• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களின் சடையை மாட்டிவிட்டு வேடிக்கை பார்த்த கவியரசர்.. கண்ணதாசனின் சுவாரஸ்ய மறுபக்கம்!

|
  காவிய கவிஞர் கண்ணதாசன்

  சென்னை: கவியரசர் கண்ணதாசனின் உணர்வுபூர்வமான கவிதை மொழிக்கு என்றுமே ஈடு இணை எதுவுமில்லை. காலம் கடந்தும் கண்ணதாசன் பாடல்கள் அப்படியே உயிர்ப்புடன் இருப்பதற்கு இந்த உணர்வுபூர்வமான கவிதை மொழிதான் காரணம்.

  அதுமட்டுமல்ல.. கவிஞரின் எழுத்து வளமை, செழுமை, இனிமை, புதுமை, எளிமை, இதெல்லாம்தான் அவரை இன்றும் நினைத்து நாம் பேச காரணம். என்றாலும், இந்த கவிதை ஊற்று எங்கிருந்து சுரந்திருக்கும்? யாரால் புகட்டப்பட்டிருக்கும்? அதன் உந்துதல் யார்? ஊக்கம் யார்? பின்னணி என்ன? இதையெல்லாவற்றையுமே நமக்கு புளகாங்கிதத்தோடும், மனம் முழுதும் உவகையுமாய் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கண்ணதாசனின் மூத்த சகோதரர் ஏ.எல்.சீனிவாசனின் மருமகள் ஏ.எல்.ஜெயந்தி கண்ணப்பன்.

  "பொதுவாக ஆச்சி குடும்பங்களில் ஏதாவது ஒரு விஷேம் இருந்துகொண்டுதான் இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு, கல்யாணம் என ஏதாவது ஒரு மங்கலகரமான காரியங்கள் நடந்துக்கிட்டே இருக்கும். அதுவும் ஒருவார காலம் நடைபெறும். அப்போ எல்லாமே கூட்டு குடும்பம் முறை என்பதால் ஒவ்வொரு வீடுகளிலும் கூட்டம் வழிந்து நிறையும். இது கவிஞருடைய வீட்டில் தாராளமாவே இருந்தது. அண்ணன், தம்பி, மாமா, சித்தப்பா, அக்கா, அத்தை என உறவுகளில் பின்னிப் பிணைந்து வளர்ந்தார்.

  கூட்டுக்குடும்பம்தான் அடிப்படை

  கவிஞரின் தாயார் தாலாட்டு பாடல்களை நன்றாக பாடக்கூடியவர். கவிஞரை தூளியில் போட்டுவிட்டு அவரது அம்மா தாலாட்டு பாடல்களை பாடிக் கொண்டே இருப்பாராம். தாலாட்டு மட்டும் இல்லை, செட்டிநாட்டின் பெருமைகள், செழிப்பும், வளமும் மிக்க நிலப்பிரதேசங்கள், அப்புச்சிகளின் குணநலன்கள், அவர்கள் எப்படிப்பட்ட உழைப்பாளிகள் என்பதையெல்லாம் பாட்டிலேயே கொண்டு வந்து கண்முன் நிறுத்துவாராம். அதாவது ஒரே பாட்டில் 3 பரம்பரைகளின் சிறப்பு தென்பட்டு போகும். கூட்டுக்குடும்பம், தாயாரின் தாலாட்டுக்கள் இதெல்லாம்தான் கவிஞரின் எளிய நடை மற்றும் சிறப்பான பாடல்கள் அமைய காரணமாக அமைந்தது. என் பிள்ளை ஆயிரம் பாட்டுக்கு அடியெடுத்து கொடுப்பார் என்று கவியரசு சின்ன பிள்ளையாக இருக்கும்போதே அவரது அம்மா சொல்வாராம். வாழ்க்கையில் நடந்த சின்ன சின்னசம்பவங்கள், பார்த்தது கேட்டது, அனுபவித்தது இதைதான் மனதிலே தேக்கி தேக்கி வச்சு அதில் சரியான வார்த்தைகளை போட்டு பாட்டாக கொண்டுவந்தார்.

  சடைகளை கட்டி விளையாட்டு

  சடைகளை கட்டி விளையாட்டு

  இந்திய வரைபடத்திலேயே பிரசித்தி பெற்ற ஒரு கிராமமாக சிறுகூடல்பட்டி இருக்கிறது என்றால் அதற்கு காரணம் எங்கள் மாமா கவியரசர்தான். நான் 10 வருடங்களுக்கு முன்பு கவிஞர் வாழ்ந்த ஊருக்கு சென்றோம். அப்போது கவிஞருடன் பள்ளியில் படித்த, விளையாடிய நண்பர்கள் எல்லாம் வயது முதிர்ந்து இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களை தேடி தேடி சென்று பார்த்தேன். அவர்களிடம் ஆர்வத்துடனும் கேட்டேன், கவிஞர் சின்ன வயசுல எப்படி? உங்களுக்கு ஏதாவது நினைவிருக்கா? என்று கேட்டேன். "முத்து ரொம்ப சுட்டி. எப்பவுமே விளையாட்டுதான். பள்ளியில் படிக்கும்போது, வகுப்பில் முன்னால் உட்கார்ந்திருக்கும் இரு பெண்களின் சடைகளை அவர்களுக்கு தெரியாமல் ஒன்றாக கட்டிவிட்ருவாப்ல. பிறகு அந்த பெண்பிள்ளைகள் எழும்பும்போதோ, திரும்பும்போதோ ஒருத்தருக்கொருத்தர் முட்டிக்குவாங்க. வகுப்பே சிரித்து விழும். எல்லோருக்கும் தெரியும் இது முத்து செய்த வேலைதான்னு. முத்து எப்பவும் பசி பொறுக்க மாட்டாப்ல. மணி அடித்ததும் வீட்டுக்கு சாப்பிட மொத்தல்ல ஓடி வர்றது முத்துதான். கையை கூட கழுவாம, அவங்கம்மா தயாராக வெச்சிருக்கிற சாப்பாட்டை சாப்பிட ஆரம்பிச்சிடுவார். நாங்கள் எல்லாம் அவரை திட்டுவோம்.

  இந்த மீனை பொறிச்சு கொடு

  இந்த மீனை பொறிச்சு கொடு

  முத்துவின் குடும்பம் செல்வ செழிப்பானது. ரெட்டை மாட்டு வில் வண்டி இருந்தது, ஆடுகள், மாடுகள எல்லாம் கட்டி வளர்த்தாங்க. எங்க ஊருக்கே ஊருணியை வெட்டிக் கொடுத்த குடும்பம் அது. முத்துவோட அப்பாதான் இந்த ஊருணியை தானமாக தந்தார். அதனால ஊருணில வர்ற மீன்களை முதல்ல பிடிச்சிட்டு வந்து முத்து வீட்டுக்குதான் தருவோம். முத்துவின் வீட்டின் முன்புதான் எல்லா மீன்களையும் கூடையில் கொட்டுவோம். அதை முத்து திண்ணையில் உட்கார்ந்து ஆர்வத்துடன் பாத்துட்டு, அவங்க அம்மாகிட்ட, "அம்மா இந்த மீனை பொறிச்சு கொடு, இதை குழம்பு வச்சிடு"ன்னு சொல்வார்..னு பழைய நினைவெல்லாம் நண்பர்கள் சொல்லுவாங்க.

  2 கத்தரிக்காய் வெட்ட முடியாது

  2 கத்தரிக்காய் வெட்ட முடியாது

  அந்த வீட்டை நாங்கள் புதுப்பித்து கட்டியுள்ளோம். சிறுகூடல்பட்டியில் உள்ள அந்த வீட்டிற்கு இன்றும் நாங்கள் போய் வந்துகொண்டுதான் இருக்கோம். என்னால அந்த வீட்டில் உட்கார்ந்து 2 கத்தரிக்காய் அரிவாள் மனையில முழுசா வெட்ட முடியாது. எப்பவும் ஜனங்க அந்த வீட்டிற்கு கவிஞரை தேடி வந்துக்கிட்டே இருப்பாங்க. வீட்டை தாண்டி போறவங்க கூட, கவிஞரின் வீட்டை தொட்டு கும்பிட்டுதான் போறாங்க. காலைல பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட வீட்டை நோக்கி கும்பிட்டு விட்டுத்தான் போய்ட்டு இருக்காங்க.

  தமிழ் பிறந்து வளர்ந்த இடம்

  தமிழ் பிறந்து வளர்ந்த இடம்

  வீட்டின் முன்பக்கமே ஒரு அலுவலகம் உண்டு. அதில், கவிஞரின் பள்ளி பாட புத்தகங்கள் முதல்கொண்டு, கள்ளக்குடி போராட்டத்தில் ஜெயிலில் இருந்தபோது அவரது அப்பச்சிக்கு எழுதிய கடிதங்கள் வரை எல்லாமே அங்கு காட்சி பொருளாக வைத்துள்ளோம். அத்துடன் ஒரு நோட்டும் வைத்து, யார் யார் வருகிறார்கள், அவர்களது கருத்துக்கள் என்ன என்று பதிவு செய்ய சொல்லி உள்ளோம். அதனால் எப்ப நான் ஊருக்கு போனாலும் முதல் வேலையாக அந்த நோட்டு புத்தகத்தை எடுத்து பார்ப்பேன். எப்போவெல்லாம் அந்த நோட்டை திறக்க ஆரம்பிக்கிறேனோ அப்போவெல்லாம் கண்ணீர் விட்டு அழ ஆரம்பிச்சுடுவேன். ஏனெனில் அங்கு வர்றவங்க எல்லாருமே தமிழை நேசிப்பவர்கள்தான். கவிஞரை காதலிப்பவர்கள்தான். அதனால எழுத்தெல்லாம் மனசையே கட்டி போட்டுடும். சமீபத்தில்கூட ஒருத்தர் அந்த நோட்டில் எழுதியிருந்தார், " இது கண்ணதாசன் வீடா? இல்லையே... இது தமிழ் பிறந்து தவழ்ந்த வளர்ந்து இடம்" என்று. இன்னொரு சம்பவமும் ஞாபகம் வருது.

  நோட்டு புத்தகத்தில் பிறந்த காதல்

  நோட்டு புத்தகத்தில் பிறந்த காதல்

  இதே ஊரில் பிறந்து வளர்ந்தவர்கள் என்றாலும் அடிக்கடி வீட்டுக்கு வந்து கவிஞரை பற்றி அந்த நோட்டு புத்தகத்தில் எழுதிவைத்துவிட்டு போவார்கள். அப்படித்தான் பக்கத்து ஊரில் உள்ள ஒரு இளைஞனும் தனது கருத்துக்களை எழுத நோட்டை எடுத்தான். அப்போது அந்த நோட்டில் கவிஞரின் மேல் உள்ள பிரியம், தமிழின் மேல் உள்ள ஆர்வம், இதெல்லாம் வெளிப்படுமாறு ஒரு பெண் தன் கருத்தை பதிவு செய்துவிட்டு போயிருந்தாள். அதை பார்த்த அந்த இளைஞன் அந்த எழுத்தையும் அந்த பெண்ணையும் நேசிக்க ஆரம்பித்துவிட்டான். அவனும் பதிலுக்கு தன் கருத்துக்களை அவளுடைய கருத்துக்களுக்கு கீழே பதிவு செய்ய ஆரம்பித்தான். இப்படியே மாறி மாறி அந்த நோட்டில் எழுதி, ஒருவரையொருவர் காதலிக்க தொடங்கி கல்யாணமும் செஞ்சிக்கிட்டாங்க. அவங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு கண்ணதாசன்னும், பெண் குழந்தைக்கு கவிதான்னும் பெயர் வெச்சிருக்காங்க.

  குழந்தைகளுக்கு கவிஞரின் பெயர்

  குழந்தைகளுக்கு கவிஞரின் பெயர்

  வாழும்போது காதல் மன்னன்-னு சொன்ன கவிஞர், மறைந்தும் பல பேர் காதலுக்கும், கல்யாணத்துக்கும் காரணமாக இருந்து வருகிறார். அந்த ஊரில் பிறந்த பெண்கள் எல்லாம் சொல்லுவாங்க, "இது கவிஞர் பிறந்த ஊர். வாக்கப்பட்டு வேற எந்த ஊருக்கும் போக மாட்டோம். இதே ஊரிலேயேதான் வாக்கப்பட்டிருப்போம்-னு சொல்லி இன்னமும் அந்த ஊரில் ஏராளமான பெண்கள் உண்டு. அதுமட்டுமல்ல, ஏராளமான குழந்தைகளுக்கு கண்ணதாசன் என்றே பெயர் வைத்துள்ளனர். அவரது அரசியல் கட்டுரைகள், சினிமா கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், நாடகங்களாகட்டும் எதை எடுத்துக் கொண்டாலும் அதில் உண்மைகளும், தத்துவங்களும், இயல்பான வார்த்தைகளும், சராசரி மனிதனின் உணர்வுகள் என அத்தனை விஷயங்களையும் அழகாக கையாண்டிருப்பார்.

  மலையரசியம்மன் துணை

  மலையரசியம்மன் துணை

  "என் ஊரின் நடுவே வாசம் செய்யும் மலையரசிதான் என் நாக்கில் உட்கார்ந்து இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறாள்" என்பாராம் கவிஞர். அதனால்தான் எதை எழுத தொடங்கினாலும், மலையரசியம்மன் துணை என்று ஆரம்பித்து எழுதுவார். அதேபோல கடைசி காலம்வரை மலையரசியை அவர் கும்பிடாமல் எங்குமே சென்றது கிடையாது. ஒவ்வொரு வரியையும் ஒவ்வொரு முறை படிக்கும்போது வேறு வேறு அர்த்தம் தருவது கவிஞரின் ரகசியம். கவிஞரின் வரிகளில் மூழ்கிதான் முத்தெடுக்க வேண்டும். கருத்துக்களின் ஆழத்தில் போய்க்கொண்டே இருக்க வேண்டும். பாடல் எழுதும்போது ஒரு ஆணாக இருந்தும் யோசிப்பார். பெண்ணின் மனநிலையில் இருந்தும் யோசிப்பார். குற்றாலத்தில் கூட அருவி சீசனில்தான் கொட்டும். ஆனா கவிஞரிடம் எப்போதுமே கருத்துக்கள் கொட்டிக் கிடக்கும், அவர் நின்றால் கவிதை, நடந்தால் கவிதை, பேனாவை திறந்தால் கவிதை, எழுதினால் கவிதை. " என்று பெருமிதத்துடன் சொல்லி முடித்தார் ஜெயந்தி கண்ணப்பன்.

  English summary
  Kannadasan is a famous Tamil film songwriter and poet. More than 4,000 poems, over five thousand film songs, novels, and articles. He was the poet of the state government of Tamil Nadu. Sahitya Akademi Award winner.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X