For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சித் தேர்தல்.. காங்கிரஸ் ஆயிரம் கேட்கும்.. ஆனால் திமுக என்ன கொடுக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: சட்டசபைத் தேர்தல் திருவிழா முடிந்து விட்டது.. இதோ அடுத்து உள்ளாட்சித் தேர்தல் விழா வந்து கொண்டிருக்கிறது. இதற்கான ஆயத்தத்தில் ஒவ்வொரு கட்சியும் மெதுவாக இறங்க ஆரம்பித்துள்ளன.

அதிமுக வழக்கம் போல தனித்துப் போட்டியிட்டு பெரும் லாபத்தை அடையும் முயற்சிகளில் இறங்கும் என்றே தெரிகிறது. மற்ற கட்சிகளின் நிலைப்பாடு பெரிய அளவில் தெளிவாக இல்லை.

திமுகவைப் பொறுத்தரை காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்தே உள்ளாட்சித் தேர்தலையும் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Will DMK give more seats to Congress in local body polls?

மக்கள் நலக் கூட்டணி நிலைப்பாடு தெளிவாகத் தெரியவில்லை. தேமுதிக, மதிமுக நிலைப்பாடும் புரியவில்லை. பாஜக, பாமக தனித்துப் போட்டியிடும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி வழக்கம் போல திமுகவின் கழுத்தில் துண்டைப் போட்டு சீட்டுகளைக் கறக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. லோக்சபா தேர்தல் வரை காங்கிரஸை தாஜா செய்ய வேண்டிய நிலையில் திமுக இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு சந்தோஷம் தரும் வகையிலான சீட்டுகளை திமுகவும் ஒதுக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

2011ல் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் வென்ற அதிமுக, ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, அதாவது, 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை சந்தித்தது. உள்ளாட்சி அமைப்புகளில் 19 ஆயிரத்து 646 பேர் போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டதால், மீதம் உள்ள இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

முதல் கட்டமாக 10 மாநகராட்சிகள், 60 நகராட்சிகள், 259 பேரூராட்சிகள் மற்றும் 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 17-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இரண்டாவது கட்டமாக மீதம் உள்ள 64 நகராட்சிகள், 270 பேரூராட்சிகள், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் அந்த பகுதியில் உள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும், 89 நகராட்சிகளையும், 285 பேரூராட்சிகளையும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக கைப்பற்றியது. உள்ளாட்சி அமைப்புகளில் பெரும்பாலான உறுப்பினர் பதவிகளையும் அக்கட்சியே கைப்பற்றியது. அதன்பிறகு, 2014ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களைக் கைப்பற்றி அதிமுக சாதனை படைத்தது என்பது நினைவிருக்கலாம்.

தற்போது தமிழகத்தில் 12 மாநகராட்சிகள், 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. மொத்தம் 1 லட்சத்து 32 ஆயிரத்து 467 உள்ளாட்சி பதவி இடங்கள் உள்ளன. தமிழகத்தில் உள்ள நகராட்சிகள் சிறப்பு நிலை, தேர்வு நிலை, முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை என தரம் பிரிக்கப்பட்டு உள்ளன.

நகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள் தொகையுடன் அதிக வருவாய் கொண்ட ஊர்கள் பேரூராட்சிகள் ஆகும். அதாவது 5 ஆயிரத்துக்கு மேல் 30 ஆயிரம் வரையிலான மக்கள் தொகை கொண்ட ஊர்கள் பேரூராட்சிகளாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. பேரூராட்சி தலைவரும், உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

மாநகராட்சி மேயர்களையும், கவுன்சிலர்களையும் வாக்காளர்கள் நேரடியாக வாக்களித்து தேர்ந்து எடுக்கிறார்கள். எனவே மாநகராட்சி பகுதியில் உள்ள வாக்காளர்கள் மேயர், கவுன்சிலர் பதவிகளுக்கு என 2 வாக்குகள் போடுவார்கள். மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிக மக்கள் தொகை மற்றும் வருவாய் கொண்ட ஊர்கள் நகராட்சிகளாக பிரிக்கப்பட்டு உள்ளன. நகராட்சி தேர்தலில் அந்த பகுதியில் உள்ள வாக்காளர்கள் தலைவர் பதவிக்கு ஒரு வாக்கும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு ஒரு வாக்கு என மொத்தம் 2 வாக்குகள் போடுவார்கள்.

500-க்கும் அதிகமாக மக்கள் தொகையை கொண்ட ஊர்கள் ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு ஊராட்சி தலைவரும் உறுப்பினர்களும் வாக்காளர்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். சில கிராம ஊராட்சிகளை உள்ளடக்கியது ஊராட்சி ஒன்றியம். ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள். பின்னர் அவர்கள் வாக்கு அளித்து ஊராட்சி ஒன்றிய தலைவரையும், துணைத்தலைவரையும் தேர்வு செய்வார்கள். மாவட்ட அளவில் ஊராட்சிகளை சேர்த்து உருவாக்கப்பட்டது மாவட்ட ஊராட்சி. தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன. இதற்கான உறுப்பினர்களும் வாக்களித்து தேர்ந்து எடுக்கப்படுகிறார்கள்.

இந்தத் தேர்தலிலும் பெரும் வெற்றியைப் பெற அதிமுக முனைப்புடன் உள்ளது. அதை தடுக்க திமுக முயலும். எனவே வலுவான கூட்டணியுடன் தேர்தலைச் சந்திக்கவே திமுக விரும்பும். தற்போது உள்ள கூட்டணியை திமுக தொடரவுள்ளது.

இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25 சதவீத இடங்களை கேட்டுப்பெற காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளதாம். மொத்தம் உள்ள 12 மேயர் பதவிகளில் 3 பதவிகளை தங்களுக்கு ஒதுக்கக் கோரியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் திமுக 2 மேயர் பதவியைக் தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற உள்ளாட்சி பதவிகளில் 15 இடங்கள் வரை ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. சட்டசபைத் தேர்தலிலேயே காங்கிரஸுக்கு தேவையில்லாமல் அதிக இடங்களைக் கொடுத்து விட்டோம் என்ற புலம்பல் திமுகவில் உள்ளது. எனவே உள்ளாட்சித் தேர்தலில் கேட்டதையெல்லாம் நிச்சயம் திமுக கொடுக்காது என்று சொல்கிறார்கள்.

தற்போது தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளுமே அதிமுகவிடம்தான் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தல் நடந்த போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம், ஈரோடு, திருப்பூர், வேலூர், தூத்துக்குடி ஆகிய 10 மாநகராட்சிகளே இருந்தன. அப்போது நடந்த தேர்தலில் 10 மாநகராட்சிகளையும் அதிமுக கைப்பற்றியதுடன் அதிமுகவினரே மேயர்களாக இருந்து வருகிறார்கள். பின்னர் தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டன. நகராட்சித் தலைவர்களே மேயர்களாகவும் அறிவிக்கப்பட்டனர். இரு நகராட்சித் தலைவர்களுமே அதிமுகவினர் என்பதால் இவர்களையும் சேர்த்து 12 மேயர்களுமே அதிமுகவினர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources say that Congress is demanding 3 Mayor posts from DMK. But DMK may give only two.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X