இளையராஜாவின் பாடல்களை எந்த அளவுக்கு முறைப்படுத்தினாலும் நன்றே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-கவிஞர் மகுடேஸ்வரன்

திரைப்படங்கள் மீண்டும் மீண்டும் காணத்தக்கவை என்ற நிலையிலிருந்தன. அந்நிலைமை தற்காலத்தில் முழுமையாய் ஒழிந்துவிட்டது.

கறுப்பு வெள்ளைப் படங்கள் வெளியான காலத்தில் ஒரு திரைப்படம் என்பது அதன் முதலாளிக்கு அவருடைய வாழ்நாள் முழுமைக்கும் தொடர்ச்சியான வருமானம் அளிக்கும் முதலீடாக இருந்தது. அவருடைய காலத்திற்குப் பிறகும் அம்முதலாளியின் வழித்தோன்றல்களுக்கும் அது வரத்துச் சுரங்கம்தான்.

To save Ilaiyaraaja songs, we must pay royalty - Poet Magudeswaran

முன்பெல்லாம், நகரங்களில் உள்ள திரையரங்குகளில் புதிய படங்கள் வெளியானவை போக, இரண்டாம் நிலை நகரங்களிலும் கீற்றுக் கொட்டகைகளிலும் பழைய திரைப்படங்களே திரையிடப்பட்டன. அதிலும் முன்னணி நடிகர்களைக்கொண்டு ஒரு திரைப்படத்தை எடுத்துவிட்டால் அதன்வழியாக வற்றாத வருமானத்தைப் பார்க்கலாம்.

எம்ஜிஆர், சிவாஜி போன்றவர்களை வைத்து ஒருவர் ஒரு படம் எடுத்துவிட்டால் போதும், அந்தப் படத்தை அடுத்த இருபதாண்டுகளுக்குத் திரையிட்டபடியே இருக்கலாம். அப்படம் வெற்றிபெற்றுவிட்டால் எப்போதும் காணத் தகுந்த ஒன்றாக மாறிவிடும்.

எப்போதோ வெளியான எம்ஜிஆர், சிவாஜி படங்கள் தமிழகத்தின் ஏதோ ஒரு சிற்றூரில் வெள்ளித் திரையில் மின்னியவாறே இருந்தன. இப்போது அந்நிலைமை அறவே ஒழிக்கப்பட்டுவிட்டது. ஒரு திரைப்படம் ஒருமுறை வெளியாகி ஓரிரு வாரங்கள் ஓடியபின் முடங்கிக்கொள்கிறது.

கட்டண விலையேற்றத்தால் பெண்கள் அரங்குகளுக்கு வருவதை நிறுத்திக் கொண்டனர். அவ்விடத்தைத் தொலைக்காட்சித் தொடர்கள் பிடித்துக்கொண்டன.

ஒரு திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமை விற்கப்பட்டவுடன் அப்படம் சிலமுறைகள் ஒளிபரப்பப்படுகிறது. அத்தோடு அதன் கதை முடிகிறது. பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான எந்தத் திரைப்படத்தையும் காணும் ஆர்வம் மக்களுக்கு இல்லை. தில்லான மோகனாம்பாள், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது வேறு.

அத்தகைய பொற்படங்களைத் தவிர தொண்ணூறு விழுக்காட்டுப் படங்களுக்கு வேறு போக்கிடம் இல்லை. அவற்றைத் தரவிறக்கியோ இணையத்தில் தேடிப்பிடித்தோ குறுந்தகடு வாங்கி வைத்தோ இன்னும் பார்ப்பவர்கள் தெய்வப் பிறவிகள், அவர்களை விட்டுவிடுவோம்.

இனி நேரடியாக, நான் சொல்ல வந்த பொருளுக்கு வருகிறேன். கடந்த நாற்பதாண்டுகளில் வெளியான ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் இப்போது நமக்குத் தேவைப்படுபவை எவை ? இன்றும் நம் சுவைப்புக்கு உகந்தவை எவை ? காலத்தின் நிறமங்கலுக்கு ஆட்படாமல் இன்றும் நிலைத்திருப்பவை எவை ? படம் பாடாவதியாகவே இருந்தாலும் அதிலிருந்து தேறியது என்ன ?

ஒன்றேயொன்றைத்தைத்தான் கூற முடியும். அப்படத்தின் பாடல்கள். நம் விதியைச் சற்றே தளர்த்தி இன்னொன்றையும் சேர்க்க வேண்டும் என்றால் 'நகைச்சுவைக் காட்சிகளைச்' சொல்லலாம்.

ஒரு படத்தின் பிற கூறுகள் காலத்தால் பழையதாகி நைந்து போய்விட்டன. அவை முற்றாக வழக்கொழிந்து விட்டன. அவற்றின் மூலப்பதிவுகள்கூட இன்றில்லை. இன்று ஒரு காட்சிச் சட்டகம் நமக்கு வியப்பைத் தராது. அதைவிடவும் அருமையான காட்சிப்படுத்தல்களைத் தற்காலத்தினர் பார்க்கின்றனர். பழைய படங்களின் கதைத் தன்மைகளும் வேறாக இருக்கின்றன.

மாருதி எண்ணூறு வைத்திருப்பவர்தான் அப்படங்களில் செல்வந்தர்களாகக் காட்டப்பட்டனர். தொலைபேசிகள் வியன் பொருள்களாய்ப் படங்களில் வருகின்றன. "என்ன சொல்லி நான் எழுத... என் மன்னவனின் மனங்குளிர..." என்று ஒருத்தி கடிதம் எழுதுவாள். இச்சூழல்கள் பலவும் இன்றைய நிலைமைகளுக்குப் பொருந்தாதவை. அவற்றை நிகழ்காலத்தினர் தமக்கு அந்நியமாய் உணர்கின்றனர். இன்று அவர்கள் கைப்பேசியும் இணையமுமாய் அனைத்தையும் பெறுகின்றனர்.

சிந்தித்துப் பார்த்தால், கடந்த நாற்பதாண்டு காலத் திரைப்படங்களால் விளைந்த அரும்பொருள்களில் தலையாயவை "இளையராஜா பாடல்களே." தொழில்நுட்பப் புரட்சியில் பின்தங்காமல், காலவெள்ளத்தில் கரையாமல், தேடிச் சுவைப்போரை இழக்காமல், இன்றைக்கும் ஒவ்வொருவரின் செவிக்கும் உணர்வுகளுக்கும் இன்பம் தரக்கூடிய தகுதிகளோடு எஞ்சியிருப்பவை 'இளையராஜாவின் பாடல்கள்'தாம்.

பேருந்துகள், தானிகள், மகிழுந்துகள், பண்பலைகள், தொலைக்காட்சிகள் என எங்கெங்கும் பாடல்கள் வேண்டும். பயணங்களுக்கும் தனித்திருப்பதற்கும் பாடல்களே துணை. இத்தேவைகளை இன்றுவரை தனியொருவராய் இட்டு நிரப்புகிறார் இளையராஜா என்னும் மாக்கலைஞர். அதனால்தான் அவருடைய பாடல்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அவற்றை எவ்வளவுக்கு எவ்வளவு முறைப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அது நன்றே நன்றே!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Poet Magudeswaran's view in Ilaiyaraaja - SPB copyright issue.
Please Wait while comments are loading...