கதிராமங்கலத்தில் போலீஸ் குவிப்பு… சொந்த மக்கள் மீதே அரசு போர் தொடுப்பு.. வேல்முருகன் கண்டனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை; தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க காவல் படை குவிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒஎன்ஜிசி என்பது நடுவண் அரசின் பொதுத்துறை நிறுவனமாகும்.

அதன் பெயரிலேயே உள்ளபடி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவளி எடுக்க 2000ஆம் ஆண்டில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தது. அதிலிருந்து குழாய் வழியாக குத்தாலம் மையத்திற்கு எரிவளி வந்துசேர்கிறது.

குழாய் அமைக்கும் பணி

குழாய் அமைக்கும் பணி

இப்போது அந்த குழாய்களைச் செப்பனிடும் மராமத்துப் பணிகளை ஒஎன்ஜிசி மேற்கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. அதன்படி ஏற்கனவே உள்ள குழாய்களை அகற்றிவிட்டு புதிதாக குழாய்களைப் பதிக்கும் பணி நடைபெறுகிறது.

மக்கள் அச்சம்

மக்கள் அச்சம்

ஆனால் அது மீத்தேன் மற்றும் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கான ஆய்வுப் பணிதான் என்ற அய்யமும் அச்சமும் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதனால் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். ஆயிரக்கணக்கானோர் திரண்டு புதிதாகக் குழாய் அமைக்கும் பணிகளைத் தடுத்து நிறுத்தினர்.

ஒஎன்ஜிசி மறுப்பு

ஒஎன்ஜிசி மறுப்பு

ஒஎன்ஜிசியோ இது மீத்தேன், ஹைட்ரோகார்பன் மற்றும் ஷேல் என்கின்ற திட்டமே அல்ல என மறுத்து தன் பணியைத் தொடர்ந்தது. ஆனால் மக்களின் அய்யமும் அச்சமும் போகவில்லை. ஜூன் 1 மற்றும் 2 தேதிகளில் மீண்டும் போராட்டம் வெடித்தது. அதில் பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கைது

கைது

மீத்தேன் எதிர்ப்பு இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் த.செயராமனும் கைது செய்யப்பட்டார். அதைக் கண்டித்து மறியலில் ஈடுபட்ட தமிழ்த்தேச பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனும் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார்.

காவல் படை குவிப்பு

காவல் படை குவிப்பு

இந்த நிலையில் நூற்றுக்கணக்கான காவலர்கள் அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டனர். இது மக்களின் அய்யத்தையும் அச்சத்தையும் மேலும் அதிகப்படுத்தியது. போராடத்தைத் தொடர்ந்தனர்.

வாகனத்தில் செல்லத் தடை

வாகனத்தில் செல்லத் தடை

இதைத் தொடர்ந்து இப்போது அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அப்குதியில் நான்கு பேர் சேர்ந்து நடமாடவோ வாகனங்களில் பயணிக்கவோ அதில் பொருட்களைக் கொண்டுசெல்லவோக்கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அறிவிக்கப்படாத 144 தடை

அறிவிக்கப்படாத 144 தடை

இது அறிவிக்கப்படாத 144 தடை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அப்பகுதியிலிருந்து உடனடியாக காவல் படையினர் வெளியேற வேண்டும் என்கின்றனர். காவல் படை வெளியேறும் வரை போராட்டமும் தொடரும் என்கின்றனர்.

கண்டனம்

கண்டனம்

மக்களுக்கு ஏற்பட்டுள்ள அய்யத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டிய அரசு, அதைச் செய்யாமல் மேலும் கூடுதலான காவலர்களை அங்கு குவித்திருப்பது அம்மக்கள் மீது தொடுத்திருக்கும் போருக்கே ஒப்பாகும் என எச்சரிக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

உடனே திரும்ப பெற..

உடனே திரும்ப பெற..

அங்கு குவித்திருக்கும் காவல் படையை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்; அங்கு நடைபெறுவது "மீத்தேன் போன்ற பேரழிவுத் திட்டப்பணியோ" என்கின்ற மக்களின் அய்யத்தையும் அச்சத்தையும் போக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TVK leader Velmurugan has condemned undeclared 144 at Kathiramangalam, villagers stage protest against ONGC in Tanjore.
Please Wait while comments are loading...