாடக மக்கள் தங்களுக்கு எதிராக போய்விடுவார்களோ என்ற பயம் பாரதிய ஜனதா கட்சியினரிடம் இருப்பது தான் இதற்குக் காரணம்.

மத்திய அரசு மவுனம்

கச்சத்தீவு பிரச்சனையில் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசால், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதே போன்று உச்ச நீதிமன்றத்திலும் தமிழகத்திற்கு எதிராக முந்தைய மத்திய அரசு பதில் மனுவை தாக்கல் செய்தது. இந்த பதில் மனுக்களை தற்போதைய மத்திய அரசு இன்னமும் மாற்றவில்லை. இதனை தமிழக பாரதிய ஜனதா கட்சியினரால் தட்டிக் கேட்க முடிந்ததா? இல்லையே!

பிரச்சினைக்கு தீர்வு

இதே போல் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நண்பர்களும். முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை என்றால் தமிழக கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். கேரளா கம்யூனிஸ்ட் கட்சி ஒரு நிலைப்பாட்டை எடுக்கும். மத்திய கம்யூனிஸ்ட் கட்சியினரோ மவுனமாக இருப்பார்கள். தேசிய கட்சிகளால் மாநில பிரச்சனைகளிலேயே முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலாது என்னும் போது; மாநிலத்தில் உள்ள மாநகராட்சியின் பிரச்சனைக்கு அவர்களால் எப்படி தீர்வு காண முடியும்?

உள்கட்சிப் பிரச்சினைகள்

பாரதிய ஜனதா கட்சிக்குள்ளேயே உட்கட்சிப் பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. இதன் காரணமாகத் தான் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார்கள்.

எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

மத்திய புள்ளியியல் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள 2012-2013 ஆம் ஆண்டிற்கான புள்ளி விவரங்களை மேற்கோள் காட்டி, தமிழகத்தில் வளர்ச்சி குறைந்துவிட்டதாக இங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதில் உள்ள உண்மை நிலையை உங்களுக்கு எடுத்துரைப்பது எனது கடமை.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

2012-2013 ஆம் ஆண்டிற்கான தமிழ் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.39 விழுக்காடு என மத்திய புள்ளியியல் அமைப்பினால் வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களோடு ஒப்பிடும் போதும், அகில இந்திய சராசரியுடன் ஒப்பிடும் போதும் குறைவு என்பது தான் அரசியல் கட்சிகளின் குற்றச்சாட்டு.

வறட்சியை சந்தித்த தமிழகம்

2012-2013 ஆம் ஆண்டு தமிழ்நாடு மிகப்பெரிய வறட்சியை சந்தித்தது. தென் மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்த்ததன் காரணமாகவும், கர்நாடகம் நமக்கு உரிய தண்ணீரை திறந்துவிட மறுத்ததன் காரணமாகவும், வேளாண் உற்பத்தியில் எதிர் மறையான வளர்ச்சியை தமிழ்நாடு சந்தித்தது.

வேளாண் உற்பத்தி

2012-2013 ஆம் ஆண்டைய வேளாண் உற்பத்தி (-)13.04 விழுக்காடு ஆகும். எனவே தான் சென்னையைத் தவிர, அனைத்து மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக நாங்கள் அறிவித்தோம். இந்த வறட்சி காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்தியாவிலேயே முதன் முறையாக வறட்சிக்கு நிவாரணம் வழங்கினோம்.

உணவு தானிய உற்பத்தி

வேளாண் துறையில் ஏற்பட்ட எதிர்மறையான வளர்ச்சியின் காரணமாக, தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 2012-2013 ஆம் ஆண்டில் 3.39 விழுக்காடாக குறைந்தது. ஆனால் 2013-2014 ஆம் ஆண்டில் இந்த நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. உணவு தானிய உற்பத்தியில் இதுவரை இல்லாத அளவான 110 லட்சம் மெட்ரிக் டன் என்ற சாதனையை நாம் எய்தியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

வளர்ச்சிப்பாதையில் தமிழகம்

இதன் காரணமாக தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 7.29 விழுக்காடு என இதே மத்திய புள்ளியியல் அமைப்பு மதிப்பிட்டுள்ளது. அதே சமயத்தில், அகில இந்திய சராசரி 4.74 விழுக்காடு என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தான் சென்று கொண்டு இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடப்பாண்டில் இதைவிட உயரிய இலக்கை அடைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று முதல்வர் தெரிவித்தார்.

English summary
Refuting criticism over the low growth rate (3.39 per cent) of Tamil Nadu during 2012-13, Chief Minister Jayalalithaa on Monday said it was largely due to the drought that affected the State and the consequent negative growth in agricultural production.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X