For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.. சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தப்பியது தமிழகம்.. ராமதாஸ்

சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடி பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடி பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியுள்ளது என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பொது நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதமாக அமையும் என ராமதாஸ் கூறியுள்ளார்.

ஜெயலலிதா, சசிகலா மீதான சொத்துகுவிப்பு வழக்கில் 2015ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. இதன்மூலம் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் தலா 10 கோடி ரூபாய் அபராதமும் உறுதியானது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இந்தத் தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது என கூறியுள்ளார். மேலும் 2001-06, 2011-16 ஆகிய ஆட்சிக்காலத்தில் இதைவிட பலமடங்கு அதிக ஊழல்களும், சொத்துக்குவிப்புகளும் நடந்தன என்றும் அதுகுறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்

வருவாய்க்கு மீறி ரூ. 66.65 கோடி சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைதண்டனையும், ரூ.10 கோடி தண்டமும் விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்திருக்கிறது. தண்டனை உறுதி செய்யப்பட்ட மூவரும் உடனடியாக சரணடையவும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். நாட்டில் நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பிக்க வைத்திருக்கும் இத்தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது

பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது

இந்த வழக்கில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் அபராதமும் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. எனினும், அவர் உயிரிழந்து விட்டதால் அவரது தண்டனை நடைமுறைப்படுத்தப்படாதே தவிர, அவர் நிரபராதி என்று நீதிபதிகள் கூறவில்லை. இந்தத் தீர்ப்பு கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பே வந்திருந்தால் தமிழக அரசியலின் போக்கே மாறியிருக்கும். தமிழகத்தில் இப்போதைய அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. இப்போதும் கூட இந்தத் தீர்ப்பின் மூலம் சசிகலா முதல்வராகக்கூடிய பேராபத்திலிருந்து தமிழகம் தப்பியிருக்கிறது.

சாட்சிகளை வளைக்க முயற்சி

சாட்சிகளை வளைக்க முயற்சி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மிக நீண்ட வரலாறு கொண்டதாகும். 18.09.1996 அன்று இவ்வழக்கில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் பின் 20 ஆண்டுகள் 4 மாதங்கள் மற்றும் 26 நாட்களுக்கு பிறகு இயல்பான முடிவுக்கு வந்திருப்பது மன நிறைவளிக்கிறது. வருவாய்க்கு மீறி சொத்துக்குவித்த வழக்கில் சட்டத்தை வளைக்கவும், சாட்சிகளை வளைக்கவும் ஏராளமான முயற்சிகள் நடந்தன.

நீதியே வெற்றி பெற்றிருக்கிறது

நீதியே வெற்றி பெற்றிருக்கிறது

ஆனால், அவை அனைத்தையும் மீறி இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரையும் குற்றவாளிகளாக அறிவித்து 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை அபராதம் விதித்தும் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதுவரை சாட்சிகளை வளைத்த ஜெயலலிதா மற்றும் சசிகலா தரப்பினர் அதன்பின்னர் நீதிபதியை வளைத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற்றனர். ஆனால், இறுதியில் நீதியே வெற்றி பெற்றிருக்கிறது. தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும் என்பது திரும்பவும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக வேண்டும்

அதிமுக எம்எல்ஏக்கள் பதவி விலக வேண்டும்

சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா அளித்த 1136 பக்கத் தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும். அத்தீர்ப்பை எந்த நீதிமானாலும் விமர்சிக்க முடியாது. இதை கடந்த காலங்களில் நான் பலமுறை கூறியிருக்கிறேன். கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூட தவறான கணக்கின் அடிப்படையில் தான் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டார்களே தவிர, குன்ஹாவின் தீர்ப்பை மறுக்க முடியவில்லை. இப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குன்ஹா தீர்ப்பு முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படுவதாக நீதிபதிகள் கூறியிருப்பதன் மூலம் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் நீதியை வளைத்து தான் இவ்வழக்கிலிருந்து விடுதலை ஆனார்கள் என்பது உறுதியாகிறது. வழக்கிலிருந்து விடுதலை பெற்று அதனடிப்படையில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயலலிதாவும், அதிமுகவும் பெற்ற வெற்றி தார்மீக நீதியில் செல்லாது என்பது தான் உண்மை. இந்த உண்மையை ஏற்று தமிழகத்தில் உள்ள அனைத்து அதிமுக சட்டசபை உறுப்பினர்களும் உடனடியாக பதவி விலகுவது தான் நீதிக்கு தலைவணங்கும் செயலாக அமையும்.

சொத்துக்குவிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல

சொத்துக்குவிப்புகள் கொஞ்சநஞ்சமல்ல

ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயலலிதாவும் சசிகலாவும் அவர்களைச் சார்ந்தவர்களும் தமிழகத்தில் நடத்திய அத்துமீறல்களும், சொத்துக்குவிப்புகளும் கொஞ்சநஞ்சமல்ல. 1991-96 ஆட்சிக் காலத்தில் கண்ணில் பட்ட சொத்துக்களையெல்லாம் வாங்கிக் குவித்தனர். சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டு மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகும் கூட திருந்தாமல் மீண்டும் சொத்துக்குவிப்பிலும், சொத்துப் பறிப்பிலும் ஈடுபட்டனர். சில மாதங்களுக்கு முன்பு கூட சென்னை வேளச்சேரியில் லக்ஸ் திரையரங்கத்தை பறித்ததாக குற்றச்சாற்றுகள் எழுந்தன. ஆனால், அதிமுக ஆட்சி நடந்ததால் அந்தக் குற்றச்சாற்றுகள் விசாரணை நடத்தப்படாமல் புதைக்கப்பட்டன.

ஊழலை ஒழிக்கும் ஆயுதம்

ஊழலை ஒழிக்கும் ஆயுதம்

ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் சொத்துக்குவித்த வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள இந்தத் தீர்ப்பு பொது நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்கான மிகப்பெரிய ஆயுதமாக அமையும். இனி வரும் காலங்களில் ஊழல் செய்தவர்களை தண்டிப்பதற்கான அளவுகோலாக இந்தத் தீர்ப்பு அமையும். அந்த அளவுக்கு இந்த தீர்ப்பில் இரு நீதிபதிகளும் ஏராளமான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளனர்.

இன்னும் நிறைய இருக்கு

இன்னும் நிறைய இருக்கு

அதிமுகவை மக்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தியதைப் பயன்படுத்தி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் நடத்திய ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பில் ஒரு பகுதிக்கு மட்டும் தான் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2001-06, 2011-16 ஆகிய ஆட்சிக்காலத்தில் இதைவிட பலமடங்கு அதிக ஊழல்களும், சொத்துக்குவிப்புகளும் நடந்தன. அதுகுறித்தும் முழுமையான விசாரணை நடத்தி, அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவதுடன், அந்த சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். அதுதான் ஊழலுக்கு எதிரான போரில் வழங்கப்படும் முழுமையான நீதியாக அமையும். இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
PMK founder Ramadas saying that due the asset case verdict Tamilnadu became safer from Sasaikala. This verdict will be the weapon to clear corruption in public administration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X