For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிராபிக் ராமசாமி புகார் எதிரொலி: அமைச்சர், மேயர் வைத்த விளம்பர போர்டுகள் அகற்றம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் புகாரைத் தொடர்ந்து சென்னையில் நடை பாதையை மறைத்து வைக்கப்பட்ட ப்ளக்ஸ் பேனர்களை, மேயரும், அமைச்சரும் உடனடியாக அகற்றினர்.

சென்னை உள்பட மாநகரங்களில் விளம்பர பலகைகள், கட்அவுட்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் போன்றவை வைப்பதற்கு உச்ச நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, நடைபாதைகளில் விளம்பர பலகைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஃபிளக்ஸ் போர்டுகள், விளம்பர பலகைகள் வைக்க வேண்டுமென்றால் நிகழ்ச்சிக்கு 3 நாள் முன்பு தொடங்கி, நிகழ்ச்சி முடிந்த 3 நாட்களுக்கு வைக்கப்படலாம். அதுவும் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது. இந்த விதிமுறைகளை மீறியதாக சிலர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை மாநகரில் பல இடங்களில் ஃபிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டன. அவற்றில் பெரும்பாலும் அ.தி.மு.க.வினர் வைத்திருந்தனர். மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபாதைகளில் மக்கள் நடக்க முடியாத அளவுக்கு பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து, சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து, விளம்பர பலகைகள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினார். இந்த மனு தலைமை நீதிபதி ஆர்.கே.அகர்வால், நீதிபதி சத்தியநாராயணன் அடங்கிய முதல் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே இதே போல் நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து இந்த மனுவையும் அடுத்த வாரம் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, பேசிய டிராபிக் ராமசாமி , "டிஜிட்டல் பேனர்கள் வைப்பது குறித்த தடை சட்டம் ஏற்கனவே உள்ளது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஓராண்டு சிறை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கலாம். தற்போது சென்னையில் காணப்படும் பேனர்கள், விளம்பர பலகைககள் குறித்து 5 காவல் நிலையங்களில் புகார் தெரிவித்திருந்தேன்.

இதில் மயிலாப்பூர் காவல்துறையினர் மட்டும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். நடைபாதையை மறைத்து பேனர் வைத்து மக்களுக்கு இடையூறு செய்ததாக கொடுத்த புகாரில் அமைச்சர் வளர்மதி, மேயர் சைதை துரைசாமி, கலைராஜன் எம்.எல்.ஏ உள்ளிட்டோரின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தேன். எனக்கு காவல்துறையினர் கொடுத்த ரசீதில்(சி.எஸ்.ஆர்) அவர்கள் பெயர் இடம் பெற்றுள்ளன. பேனர்கள் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

டிராபிக் ராமசாமியின் புகாரைத் தொடர்ந்து, காமராஜர் சாலையில் நேற்று நடைபாதையை மறைத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர போர்டுகள் இன்று உடனடியாக அகற்றப்பட்டன.

English summary
After Traffic Ramasamy lodged a complaint and filed a case against a minister and Chennai mayor, corporation workers have removed flex boards and banners from the city platforms.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X