For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சன் பாத்' எடுத்த வெளிநாட்டு பெண்களை படம் பிடித்த குட்டி விமானம்: வாலிபர் கைது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை நட்சத்திர ஓட்டல் மாடியின் நீச்சல் குளத்தில் சூரியக்குளியல் நடத்திய வெளிநாட்டு பெண்களை படம் பிடித்த சிறிய ரக விமானம் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விமானத்தை பறக்க விட்ட வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியா மீது தாக்குதல் நடத்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் சதித் திட்டமிட்டுள்ளன. விமானத்தை கடத்தி தாக்குதல் நடத்தலாம் என்று மத்திய உளவுத்துறை மாநில உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் அனுப்பியது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை பட்டினப்பாக்கம் எம்ஆர்சி நகரில் ஒரு அடி உயரம் கொண்ட குட்டி விமானம் ஒன்று வட்டமடித்து பறந்து புகைப்படம் மற்றும் வீடியோ படம் பிடித்துக் கொண்டு இருந்தது. இதை சிலர் வேடிக்கை பார்த்தனர்.

திடீரென அந்த விமானம் அதே பகுதியில் உள்ள சோமர்செட் என்ற நட்சத்திர ஓட்டலின் 10வது மாடியில் விழுந்தது. அப்போது, அங்கு சூரிய குளியலில் ஈடுபட்டு இருந்த வெளிநாட்டு சுற்றுலா பெண் அதிர்ச்சி அடைந்தார். அது வெடித்து சிதறிவிடுமோ என்று நடுங்கினார். பயத்தின் உச்சத்துக்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலா பெண் இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து சென்று பார்த்தனர். அவர்களும் குட்டி விமானம் தீவிரவாதிகளுடையதாக இருக்குமோ என்று அஞ்சினர்.

UAV on Prowl Over High-rise Shocks Tourist on Sunbath

போலீசார் சந்தேகம்

அதை வெளிநாட்டு பயணிகள் எடுத்து ஓட்டல் பாதுகாப்பு அதிகாரி சஞ்சீவ்குமாரிடம் கொடுத்தனர். மறுநாள் காலை வரை அதை கேட்டு யாருமே வராததால் சஞ்சீவ்குமார் அதை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அந்த குட்டி கேமரா விமானத்தில் நவீன கருவிகள் இருந்ததால், உளவு பார்ப்பதற்காக அனுப்பப்பட்டதா? என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.

வெடிகுண்டு இருக்குமோ

உடனடியாக வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அதில், வெடிகுண்டு எதுவும் இல்லை என உறுதியானது. இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குட்டி விமானம் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு பாதுகாப்பாக எடுத்து செல்லப்பட்டது.

கேமரா விமானம்

தொடர்ந்து கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, கூடுதல் கமிஷனர் ஆபாஸ் குமார், இணை கமிஷனர் ஸ்ரீதர், துணை கமிஷனர் பாலகிருஷ்ணன், உதவி கமிஷனர் ரவி சேகரன் தலைமையிலான போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணையில் இறங்கினர். அப்போது, ஓட்டல் மேல் விழுந்தது நிகழ்ச்சிகளை வானில் பறந்தபடி படம் பிடிக்கக்கூடிய கேமரா பொருத்திய சாதாரண குட்டி விமானம் என்பது உறுதி செய்யப்பட்டது.

வாலிபர் கைது

தொடர்ந்து அதன் உரிமையாளர் யார் என்பது பற்றி விசாரித்தபோது சம்பந்தப்பட்ட குட்டி விமானம் அதே பகுதியை சேர்ந்த ராஜ் (29) என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து முறையான அனுமதி இன்றி ரிமோட் மூலம் இயக்கிய ராஜ் கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

பறக்கும் விமானம்

கைது செய்யப்பட்ட ராஜ் அளித்துள்ள வாக்குமூலம்: "எனது தந்தை ஜெயபால். பாதிரியாராக உள்ளார். நான் பாடல் பாடுவேன். மேலும் இசை நிகழ்ச்சிகளில் இசை கருவிகளையும் வாசிப்பேன். இன்னும் சில தினங்களில் வேளச்சேரியில் பிரமாண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இந்த நிகழ்ச்சியை வானில் இருந்து வட்டமடித்தபடி படம் மற்றும் வீடியோ பிடிப்பதற்காக பேட்டரி மூலம் இயங்கும் குட்டி விமானத்தை ரூ.85 ஆயிரத்துக்கு வாங்கினோம்.

திசை மாறிய விமானம்

நான் இதற்கு முன் ரிமோட் மூலம் இயங்கும் குட்டி விமானத்தை இயக்கியது கிடையாது. இதனால், ஆர்வக்கோளாறில் சோதனை செய்து பார்ப்போம் என்று வீட்டில் இருந்தவாறு குட்டி விமானத்தை ரிமோட் மூலம் இயக்கினேன். சிறிது நேரத்தில் எனது கட்டுப்பாட்டை மீறி விமானம் சென்று விட்டது. அது எங்கு சென்றது என்று எனக்கு தெரியவில்லை. இதுபற்றி உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தேன். இருப்பினும் அனுமதி பெறாமல் சோதித்ததற்காக போலீசார் என்னை கைது செய்து விட்டனர் என்றார்.

சிக்கியது எப்படி

இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "குட்டி கேமரா விமானத்தில் இருந்த சீரியல் எண்ணை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து வாங்கப்பட்டிருந்தது தெரிந்தது. அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, மும்பையை சேர்ந்த ‘ஆஸ்கான்' என்ற நிறுவனம் அதை வாங்கியது தெரிந்தது.
அந்த நிறுவனத்தையும் தொடர்பு கொண்டபோது, சென்னை வேளச்சேரியை சேர்ந்த ராஜ்(29) என்பவர் ரூ.85 ஆயிரத்துக்கு வாங்கியிருப்பது தெரிந்தது.

சர்ச் நிகழ்ச்சிகளை படம் பிடிக்க

அதைத் தொடர்ந்து ராஜை பிடித்து விசாரித்தோம். கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் பிற இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளை வீடியோ படம் எடுப்பதற்காக இதை வாங்கியதாக அவர் தெரிவித்தார்.

ஆனால், இது போன்ற கேமரா விமானங்களை பறக்கவிடுவதற்கு காவல் ஆணையர் அலுவலகத்திலும், விமான போக்குவரத்துத் துறையிலும் அனுமதி வாங்க வேண்டும். ஆனால், அவர் எந்த அனுமதியையும் வாங்கவில்லை. இதனால் ராஜ் கைது செய்யப்பட்டார்.

பறக்க விட தடை

பலூன்களை பறக்க விடுவதற்கு கூட காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி பெற வேண்டும். பாதுகாப்பு காரணங்களுக்காக மும்பையில் இது போன்ற கேமரா விமானங்களை பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாங் கள் தடை விதிக்கவில்லை. ஆனால், அனுமதி பெறாமல் பறக்கவிடுபவர்கள் கைது செய்யப் படுவார்கள்.

விபத்து ஏற்படும்

இந்த குட்டி கேமரா விமானம் 3 கிலோ எடையுள்ளது. இது மக்கள் மீதோ, வாகன ஓட்டிகள் மீதோ அல்லது ஏதாவது ரசாயன நிறுவனங்கள் மீதோ விழுந்திருந்தால் பெரிய விபத்துகள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காகத்தான் முன் அனுமதி பெற வேண்டும் என்று கூறுகிறோம். இதேபோல கடந்த ஆண்டு அண்ணாசாலையில் விழுந்த குட்டி விமானத்தால் பெறும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழக்கு இன்னும் நடந்து வருகிறது" என்றார் கமிஷனர் ஜார்ஜ்.

நீங்கிய பதற்றம்

தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் குட்டி விமானத்தால் நேற்று முழுவதும் பரபரப்பு நிலவியது. பின்னர் அது படம் பிடிக்க அனுப்பப்பட்ட விமானம் என்று தெரியவரவே பதற்றம் நீங்கியது.

வெளிநாட்டுப் பெண்கள் சன் பாத் எடுக்கும் இடத்தில் விழுந்ததால் பெண்கள் குளிப்பதை படம் எடுக்க முயன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே அதுகுறித்து கைதான நபரிடம் துருவிதுருவி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

English summary
A camera-fitted Unmanned Aerial Vehicle (UAV) that landed on the roof of a serviced apartment on Tuesday evening caused a flutter as the building off Greenways road was barely 3.5 km from State Police Headquarters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X