எதிர்த்து போட்டியிட தயார்- ஒரு ஓட்டு கூடுதலாக வாங்க முடியுமா: விஜயகாந்துக்கு தமிழருவி மணியன் சவால்!!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து தாம் போட்டியிட தயார் என்றும் என்னை விட ஒரு வாக்கு விஜயகாந்த் கூடுதலாக வாங்கிவிட்டால் தாம் அரசியலில் இருந்தே முழுமையாக ஒதுங்கிவிடுகிறேன்.. இதை விஜயகாந்த் ஏற்க தயாரா என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் சவால் விடுத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் பாரதிய ஜனதா அணியில் தேமுதிக, பாமக, மதிமுகவை சேர்க்க பெரும் பிரயத்தனப்பட்டவர் தமிழருவி மணியன். ஒருகட்டத்தில் கட்சிகளின் கூட்டணி பேரங்களால் வெறுத்துப் போன தமிழருவி மணியன், மாட்டு புரோக்கர் போல விஜயகாந்த் செயல்படுகிறார் என்று விமர்சித்தார்.
அதன் பின்னர் லோக்சபா தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. தொடர்ந்தும் அவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியனிடம் நீங்கள் நடத்தும் மதுவிலக்கு போராட்டத்துக்கு விஜயகாந்தை அழைப்பீர்களா என்று கேட்கப்பட்டது.

மதுவின் வாசம் அறியாதவர்கள்..
அதற்கு "மதுவின் வாசம் அறியாதவர்களை வைத்துதான் மது எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும்" என்று தமிழருவி மணியன் கூறினார். இது தேமுதிகவினரை ஆத்திரப்பட வைத்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, தமிழருவி மணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றளவுக்கு பஞ்சாயத்து ஆனது.

கொலை மிரட்டல்
பாரத்தசாரதி எம்.எல்.ஏவோ, தமிழருவி மணியன்தான் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று பதிலுக்கும் புகார் கொடுத்தார். இந்த விவகாரம் குறித்து ஜூனியர் விகடன் வாரம் இருமுறை இதழுக்கு தமிழருவி மணியன் அளித்து விளக்கத்தில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் குடி அதிகம்
தமிழகத்தில் குடிக்கு அடிமை ஆகுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக சாலைவிபத்து நடக்கிறது. பாலியல் பிறழ்வு, கொலைகள், கொள்ளை போன்றவை தமிழகத்தில் அதிகரித்திருக்க முதல் காரணம் மதுவின் ஆதிக்கம்தான்.

மதுவிலக்கு போராட்டம்
எனவே தமிழக முதல்வருக்கு மதுக்கடைகளை மூட வேண்டிய அவசியத்தைத் தெரிவிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பி.ஜே.பி., ம.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தேன்.

மது வாசம் அறியாதவர்கள்..
அப்போது, 'ஏன் தே.மு.தி.க-வை அழைக்கமாட்டீர்களா?' என செய்தியாளர் ஒருவர் கேட்டார். அதற்கு, 'மதுவின் வாசம் அறியாத மனிதர்களை வைத்து மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப்போகிறோம்' என்றுதான் சொன்னேன்.

விஜயகாந்த் குடிகாரர் என சொல்லலையே..
விஜயகாந்த் பெயரைச் சொல்லி, அவர் குடிகாரர். அதனால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை என நான் சொல்லவில்லை. அன்று இரவு 7.28 மணிக்கு தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதி என்னை தொடர்பு கொண்டார். ''என்ன ஐயா இந்த மாதிரி சொல்லி இருக்கிறீர்கள்?' என ஆரம்பத்தில் இணக்கமாகத்தான் பேசத் தொடங்கினார்.

மிரட்டிய பார்த்தசாரதி
'மதுவின் வாசம் அறியாதவர்களை வைத்துதான் மது எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றுதானே சொன்னேன். அதனால் விஜயகாந்த்துக்கு என்ன?' என நான் கேட்டேன். 'நீங்கள் விஜயகாந்த் குறித்த கேள்விக்குத்தானே அப்படி பதில் சொன்னீர்கள்' என்றார். சிறிது நேரத்தில் திடீரென ஆவேசமடைந்த அவர், 'மாட்டுத் தரகன்னு நீ கேப்டனை சொன்னபோதே உன்னை கவனிச்சிருக்கணும். மத்தவங்களை மாதிரி நினைச்சுடாதே. கேப்டனை பத்தி பேசினா நீ எங்க போனாலும் கையை, காலை உடைச்சு, உன்னை உண்டு இல்லைனு பண்ணாம விடமாட்டோம்' என மிகத் தரக்குறைவான வார்த்தையில் பேசினார். நானும் அவருக்கு பதில் அளித்தேன். இது அப்பட்டமான கொலை மிரட்டல். இதுபற்றி காவல் துறைக்கு புகார்செய்ய முடிவு செய்தேன்.

திரும்பப் பெற முடியாது
'நான், 'மதுவின் வாசனை அறியாதவர்களோடு இணைந்து போராடுவேன்' என்றுதான் சொன்னேன். நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? என் வார்த்தையை திரும்பப்பெற நான் விரும்பவில்லை.

மக்கள் நலன் சார்ந்தே..
மது வாசனை அறிந்தவர் யார், அறியாதவர் யார் என்று மக்களுக்குத் தெரியும். இப்படி சொன்னதில் தவறு இல்லை. எம்ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்தபோது அவரை விமர்சித்திருக்கிறேன். ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரை விமர்சித்திருக்கிறேன். மூன்றாவது முறை முதல்வராக உள்ள ஜெயலலிதா தவறு செய்தால் அவரையும் விமர்சித்து வருகிறேன். எனக்கென சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் யாரையும் விமர்சித்துப் பழக்கம் இல்லாதவன் நான். மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து, மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தால் விமர்சிப்பேன்.

இந்த மாதிரி ஆட்களை வைத்துக் கொண்டு..
ஆனால், இன்று வரை யாரிடம் இருந்தும் எனக்கு மிரட்டல் வந்ததில்லை. என் 45 ஆண்டு பொதுவாழ்வில் எனக்கு கீழ்த்தரமான அச்சுறுத்தலை தந்தவர் பார்த்தசாரதி மட்டும்தான். இவரைப் போன்றவரை அருகில் வைத்துக்கொள்வது என்பது கட்சித் தலைவருக்கு அழகில்லை.

அரை சதவிகிதம்தான் கிடைக்கும்..
இதுபோன்ற தவறான நடைமுறைகளால்தான் 10 சதவிகிதத்தில் இருந்த தே.மு.தி.க வாக்கு வங்கி, 5 சதவிகிதத்துக்கு கீழே போய்விட்டது. இதேநிலை நீடித்தால் அரை சதவிகிதமாக மாறிவிடும்.

விஜயகாந்தெல்லாம் முதல்வரானால்..
எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே இப்படி என்றால், இவர் முதல்வரானால் தமிழகத்தின் கதி என்ன ஆகும்?

ஒரு ஓட்டு கூட வாங்கிடுவாரா?
2016 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் இருக்கும் 14 தொகுதியில் எந்தத் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடத் தயார். என்னைவிட ஒரு வாக்கு அதிகமாக விஜயகாந்த் வாங்கினாலும், அரசியலில் இருந்து முழுமையாக விலகி விடுகிறேன். என் சவாலை ஏற்க விஜயகாந்த் தயாரா?'
இவ்வாறு தமிழருவி மணியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.