For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெரியாறு அணை விவகாரம்: கேரள நிறுவனங்கள், அதிகாரிகள் வீடுகள் முற்றுகை- வேல்முருகன் எச்சரிக்கை!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய கேரளாவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கேரளாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் உள்ள கேரளா முதலாளிகளின் வணிக நிறுவனங்கள், உயர் அதிகாரிகளின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்றும் வேல்முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் மழை அளவை குறிக்கவும் அணையின் நீர்வரத்தை ஆராயவும் செய்ய தமிழக பொதுப்பணித்துறையின் அதிகாரிகளை கேரளா வனத்துறையினர் ஒன்று திரண்டு தடுத்து மிரட்டி அனுப்பியுள்ளனர்.

Velmurugan

கேரள வனத் துறை பகுதியான முல்லைக்கொடி, வனக்காவலை, தாண்டிக்குடி ஆகிய இடங்களில் மழை மானி பொருத்தப்பட்டுள்ளது.

இங்கு வியாழக்கிழமையன்று ஒவ்வொருவாரமும் தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் நேரில் சென்று மழை அளவு, அணையின் நீர்வரத்து ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்வது வழக்கம்தான்.

இதற்காக தமிழக அதிகாரிகள் முல்லைக்கொடிக்கு சென்ற போது கேரளா அதிகாரிகள் அவதூறாக பேசி அனுமதி மறுத்துள்ளனர். கேரளா அரசின் தலைமைச் செயலர் கொடுத்த அனுமதி கடிதத்தைக் காட்டியும் கூட கேரளா அதிகாரிகள், தமிழக அதிகாரிகளை தடுத்துள்ளனர்.

தமிழக அதிகாரிகளைத் தாக்க முயற்சி

இதனால் படகில் தேக்கடிக்கு திரும்பிய தமிழக அதிகாரிகளை மற்றொரு படகில் விரட்டி வந்து கேரளா அதிகாரிகள் தாக்கவும் முயற்சித்துள்ளனர். அத்துடன் மீண்டும் வந்தால் கைது செய்வோம் என்று கேரளா அதிகாரிகள் எச்சரித்தும் உள்ளனர்.

அண்டை மாநில அதிகாரிகளின் கடமையை செய்ய விடாமல் தனது அதிகாரிகளை தூண்டிவிட்டு இப்படி அடாவடித்தனத்தில் கேரளா அரசு ஈடுபடுவது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

கேரளாவும் இந்தியாவின் ஒரு மாநிலம்தான் என்பதை அங்குள்ள அரசு உணர வேண்டும். தமிழகத்தின் ஆற்று நீர் மற்றும் நில எல்லை உரிமைகளைப் பறித்து தமிழகத்துக்கு எதிராக இதுநாள் வரை அப்பாவி பொதுமக்களை தூண்டிவிட்டு வந்தது கேரளா அரசு.

இப்போது கேரளா அதிகாரிகளே களத்துக்கு வந்து தமிழக அதிகாரிகளை கைது செய்வோம் என்று மிரட்டியிருப்பது தமிழர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

முற்றுகையிடுவோம்

கேரளாவின் இந்த அத்துமீறலுக்கு தக்க பாடம் புகட்டும் வகையில் தமிழகத்தில் உள்ள கேரளாவைச் சேர்ந்த பெருமுதலாளிகளின் நிறுவனங்களை அரசியல் கட்சிகள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் மற்றும் மனித உரிமை இயக்கங்களை ஒன்றுதிரட்டி முற்றுகையிடுவோம்!

தமிழகத்தின் நதிநீர் உரிமையை மதித்து தமிழக அதிகாரிகளை கடமை செய்ய விடாமல் தடுக்கும் கேரளாவே!

தமிழகத்தில் உள்ள கேரளா மாநில உயர் அதிகாரிகளின் வீடுகளை முற்றுகையிடுவோம் என்று எச்சரிக்கிறோம்!

இந்திய ஒற்றுமையை சீர்குலைக்கும் கேரளா

கேரளா அரசின் இந்த சட்டாம்பிள்ளைத் தனத்தை மத்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும்!

இத்தகைய அட்டூழிய நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்கவே கேரளா அரசு முயற்சிக்க முற்படுகிறது என்பதை மத்திய அரசு சுட்டிக்காட்டுகிறோம்.

எனவே கேரளாவின் இந்த போக்கை உடனே மத்திய அரசு தடுத்து நிறுத்தி தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் தங்களது வழக்கமான கடமையை செய்வதற்கான சூழ்நிலையை உடனடியாக ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
TVK founder T Velmurugan has warned Kerala for its attack on TN PWDofficials in Mullai Periyar Dam area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X