For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெள்ளம் சூழ்ந்தால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீடுகளுக்குள் குடியேற வேண்டும்: திருமுருகன் காந்தி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: வெள்ளம் வந்து வீட்டை சுற்றி வளைத்தால் அரசியல்வாதிகள், அதிகாரிகள் வீடுகளுக்குள் குடிபெயர வேண்டியதுதான் என்று, திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

மே 17 இயக்கத்தின், திருமுருகன் காந்தி தனது பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது: சென்னையில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் வெள்ளம் எனும் நெருக்கடி 'ரியல் எஸ்டேட்' மாஃபியாக்களாலும், அதோடு பின்னிப்பிணைந்திருக்கும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளாலும் ஏற்படுத்தப்பட்டதே.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களையும் பிரித்து பார்க்க முடியாதவாறு இவை அனைத்தும் பருவமழையினை வாங்கி , தேக்கி, வடிகாலாக செயல்படும் அற்புத நிலப்பரப்புகள். 1980ல் கிட்டதட்ட 3600 நீர்நிலைகள் இந்த மூன்று நிலப்பரப்பிலும் இருந்தன. தற்போது அதில்பெருமளவு இல்லாத அளவு சுருக்கப்பட்டன.

இந்த நீர்நிலைகளின் மொத்த கொள்ளளவு கிட்டதட்ட 40 டி.எம்.சி ஆகும். அதாவது சென்னையின் தண்ணீர் தேவையை விட அதிகம். சென்னையில் மட்டுமே 600 நீர்நிலைகள் இருந்திருக்கின்றன. தற்போது அதில் சிறுவிகிதமே எஞ்சி இருக்கிறது.

ரியல் எஸ்டேட் சந்தை

ரியல் எஸ்டேட் சந்தை

அரசின் நீர்வள ஆய்வின் படி சென்னையின் 19 ஏரிகளின் மொத்த அளவாக 1980வருடத்தில் 1130 ஹெக்டராக இருந்த நிலப்பரப்பு 645 ஹெக்டேராக 2000ம் வருடத்தில் குறைந்திருந்தது. அதாவது ரியல் எஸ்டேட் சந்தை உச்சத்திற்கு செல்வதற்கு முன்பு இந்த நிலை எனில் தற்போது இதில் எவ்வளவு நிலப்பரப்பு எஞ்சி இருக்கும் என்பதை யூகித்துவிடலாம்.

மூன்றில் ஒருபங்கு தூரம்

மூன்றில் ஒருபங்கு தூரம்

இந்த நிலப்பரப்பு குறைந்திருக்கிறது எனில் நீர் பிடிப்பும் அதன் கொள்ளளவும் வெகுவாக குறைந்திருக்கிறது . 1980இல் சென்னையின் மக்கள் தொகை கிட்டதட்ட 40 லட்சத்திற்கும் குறைவாக இருந்த நிலையில் இருந்து தற்போது இருமடங்காக அதிகரித்திருக்கிறது. மேலும் சென்னை போன்ற பருவநிலை தாக்குதலுக்குள்ளாகும் கடற்கரை நகருக்கு தேவையான வெள்ளநீர் வடிகால் கால்வாயின் அளவு கிட்டதட்ட 2847 கி.மீ ஆகும். இதை பேரிடர் மேலாண்மை குழு 2011இல் தெரிவித்திருந்தது. ஆனால் சென்னையின் வெள்ளநீர் வடிகால் வாய்க்காலின் மொத்த அளவு வெறும் 856கி.மீ அளவே. அதாவது மூன்றில் ஒருபங்கு அளவிற்கே இது கட்டப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கரணை நிலை

பள்ளிக்கரணை நிலை

சென்னையின் வெள்ளநீரை வடிய வைக்கும் மிகப்பெரும் வடிகாலான பள்ளிக்கரணை சதுப்பு நிலம் குப்பை மேடாகவும், ரியல் எஸ்டேட்டுகளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. பள்ளிக்கரணையின் மொத்த அளவு 250 சதுர கி.மீ.... ஆம்! 250 சதுர கிலோமீட்டர். ஆனால் தற்போது 50 சதுர கி.மீ கூட விட்டு வைக்கப்படவில்லை. இந்த நிலமும் குப்பைகளால் குவிக்கப்பட்டு மாசுபடுத்தப்பட்டிருக்கிறது.

வெள்ள நீரை வடிய வைக்க திட்டம்

வெள்ள நீரை வடிய வைக்க திட்டம்

இந்த புள்ளி விவரங்கள் நமக்கு சொல்லும் தகவல் மிக மிக முக்கியமானது.
1. நீர் பிடிப்பு , நீர் வடிகால், நீர் தேக்கிவைக்கும் நிலப்பரப்புகள் பாதிக்கும் குறைவாக குறைக்கப்பட்டிருக்கிறது.
2. அதிகப்படியாக உருவாக்கப்பட்ட நகரக் கட்டமைப்பில் இந்த நீர்நிலைகளின் குறைவால் தேங்கும் வெள்ளநீரை வடிய வைக்கும் திட்டங்கள் எதுவும் இன்று வரை உருவாக்கப்படவில்லை.
3. மழைநீரை தேக்கி வைக்கும் முறை அழிக்கப்பட்டதால் கோடைகாலத்திற்கு தேவையான நீர் இல்லாமல் செயற்கையாக பற்றாக்குறை உருவாக்கப்பட்டிருக்கிறது.
4. மக்கள் தொகை அதிகரித்திருக்கிறது, கட்டிடங்கள் அதிகரித்திருக்கிறது, நீர் தேக்கம்-வடிகால்-நீர்பிடிப்பு பகுதிகள் கடுமையாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இவையனைத்திற்கும் காரணமாக ‘ரியல் எஸ்டேட் வணிகம்' ‘ ‘பெரிய நிறுவனங்களுக்கான கட்டமைப்புகள்' ஆகியன இருப்பதை மறைத்தே நமக்கு செய்திகள் சொல்லப்படுகின்றன.

செம்பரம்பாக்கம் வில்லன்

செம்பரம்பாக்கம் வில்லன்

இதை விவாதமாக்காமல் தவிர்க்கவே கடந்த 2015இல் செம்பரம்பாக்கம் ஏரியை வில்லனாக சித்தரித்தார்கள். செம்பரம்பாக்கம் ஏரியை விட மிக அதிக அளவிலான தண்ணீர் வெளியேற்றிய கூவம், கோசஸ்தலை ஆறுகள் அடையாறு ஆறு(செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேற்றத்தால்) உருவாக்கிய எந்த அழிவையும் உருவாக்கவில்லை. செம்பரம்பாக்கம் ஏரி நீரை தாங்க இயலாமல் நீர் வெள்ளமாக அழிவை கொண்டு வந்ததற்கு ஆக்கிரமிப்புகள் என்று குடிசைகளை அப்புறப்படுத்தினார்கள். சைதை குடிசைப்பகுதிகள் அப்புறப்படுத்தபட்டன. ஆனால் செம்பரம்பாக்கத்தின் உபரி நீர் வெளியேறாமல் போனதில் அடையாற்றின் கழிமுகத்தில் கட்டப்பட்டிருக்கும் 5 நட்சத்திர ஓட்டல்களும், கார்ப்பரேட் நிறுவனங்களுமே மிக முக்கிய காராணம்.

லாபச்சுரங்கம்

லாபச்சுரங்கம்

கழிமுகத்தில் இக்கட்டிடங்கள் கட்டப்படுவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் இந்நிலப்பரப்பினை பெரும் ரியல் எஸ்டேட் லாபச்சுரங்கமாக மாற்றியது ரியல் எஸ்டேட் நிறுவனங்களும், ஹோட்டலும். இதற்கான அனுமதியை 1996இல் வழங்கியது சி.எம்.டி.ஏ எனப்படும் சென்னை பெருநகர வளர்ச்சிக் கழகம். இதை மறைக்கவே செம்பரம்பாக்கம் ஏரியை வில்லனாக மாற்றினார்கள். 2015க்கு பிறகு இன்றும் கூட மிகப்பெரும் கட்டிடங்கள் அக்கழிமுகப்பகுதியில் கட்டப்படுகின்றன. ஆனால் 225,000 குடிசைப்பகுதி மக்கள் சென்னையின் ஆற்றங்கரையிலிருந்து அகற்றப்பட்டு குப்பையைப் போல சென்னைக்கு வெளியே 25 கி,மீ தொலைவில் கொட்டப்பட இருக்கிறார்கள் .

குறைதான் சொல்வார்கள்


இந்த அழிவுகள் கடந்த 30 வருட ஆட்சிகளில் உருவானவை. இவர்கள் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி குறை சொல்வார்களே ஒழிய, அடிப்படை பிரச்சனைகளை தீர்க்கப் போவதில்லை. இந்த சமயத்தில் நாம் அவசர கவனத்தில் எடுக்க வேண்டியது, வெளியேற்றப்பட இருக்கிற 225,000 அப்பாவி குடிசைவாசிகளை.
இப்பிரச்சனையை இதோடு கடந்து செல்வதால் நாம் இனிவரும் காலங்களில் பருவமழையில் இருந்து தப்பிவிட முடியாது. பிரச்சனையின் அடிப்படைகளை ஆய்வு செய்வோம், ஆக்கிரமிப்பு என்பது நம் அரசு நம் வாழ்வின் மீது உருவாக்கிய ஒரு வன்முறை. அதை நீக்காமல் இந்த அழிவுகளில் இருந்து நாம் தப்பிக்க இயலாது.

ஆக்கிரமிப்போம்

ஆக்கிரமிப்போம்


மழை என்பது நமக்கான கொடை. அதை பாதுகாக்க வழியில்லாமல் பேரழிவாக மாற்றிய கும்பல்களை எதிர்கொள்ள உறுதி கொள்வோம்.
வெள்ளம், மழை, வரட்சி, தண்ணீர் பற்றாக்குறை என அனைத்து அழிவும் அவர்களுக்கான வருமானங்களே ஒழிய, நமது துன்பங்கள் அவர்களுக்கு வருத்தத்தை கொடுப்பதில்லை. இப்போது சொல்லுங்கள், இந்த அரசியல்வாதி-அதிகாரிகளின் வீடுகளையும்-கட்டிடங்களையும் வெள்ளம் வந்தால் நாம் நம் குடும்பத்தோடு சென்று குடியேறுவது நியாயம் தானே....நம்மை ரொட்டிக்கும், நிவாரணப்பணத்திற்கும் அலைய வைப்பவர்களின் வீடுகளை நாம் ஆக்கிரமிப்போம். இவ்வாறு திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

English summary
Thirumurugan Gandhi slam government and officials for Chennai encroachments.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X