For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பொங்கலுக்கு வண்டலூர் ஜூ தயார்!: எவ்ளோ கூட்டம் வந்தாலும் சமாளிப்பார்களாம்!!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: பொங்கல் கூட்ட நெரிசலை தவிர்க்க வண்டலூர் உயிரியல் பூங்காவில் 20 நுழைவுச் சீட்டு வழங்கும் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா. இது வண்டலூரில் அமைந்திருப்பதால் வண்டலூர் பூங்கா என்றே பரவலாக அறியப்படுகிறது.

1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பூங்கா வன உயிரினங்களை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் மையமாகவும் விளங்குகிறது. இங்கு சுமார் 1500 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு வகையான விலங்குகள் அவற்றுக்கான சிறப்புக்களோடு தனித்தனி அமைப்புகளாக வைக்கப்பட்டுள்ளது. விலங்குகளின் வாழ்விடங்கள் மிகவும் சுதந்திரமாக உலாவும் வகையில் விரிந்து பரந்து காணப்படுகிறது.

Vandalur zoo ready for Pongal

இங்கு தனித்தனியாக ஆமைகள் இல்லம் மற்றும் பாம்புகளுக்கான இடங்கள் உள்ளன.பல வகையான மான்கள், கரடி, ஒட்டகச் சிவிங்கி, யானைகள், வெள்ளைப் புலி, சிங்கம், குரங்குகள், ஆமைகள், முதலைகள் என ஏராளமான விலங்குகளை ஒரே இடத்தில் பார்க்க முடியும்.

வயதான மற்றும் நடக்க முடியாதவர்களும், உயிரியல் பூங்காவை சுற்றுப் பார்க்க வசதியாக பேட்டரியில் இயங்கும் ஜீப்கள், வேன்கள் சுற்றுலாத் துறையினரால் இயக்கப்படுகிறது. இதற்காக தனியாக பெரியவர்களுக்கு ரூ.20ம், சிறியவர்களுக்கு ரூ.10ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதில்லாமல், சுதந்திரமாக ஆங்காங்கு சென்று நிதானமாக பார்த்து வர சைக்கிள்களும் வாடகைக்கு கிடைக்கின்றன.

வண்டலுார் பூங்காவில், பராமரிக்கப்பட்டு வரும், பிரகதி என்ற எட்டு வயதான பெண் நீர்யானை, கடந்த அக்டோபர் மாதம், ஆண் குட்டி ஒன்றை ஈன்றது. இதை அடுத்து, தாய் நீர்யானையும், குட்டியும், தனி இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டன.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், நீர்யானை குட்டியை பார்த்து ரசிக்க, ஆர்வம் காட்டி வந்தனர். இதை அடுத்து, குட்டி நன்கு வளர்ந்து, உடல் ஆரோக்கியத்துடன் திடமாக இருந்ததால், பார்வையாளர்கள் பகுதியில் விட, பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது.அதற்காக தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, விலங்கு மருத்துவர்கள் ஆய்வு செய்த பின், புதிய நீர் நிரப்பப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நீர்யானை குட்டி பார்வைக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த குட்டி நீர்யானையையும், அங்குள்ள புலி கூட்டத்தையும் பார்க்க பொங்கல் விடுமுறை தினத்தில் ஏராளமான பார்வையாளர்கள் இம்முறை வருவார்கள் என்பதால் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

இது குறித்து வண்டலூர் உயிரியல் பூங்காவின் இயக்குநர் கே.எஸ்.எஸ்.வி.பி.ரெட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொங்கல் பண்டிகையின் போது ஜனவரி 15, 16, 17 ஆகிய நாட்களில் அதிகப்படியான பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காக பூங்கா நிர்வாகம் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேற்கூறிய 3 நாட்களில் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நுழைவுச்சீட்டு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக 20 நுழைவுச் சீட்டு வழங்கும் மையங்கள் திறக்கப்பட உள்ளன.

சமூக விரோதிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வனத்துறை மற்றும் காவல்துறையினர் சாதாரண உடையிலும் கண்காணிக்க உள்ளனர்.

உணவுக்கு அனுமதியில்லை

பார்வையாளர்கள் கொண்டு வரும் உணவு பொருட்களை சாப்பிடுவதற்காக, நுழைவு வாயிலுக்கு அருகில் மதிய உணவு உண்ணுமிடம் அமைக்கப்பட்டுள்ளது. உணவு பண்டங்களை பூங்காவினுள் கொண்டு செல்ல அனுமதியில்லை.

இலவச பாதுகாப்பு அறை

உணவுப் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு இலவச உடமைகள் வைப்பறையும் திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்த தற்போதுள்ள வசதிகளுடன் கூடுதலாக 1000 வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான குடிநீர் வழங்க கூடுதலாக 30 இடங்களில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்களின் போக்குவரத்து வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து வண்டலூருக்கு 500 பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த தேசியமாணவர்கள் படை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் 200 பேர் பார்வையாளர்களுக்கு வழிகாட்ட வருகின்றனர். பூங்காவினுள் பார்வையாளர்கள் மது, சிகரெட், கரும்பு போன்றவற்றை எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.

English summary
Authorities at the Arignar Anna Zoological Park in Vandalur have made arrangements to tackle the huge rush of visitors expected to visit the zoo during the Pongal holidays. Twenty ticket counters will be open at Vandalur zoo from 7 a.m. to 6 p.m. on Thursday, Friday and Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X