For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஷ்ணுபிரியாவின் மரணத்தில் சந்தேகம் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்: யுவராஜை கைது செய்ய வலியுறுத்தல்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுப்பிரியாவின் மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. தற்கொலைக்கு தூண்டப்பட்டார், உயரதிகாரிகளால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இது கொலையாக இருக்க வாய்ப்பு உள்ளது என்று சந்தேகம் எழுப்பியுள்ளனர் சமூக ஆர்வலர்கள். விஷ்ணு பிரியாவின் மரணத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

தேடப்பட்டு வரும் குற்றவாளியான யுவராஜ் ஒவ்வொரு வாரமும் புதிய புதிய ஆடியோக்களையும், வீடியோக்களையும் ஊடகங்களுக்கு அனுப்பி பரபரப்பை எற்படுத்தி வருகிறார். தமிழகக் காவல்துறையோ வெறுமனே வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறது.

கடந்த 18ம் தேதி பிற்பகல் வரை வேலை தனது பணியை சிறப்பாக செய்து விட்டு அறைக்கு ஓய்வு எடுக்கப் போன விஷ்ணு பிரியா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது அதிர்ச்சியளிக்கக் கூடிய தகவல்தான்.

ஏனெனில் தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கினை விசாரணை செய்து வந்தவர் டிஎஸ்பி விஷ்ணு பிரியா. இந்த கொலை வழக்கில் உயரதிகாரிகள் சிலரால் விஷ்ணு பிரியாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கோகுல்ராஜ் கொலை வழக்கில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள யுவராஜ் மூலமாகவும் விஷ்ணு பிரியாவிற்கு மிரட்டல் வந்துள்ளது.

தோழியின் மரணத்தைக் கேள்விப்பட்ட உடன் சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை டிஎஸ்பி மகேஸ்வரி, உயர் அதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டினார். பெற்றோர்களும் சந்தேகம் எழுப்பவே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது.

விஷ்ணுபிரியாவிடம் அடிக்கடி செல்போனில் பேசியவர்கள், விஷ்ணுபிரியாவின் தோழிகள் மற்றும் போலீசார் சிலரிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. காதல் பிரச்சினையில் விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார் என்று கதைகட்டப்பட்டது. அதற்கேற்றார் போல உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கறிஞர் மாளவியா, திருக்கோஷ்டியூர் கோவில் அர்ச்சகர் விஜயராகவன் ஆகியோருக்கு சம்மம் அனுப்பி 10 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது சிபிசிஐடி போலீஸ்.

தற்கொலையா? கொலையா?

தற்கொலையா? கொலையா?

இதனிடையே விஷ்ணுபிரியாவின் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அவரது கன்னத்தில் காயம் வந்தது எப்படி என்று கேள்வி எழுப்பினார் அவரது தந்தை. தற்கொலை செய்வதற்கு முன்பாக எழுதப்பட்ட கடிதத்தின் சில பக்கங்களை மறைத்து விட்டார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மறைக்கப்பட்ட ஆவணங்கள்

மறைக்கப்பட்ட ஆவணங்கள்

விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்ட அவருடைய வீட்டில் இருந்து செல்போன், டேப்லெட், கேமரா, கடிதங்கள் என அத்தனை ஆவணங்களையும் எஸ்.பி செந்தில்குமார்தான் கைப்பற்றி தன் வசம் வைத்துகொண்டார். விஷ்ணுப்ரியாவின் கடிதத்தில் ஏழு பக்கங்களை முதல்நாள் வெளியிட்டார்கள். அவற்றில் பக்க எண்கள் இருந்தன. ஆனால், அதேநாளில் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகின. அவற்றில், பக்க எண்கள் இல்லை. ‘எஸ்.பி சம்பந்தப்பட்ட பக்கங்கள் மறைக்கப்பட்டுவிட்டன' என்று கூறப்படுகிறது.

வீடியோ ஆதாரம்

வீடியோ ஆதாரம்

இந்தச் சூழ்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரண்டு பக்க கடிதங்களை தற்போது வெளியிட்டிருக்கிறார்கள். 15-7-15 தேதியிட்ட அந்தக் கடிதத்தில், ‘என்னுடைய சூசைட் நோட் வீடியோ டேப்ல இருக்கு. எடுத்துப் பாருங்க' என்று இருக்கிறது. விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டது 18-9-2015. இரண்டு மாதங்களுக்கு முன்பே தற்கொலை கடிதம் எழுதி வைத்திருந்தாரா? அப்படியென்றால் அந்த வீடியோ 15-7-15 அன்றைக்கே எடுக்கப்பட்ட வீடியோவா? இது விஷ்ணுப்ரியாவின் கையெழுத்தா என்பதே சந்தேகமாக இருக்கிறது என்பதும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.

மகேஸ்வரி - கீதாஞ்சலி

மகேஸ்வரி - கீதாஞ்சலி

கடந்த 1ம் தேதி டிஎஸ்பி மகேஸ்வரி 9 மணிநேர விசாரணை முடித்து வெளியே வரும்போது வாடிய முகத்தோடு வந்தார். பத்திரிகையாளர்கள் மைக்கை நீட்ட, ‘விசாரணைக்காக வரச்சொல்லியிருந்தார்கள். எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் மீண்டும் வருவேன்' என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பிவிட்டார். இதேபோல விஷ்ணு பிரியா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த டிஎஸ்பி கீதாஞ்சலியிடமும் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

சந்தேகத்திற்கு காரணம்

சந்தேகத்திற்கு காரணம்

விஷ்ணுபிரியாவை தற்கொலைக்குத் தூண்டியது யார் என்றுதான் சந்தேகம் வந்தது. இப்போது கொலையாக இருக்க வாய்ப்புள்ளது என்று சொல்ல ஆரம்பித்துள்ளனர். விஷ்ணுப்ரியாவின் மாமாவான ஆனந்தனோ, விஷ்ணுபிரியா துப்பட்டாவில் தூக்கு போட்டுக்கொள்ளும் அளவிற்கு அந்த அறையில் வசதிகள் இல்லை. ஜன்னலில் கொசுவலை அடித்து வைக்கப்பட்டிருக்கிறது; அதில் கால் வைத்து ஏற வாய்ப்பே இல்லை. அவருக்கென தனி ஏ.சி அறை இருக்கும்போது, அந்த அறையில் போய்த் தொங்கியிருக்கிறார். அதையும் நம்பமுடியவில்லை என்று கூறியுள்ளாராம்.

எஸ்.சி.–எஸ்.டி. பிரிவு ஆணையர் விசாரணை

எஸ்.சி.–எஸ்.டி. பிரிவு ஆணையர் விசாரணை

இந்நிலையில் தேசிய ஆதிதிராவிடர் ஆணையத்தின் மண்டல இயக்குனர் (பொறுப்பு) ராமசாமி, விசாரணை அதிகாரி லிஸ்டர் ஆகியோர் நேற்று கடலூரில் உள்ள விஷ்ணுபிரியாவின் வீட்டுக்கு வந்து அவரது படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். விஷ்ணுபிரியாவின் தற்கொலை குறித்து அவரது பெற்றோர், தங்கை மற்றும் சித்தப்பா ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். விஷ்ணுபிரியா வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டாரா? என்று விசாரித்துள்ளனர். ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாகவும் விசாரணை நடத்தி உள்ளனர்.

சமூக ஆர்வலர்களின் சந்தேகம்

சமூக ஆர்வலர்களின் சந்தேகம்

இதனிடையே விஷ்ணுபிரியாவின் மரணம் குறித்து மாநில சிவில் உரிமைகளுக்கான தலைவர் பேராசிரியர் சரஸ்வதி சந்தேகம் எழுப்பியுள்ளார். காவல் துறையைச் சார்ந்த ஒரு பெண் உயர் அதிகாரி கொல்லப்பட்டுள்ளார். ஆனால் காவல்துறை கை கட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எதனால்?. காவல் துறையில் மறைந்துள்ள சாதி அரசியலை விஷ்ணுப்பிரியாவின் மரணம் வெளிக்கொண்டு வந்துள்ளதா? என்று கேட்டுள்ளார்.

மகளிர் ஆணையத்துக்கு கோரிக்கை

மகளிர் ஆணையத்துக்கு கோரிக்கை

அது மட்டுமில்லாமல் விஷ்ணுப்பிரியாவின் அறையை உடைப்பதற்கு முன்கூட்டியே எப்படி அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார் என்பது அதிகாரிகளுக்குத் தெரியும்? மேலும் பதினைந்து பக்கம் கடிதம் எழுதி வைத்துள்ளதாக காவல் துறையால் சொல்லப்பட்டதில் ஒன்பது பக்கம் மட்டுமே கிடைத்துள்ளது. இது விஷ்ணுப்பிரியாவின் மரணத்தின் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி எஸ்.சி/எஸ்.டி ஆணையத்துக்கும் தேசிய மகளிர் ஆணையத்துக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

துடிப்பான அதிகாரியான விஷ்ணுப்பிரியாவின் மர்ம மரணத்தில் பல சந்தேகங்கள் நிலவுவதாலும் சாதி, அதிகார அரசியல் பின்னணியில் உள்ள பலரது பெயர்கள் இவ்வழக்கில் தொடர்புபடுத்தப்படுவதாலும் முதன்மையாக, விஷ்ணுப்பிரியாவின் தற்கொலை வழக்கை சந்தேகத்திற்கிடமான மரணம் என மாற்ற வேண்டும். சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். மக்களுக்குத் தவறான தகவலைப் பரப்பும் யுவராஜை விரைந்து கைதுசெய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

உயர்நிலைக்குழு

உயர்நிலைக்குழு

மனித உரிமைகள் மற்றும் பெண்கள் அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகளைக் கொண்ட ஓர் உயர் நிலைக் குழு மாநில அளவில் அமைக்கப்பட்டு சாதிய மற்றும் பெண்கள் மீதான வன்முறை வழக்குகள் பற்றிய விவரங்கள் காவல்துறையால் சமர்ப்பிக்கப்படவேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடத்தப்படவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

விடை கிடைப்பது எப்போது

விடை கிடைப்பது எப்போது

தலித் இளைஞர் இளவரசன் மரணத்திற்கான விடையே கிடைத்தபாடில்லை. அதேபோல தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலைக்கான விடையும் தெரிந்த பாடில்லை. அந்த கொலை வழக்கை விசாரித்த தலித் சமூகத்தைச் சேர்ந்த பெண் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவின் மரணமும் சந்தேகத்திற்கு இடமானதாக இருக்கிறது. இந்த மரணங்களுக்கான விடைகள் எப்போது கிடைக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாகும்.

English summary
Scores of women from various associations assembled here on Monday seeking intervention by the SC/ST Commission and National Commission for Women (NCW) to amend the DSP Vishnupriya suicide case into one of ‘unnatural death’ and direct inquiry into it.Activist V Geetha demanded immediate arrest of Yuvaraj. Advocate I Ilangovan said Vishnupriya was accused of being ‘casteist’ by her superiors for registering cases related to caste violence under SC and ST (Prevention of Atrocities) Act, which itself is a violation of the Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X