For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உத்தபுரத்தில் இரு தரப்பினரிடையே மோதல்: போலீசார் குவிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மதுரை: உசிலம்பட்டி அருகே உள்ள உத்தபுரத்தில் முத்தாலம்மன் கோயில் திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றம் காணப்படுகிறது. மோதல் வெடிக்காமல் இருக்க பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 உத்தப்புரம்

மதுரை மாவட்டம் எழுமலைக்கு அருகில் உள்ளது உத்தப்புரம் கிராமம். எழுமலை இதன் தாய்கிராமம். 18 பட்டி கிராமங்களுக்கும் எழுமலை தாய்கிராமம். உத்தப்புரத்தில் பிள்ளைமார்கள், தலித்துகள், முத்தரையர்கள் மற்றும் சில ஜாதியினரும் வசித்து வருகிறார்கள். இந்த கிராமத்தில் முத்தாலம்மன் - மாரியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள அரசமரம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருதரப்பினருக்கும் இடையே நீண்டகாலமாகத் தகராறு இருந்தது.

இது குறித்து 1989, 1990ல் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தில் 6 பேர் பலியாயினர். பின்னர் எழுமலையில் வைத்து இரு சமுதாயப் பெரியோர்களும் முன்னாள் எம்.எல்.ஏ தவமணித்தேவர் எழுமலை பண்ணையார் எஸ்.ஏ.நடராஜன் மற்றும் ஊர்ப் பெரியோர்கள் முன்னிலையில் வைத்து அமைதியான சூழ்நிலை நிலவப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு சமுதாயத்தினரிடையே சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது.

இரு தரப்பிலும் வன்முறை, கொள்ளை, தகராறு ஏற்படாத வண்ணம் பாதுகாப்புடன் வாழத் ‘தடுப்புச்சுவர்' இருதரப்பினர் சம்மதத்துடன் கட்டப்பட்டது. அரசமரம், முத்தாலம்மன் கோயில் பிள்ளைமார்களுக்கு உரியது என்று கூறப்பட்டது.

கடந்த 2008ம் ஆண்டு இந்த சுவருக்கு எதிராக வெடித்த போராட்டத்தையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீண்டாமைச் சுவரின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு பாதை அமைக்கப்பட்டது. சுவர் இடிக்கப்பட்ட பகுதியில் தலித் மக்கள் பட்டாசுகள் வெடித்ததால், இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் வெடிகுண்டுகளை வீசி தாக்கிக் கொண்டனர். இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். கடந்த பல ஆண்டுகளாகவே நடந்து வந்த பிரச்சினை 2011ம் ஆண்டு தீவிரமானது. இதனையடுத்து உத்தபுரம் கிராமத்தில் நீண்ட நாட்களாக 144 தடை உத்தரவு அமலில் இருந்தது.

பல ஆண்டுகளாகவே தலித் மக்களுக்கு உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலுக்குள் நுழைய தடை இருந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டுகளுக்கு முன்பு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆலய நுழைவு போராட்டம் நடத்தியபோது இரு சமூகத்துக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை இப்போது சாதி இந்துக்கள் மீறிவிட்டதாக தலித் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு இரு பிரிவினரிடையே பிரச்சினை மீண்டும் தீவிரமடையவே, பதற்றம் அதிகரித்தது.

இதனிடையே முத்தாலம்மன் கோயிலில் கடந்த அக்டோபர் 13ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை திருவிழா நடக்க இருந்தது. இந்நிலையில் திருவிழா நடத்த ஆட்சேபம் வந்துள்ளதாகக் கூறி உசிலம்பட்டி கோட்டாட்சியர் திருவிழாவை தொடர்ந்து நடத்தக்கூடாது என்று 16 ஆம் தேதி உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உத்தபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையா. என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், உத்தபுரம் முத்தாலம்மன் கோயிலில் கடந்த அக்டோபர் 13 முதல் அக்டோபர் 23 வரை திருவிழா நடக்க இருந்தது. இந்நிலையில் திருவிழா நடத்த ஆட்சேபம் வந்துள்ளதாகக் கூறி உசிலம்பட்டி கோட்டாட்சியர் திருவிழாவை தொடர்ந்து நடத்தக்கூடாது என்று 16 ஆம் தேதி உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆட்சேபம் தெரிவித்தவர் குறித்த விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. எனவே இந்த உத்தரவை ரத்து செய்து போலீஸ் பாதுகாப்புடன் திருவிழா நடத்த அனுமதி அளிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், உசிலம்பட்டி கோட்டாட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கோவில் திருவிழா பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றம் உருவாகியுள்ளது. மோதலுக்குக் காரணம் தலித் சமூக மக்கள் நேற்று முத்தாலம்மனை கரகம் எடுத்து அரசமரத்தை வழிபட்டு முளைப்பாறி எடுத்தனர். அரசமரத்தில் இரண்டு மாலைகளை அணிவித்து இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாலைகளை அறுத்து தரையில் வீசினர். இதற்கு தலித் சமுதாய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் உருவானது. இரு சமூக மக்களிடையே வாக்குவாதம் ஏற்படவே போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கோவில் திருவிழா நடத்த சுமூக பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீண்டும் தடுப்பது ஏன் என்று மற்றொரு பிரிவினர் கேள்வி எழுப்பினர். இதனிடையே போலீஸ் பாதுகாப்புடன் முத்தாரம்மன் கரகம் அருகில் உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

English summary
Tension gripped Uthapuram village in Madurai district when Dalits offered puja to the Pipal tree at the Muthalamman Temple amidst objection by the Caste Hindus on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X