தோட்டா தொழிற்சாலையில் துண்டு துண்டாக சிதறி பலியான 18 பேர்- வருகைப் பதிவேடு மாயமானதாக புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருச்சி: துறையூர் அருகே முருங்கப்பட்டியில் உள்ள தோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன. ஷிப்ட் 6 மணிக்குத் தொடங்கிய ஒன்றேகால் மணி நேரத்துக்குப் பிறகு காலை 7 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளது. நிலத்தடியில் இருந்த ஆலையின் 4-வது பிரிவில் வெடிவிபத்து ஏற்பட்ட போது 22 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். இதில் 18 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற 4 பேர் கதி என்னவானது என்பது மர்மமாகவே உள்ளது.

ஆலையின் மற்ற பிரிவுகளில் பணியாற்றி 300 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறினர். விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் முருங்கப்பட் டியில் குவிந்தனர். பெண்கள், முதியவர்கள் அனைவரும் வேலைக்குச் சென்ற தங்கள் உறவினரின் நிலை குறித்து தகவல் தெரியாமல் கதறி அழுதனர்.

மீட்புப் பணியில் 5 பொக்லைன் இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தோண்டத் தோண்ட சிதைந்த மற்றும் கருகிய நிலையிலான சிறு சிறு உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்தன. வெடி விபத்தில் உடல்கள் சிதறியிருக்கலாம் என்றும், இனி தோண்டுவது பயனளிக்காது என்றும் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அந்தப் பள்ளத்தில் தண்ணீர் ஊற்றப்பட்டு, மீட்புப் பணிகள் நேற்று மாலை நிறுத்தப்பட்டன.

சிதறிக்கிடந்த உடல்கள்

சிதறிக்கிடந்த உடல்கள்

வெடி விபத்து நடந்த பகுதியில் கற்களும், உடல் பாகங்களும் துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. அவர்களில் யாருடையது எந்த உடல் பாகம் என்பதை அடையாளம் கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலையில் சிதறிய உடல் பாகங்களை சேகரித்து வருகின்றனர். வெடி விபத்து வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

வெடி விபத்தில் பலியான 18 பேர் விவரம்

வெடி விபத்தில் பலியான 18 பேர் விவரம்

நாகநல்லூரைச் சேர்ந்த ர.பிரதீப்,ரா.ராஜபிரகாசம், த.கார்த்திக்,முருங்கப்பட்டியைச் சேர்ந்த நகுலேசன், வா.ரவிச்சந்திரன், சதீஷ், த.பாதர்பேட்டையைச் சேர்ந்த த.ரவீந்திரன், ஆர்.கே.சுப்பிரமணி, கொப்பம்பட்டி அ.சீனிவாசன், ப.சம்பத், டாப் செங்காட்டுப்பட்டி பெ.ஆனந்தன், வைரிச்செட்டிபாளையம் மு.கார்த்திக், வெங்கடாஜலபுரம் பெ.செல்வகுமார், செந்தாரப்பட்டி பெ.பூபதி, சேலம் மாவட்டம் கெங்கவல்லியைச் சேர்ந்த க.முருகன், சு.அசோகன், பொ.செல்வகுமார், ஜே.லாரன்ஸ் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பணியில் இருந்த மேலும் சிலரை காணவில்லை என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

வருகைப் பதிவேடு மாயம்

வருகைப் பதிவேடு மாயம்

உள்ளூர் மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் இங்கு பணியாற்றி வருகின்றனர். 8 மணி நேரம் வீதம், 3 ஷிப்டுகளாக ஆலை இயங்கி வருகிறது. ஷிப்டுக்கு சுமார் 80 தொழிலாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் என பணியாற்றி வந்துள்ளனர்.விபத்து நடந்த வெடிமருந்து ஆலையில் இருந்த வருகை பதிவேடு மாயமாகி விட்டதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

பொதுமக்கள் குற்றச்சாட்டு

பொதுமக்கள் குற்றச்சாட்டு

வருகை பதிவேட்டை பார்த்தால் எத்தனை ஊழியர்கள் பணியில் இருந்தார்கள் என தெரியும். ஆலை நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பாக அதிகாரிகளும் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தோட்டா தொழிற்சாலையை தடை செய்யுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால்தான் இந்த துயரச் சம்பவம் ஏற்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஆட்சியர் விளக்கம்

ஆட்சியர் விளக்கம்

இது தொடர்பாக விளக்கம் அளித்த ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் கேட்டபோது, வெடி மருந்து நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மருந்து கழிவுகளால் நிலத்தடி நீர் கெட்டுவிட்டதாகவே மக்கள் மனு அளித்திருந்தனர். இது தொடர்பாக துறை ரீதியான ஆய்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. வெடி மருந்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் இயங்க வாய்ப்பு குறைவு. மத்திய அரசின் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் கீழ் இந்த வெடி மருந்து தயாரிப்பு நிறுவனம் வருகிறது. எனவே, வெடி மருந்துகளை இங்கிருந்து அனுப்புவதற்கான தடையின்மைச் சான்று மட்டுமே மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.

அமைச்சர்கள் ஆறுதல்

அமைச்சர்கள் ஆறுதல்

வெடி விபத்தில் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மாநில தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் நிலோ பர் கபில், சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், பிற்படுத்தப் பட்டோர்- சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

 ஆலை உரிமையாளர் தலைமறைவு

ஆலை உரிமையாளர் தலைமறைவு

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன்கள் விஜயகண்ணன், வெற்றிவேல். இவர்களில் உப்பிலியாபுரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முருங்கப்பட்டியில் விஜயகண்ணனுக்குச் சொந்தமான வெடி மருந்து ஆலையில்தான் நேற்று விபத்து நேரிட்டது. இனிடையே விஜயகண்ணன், வெற்றிவேல் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, முருங்கப்பட்டி ஆலை மேலாளர் ராஜகோபால் உட்பட ஆலை நிர்வாகிகள் சிலரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தொழிற்சாலையை மூட போராட்டம்

தொழிற்சாலையை மூட போராட்டம்

துறையூர் வெடிமருந்து ஆலையை மூடுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். அரசு மூடாவிட்டால் நாங்களே ஆலையை மூடுவோம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வெடிமருந்து ஆலையை இடித்து தரைமட்டமாக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
As many as 18 workers died in a blast at an explosive factory near Thuraiyur in Trichy district of Tamil Nadu on Thursday morning.
Please Wait while comments are loading...