For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் "கமா" போட்டுக் கொண்டிருக்கும் திமுக!

Google Oneindia Tamil News

சென்னை: உட்கட்சிப் பூசலானாலும் சரி, தேர்தல் தோல்விக்கான காரணங்களானாலும் சரி பிரச்சினைகளின் மையப் புள்ளியைக் கண்டறிந்து அவற்றுக்கு முற்றுப் புள்ளி வைக்காமல் கமா போட்டு பிரச்சினைகளை அப்படியே கூடவே இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது திமுக என்ற முனுமுனுப்பு கிளம்பியுள்ளது.

2016ம் ஆண்டு நடைபெறப் போகும் சட்டசபைத் தேர்தல் யாருக்கு முக்கியமோ இல்லையோ நிச்சயம் திமுகவுக்கு அதி முக்கியமானது. காரணம், அந்த தேர்தலில் எப்படியாவது திமுக வென்று ஆட்சியைப் பிடித்தால்தான் நல்லது. அதுதான் கருணாநிதியின் அடுத்த வாரிசாக ஆரம்பத்தில் மறைமுகமாகவும், பின்னர் நேரடியாகவும் அடையாளம் காட்டப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கும் நல்லது.

ஆனால் மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாருமே தேவையில்லை என்பது போல திமுக தரப்பில் நடவடிக்கைகள் அமைந்து வருவதால் பழையவர்கள் சற்று அதிருப்தியுடன் உள்ளனர். முரண் பட்டுச் செயல்படுவர்கள், முரண்டு பிடிப்பவர்கள், முகத்தைத் திருப்பிக் கொண்டு செயல்படுபவர்கள் என யாரையும் விடாமல் அனைவரையும் அரவணைத்து, அவர்களின் கருத்துகளுக்கும் மதிப்பு கொடுத்து அனைவரையும் இணைத்துச் செயல்பட்டால் மட்டுமே திமுகவின் 2016 திட்டம் கைகூடும்.

வெறும் கூட்டணிகளை மட்டுமே நம்பியிருந்தால் கட்சிக்குள் இலை மறை காய் மறையாகவும் நேரடியாகவும் நிலவி வரும் பூசல்களும், முனுமுனுப்புகளும், விரக்திகளும், புலம்பல்களும் மேலும் அதிகரித்து அது புரையோடிப் போய் முதலுக்கே மோசம் என்ற நிலையைத்தான் ஏற்படுத்தும் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

அதிருப்திக்குப் பஞ்சமில்லை

அதிருப்திக்குப் பஞ்சமில்லை

கட்சியின் தலை முதல் வால் வரை அதிருப்திகளுக்குப் பஞ்சமில்லை. ஆனால் இந்த அதிருப்திகளை கட்சித் தலைமை புறம் தள்ளியும், கட்சியை விட்டு நீக்கியும், ஓரம் கட்டியும் மட்டுமே வைத்து வருகிறதே தவிர அவர்களையும் அனுசரித்து அவர்களின் மனக்குமுறல்களையும் போக்கி இணைத்துச் செயல்படுவதற்கான நடவடிக்கை இல்லை என்கிறார்கள்.

பழையவர்களைப் புறக்கணிப்பது நல்லதா...

பழையவர்களைப் புறக்கணிப்பது நல்லதா...

முல்லைவேந்தனை எடுத்துக் கொண்டால் அவர் சார்ந்த மாவட்டத்தில் மிகச் சிறப்பாக கட்சியை வளர்த்தவர். கட்சிக்குள் பல காலமாக இருந்து வருபவர். அமைச்சராக இருந்தபோதும் சரி, இல்லாத போதும் சரி கட்சிக்கு விசுவாசமாக இருந்தவர். சிறு துறும்பும் பல் குத்த உதவும் என்பது போல நிச்சயமாக முல்லைவேந்தன் போன்றாரால் கட்சிக்கு ஏதாவது ஒரு வகையில் பலன் கிடைக்கத்தான் செய்யும்.

அவருக்கு வெண்ணெய்.. இவருக்கு சுண்ணாம்பு

அவருக்கு வெண்ணெய்.. இவருக்கு சுண்ணாம்பு

ஒரே சமயத்தில் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் ஆனவர்கள் பழனி மாணிக்கவும், முல்லைவேந்தனும். ஆனால் பழனி மாணிக்கத்திற்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், முல்லைவேந்தன் நிரந்தரமாகவே நீக்கப்பட்டுள்ளார். இது முனுமுனுப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரபாண்டியார் மீது பாயாதது ஏன்

வீரபாண்டியார் மீது பாயாதது ஏன்

மறைந்த வீரபாண்டி ஆறுமுகம், மு.க.ஸ்டாலினுக்கு எதிராக பகிரங்கமாகவே செயல்பட்டவர். மு.க.அழகிரிக்கும் ஆதரவாக இருந்தவர். ஆனால் அவர் உயிருடன் இருந்தவரை அவர் மீது நடவடிக்கை எதையும் கட்சி மேலிடம் எடுக்கவில்லை. சின்னச் சின்ன எச்சரிக்கைகள், எரிச்சல்கள், கோபங்களுடன் கட்சி நின்று விட்டது. வீரபாண்டியாரையும் அனுசரித்த நடக்கவே ஸ்டாலினும் முயன்றார். இதனால் வீரபாண்டியாரும் ஒரு அளவோடு இருந்தார். கட்சியைக் கஷ்டப்படுத்தவில்லை. ஆனால் வீரபாண்டியார் மறைவுக்குப் பின்னர் சேலத்தில் திமுக திணறி வருகிறது - இதுதான் உண்மை.

மற்றவர்களையும் அனுசரித்துப் போகலாமே...

மற்றவர்களையும் அனுசரித்துப் போகலாமே...

வீரபாண்டியார் போலவே தூத்துக்குடியிலும் முரட்டு பக்தர் பெரியசாமி, யாரையும் வளர விட மாட்டார். ஆனாலும் அவர் மீதும் கடும் நடவடிக்கை எதுவும் கிடையாது. அவரையும் கட்சித் தலைமை அனுசரித்தே போய்க் கொண்டிருக்கிறது. இதேபோல அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தலைவர்களை, அவர்கள் யாருடைய ஆதரவாளர்களாக இருந்தாலும் சரி, அனைவரையும் அனுசரித்து அவர்களையும் மதித்து, அவர்களின் குமுறல்களையும் தீர்த்து வைத்து, நாம் அனைவரும் ஒரே கட்சி, நமக்கு ஒரே தலைவர் என்ற அடிப்படையில் இறங்கிப் போய் இணக்கமாக நடந்து கொண்டால் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் தெம்பு வரும், தோய்ந்து போக மாட்டார்கள். தொய்வடைய மாட்டார்கள், கட்சிக்கும் கடந்த லோக்சபா தேர்தலில் ஏற்பட்ட நிலைமை வந்திருக்காது என்பது உண்மையான திமுகவினரின் எண்ணமாக உள்ளது.

ஸ்டாலின் இருக்கட்டும்.. ஆனால்

ஸ்டாலின் இருக்கட்டும்.. ஆனால்

மு.க.ஸ்டாலினே அடுத்த வாரிசாக இருக்கட்டும். ஆனால் கருணாநிதியைப் போல அவரிடம் அருமையான தலைமைத்துவப் பண்புகள் இருக்க வேண்டாமா.. தன்னுடன் அனைவரும் ஒத்துப் போக வேண்டும் என்று மட்டும் எதிர்பார்ப்பது, நிச்சயம் இன்னொரு கட்சியின் தலைவரின் குணத்தைப் போல் அல்லவா இருக்கிறது.. அப்படி நினைப்பதும் கூட ஒரு வகையில் சர்வாதிகாரம்தானே... நாமும் இறங்கிப் போவோம்.. அவர்களையும் இறங்கி வர வைப்போம்.. என்ற ரீதியிலும், வி்ட்டுக் கொடுத்தும் ஸ்டாலின் செயல்பட்டால் நிச்சயம் திமுகவை இன்னும் 50 வருடங்களுக்கு அசைக்க முடியாது என்றே திமுகவினர் பலரும் கருதுகிறார்கள்.

அழகிரியால் லாபம் இல்லையா...

அழகிரியால் லாபம் இல்லையா...

நிச்சயம் இல்லை என்று யாரும் கூற மாட்டார்கள். தீவிர ஸ்டாலின் விசுவாசிகளே கூட அழகிரியால் நமக்கு நிறைய லாபம் இருக்கிறது என்றுதான் கூறுகிறார்கள். எப்படி கருணாநிதி அழகிரியை நம்பி பல பொறுப்புகளைக் கொடுத்து தென் மாவட்டங்களில் திமுகவை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை தைரியமாக கொடுத்தாரோ அதே போல ஸ்டாலினும் கூட அழகிரியுடன் இணைந்து, அவருடன் இணக்கமாக நடந்து கொண்டு செயல்பட முன்வருவாரேயானால் நிச்சயம் திமுக மிகப் பெரிய வலுவான கட்சியாக உருவெடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்பதும் இவர்களின் கருத்தாக உள்ளது.

இரு கைகளும் சேர்ந்தால்....

இரு கைகளும் சேர்ந்தால்....

ஒரு கை ஓசை சாத்தியமில்லை என்பார்கள். அதேசமயம் இரு கைகளும் சேர்ந்தால் மலையைக் கூடப் புரட்டிப் போட முடியும். எனவே ஸ்டாலினும் சரி, அழகிரியும் சரி உட்கார்ந்து பேசி, மனம் விட்டுப் பேசி திட்டங்களைத் தீட்டி.. மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து அனைவரின் எண்ணங்களையும் அறிந்து கட்சிக்காக - கட்சிக்காக மட்டுமே - என்ற எண்ணத்தில் செயல்பட முடிவு செய்தார்களேயானால் நிச்சயம் அடுத்த தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று இவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

கமா வேண்டாம்... கர்மமே முக்கியம்

கமா வேண்டாம்... கர்மமே முக்கியம்

திமுக தலைவர் கருணாநிதி ஒன்று சொன்னால் அதற்கு அப்பீலே கிடையாது.. இருக்கவும் முடியாது. காரணம் அவரைப் போல பழுத்த அனுபவம் வாய்ந்த அறிவாளியான ஒரு அரசியல் தலைவர் நிச்சயம் இந்தியாவில் இந்த நிமிடத்தில் இல்லை. அப்படிப்பட்ட தலைவரிடம்.... நீங்க சொல்லுங்க.. நாங்க செய்றோம் என்று உத்தரவு கேட்டு அவரது வழிநடத்தலில் செயல்பட முன்வந்தால் - முன்வர தயக்கம் காட்டக் கூடாது - தனித்து முடிவெடுக்கும் சூழல் இப்போது இல்லை என்பதையும் கவனத்தில் கொண்டாக வேண்டும்- நிச்சயம் திமுக மீண்டும் பலம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே கர்மமே முக்கியம், காரியம்தான் முக்கியம், வீரியம் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட அனைவரும் முன்வந்தால், முடிவு செய்தால்.. கிடைக்கும் பலன்கள் ஏராளம்..

நான்கு மாடுகளும், ஒரு சிங்கமும் கதைதான்!

நான்கு மாடுகளும், ஒரு சிங்கமும் கதைதான்!

தனித் தனியாக பிரிந்து போன மாடுகளை சிங்கம் வேட்டையாட முயன்றதும், ஆனால் மாடுகள் ஒன்று சேர்ந்தபோது சிங்கம் மிரண்டு ஓடிய கதைதான் திமுகவின் இப்போதைய நிலை. உணர்ந்து, உணர்வுப்பூர்வமாக செயல்பட வேண்டியது தலைவர்களின் கடமை.. காரணம், திமுக என்பது அதன் தொண்டர்களுக்கு ஒரு கட்சி அல்ல.. மாறாக உணர்வு, மூச்சு, வாழ்க்கை!

English summary
DMK cadres who are worried over the infighting and the dismissals of leaders, expect the leadership to unite all the leaders to become strong again.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X