
யெஸ்... நாங்க மன்னார்குடி மாபியாதான்... திவாகரன் மகன் ஜெயானந்த் 'தெனாவெட்டு' பேட்டி
சென்னை: தாங்கள் 'மன்னார்குடி மாபியாதான்'.. என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் தெனாவெட்டாக பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து சசிகலா குடும்பம் ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு உரிமை கோரி வருகிறது. ஆனால் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கத்துக்கு எதிராக ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பியதால் அதிமுக உடைந்து போனது.

கொங்கு கோஷ்டி எதிர்ப்பு
பின்னர் சசிகலா சிறைக்குப் போன நிலையில் தினகரன், தமது கட்டுப்பாட்டில் அதிமுகவை கொண்டுவர முயற்சிக்கிறார். ஆனால் தினகரன் சிறைக்கு போன காலத்தை பயன்படுத்தி எடப்பாடி கோஷ்டி அவருக்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

ஜெயானந்த் பதிவுகள்
இதனிடையே சசிகலாவின் சகோதரர் திவாகரன் மகன் ஜெயானந்த் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோக்கள் இருப்பதாக போட்ட பதிவு அகில இந்திய அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

ஆமா மன்னார்குடி மாபியாதான்
இந்நிலையில் இந்தியா டுடே டிவி சேனலுக்கு பிரத்யேக பேட்டியளித்துள்ளார் திவாகரன். அந்த பேட்டியில் ஆமா நாங்க மன்னார்குடி மாபியாதான் என ஜெயானந்த் கூறியதாக இந்தியா டுடே டிவி சேனல் தெரிவித்துள்ளது.

விரைவில் அரசியலில்...
மேலும் தாங்கள் பரம்பரையாகவே செல்வந்தர்கள்தான் எனவும் எவருடைய சொத்துகளையும் அபகரிக்க வேண்டியது இல்லை எனவும் ஜெயானந்த் கூறியுள்ளார். அத்துடன் தாம் தீவிர அரசியலுக்கு வரப் போவதாகவும் அப்பேட்டியில் ஜெயானந்த் தெரிவித்திருக்கிறார்.