"40 எம்எல்ஏக்கள்".. கிறிஸ்தவ கூட்டத்தில் ஸ்டாலின்.. திமுக மீதே வெறுப்பாயிடுச்சு: இந்து முன்னணி தடதட
தஞ்சாவூர்: வரும் தேர்தலில் திமுக அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது, இது இந்து விரோத அரசாக செயல்படுகிறது என்று இந்து முன்னணி கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. இதற்காக தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.. அந்த வகையில் பாஜகதான் முதல் கட்சியாக, களத்தில் இறங்கி உள்ளது.
தென் இந்தியாவில் தாமரையை மலர வைத்தே தீருவோம் என்று அமித்ஷாவே, பகிரங்கமாக அறிவிக்கும் அளவுக்கு மேலிடம் கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறது.
இந்து விரோதம்.. திமுக ஆட்சிக்கு ஆபத்து..ஸ்டாலின் உஷார்..எச்சரிக்கும் காடேஸ்வரா சுப்ரமணியம்

மடாதிபதிகள்
அந்த வகையில் 2 விதமான திட்டங்களை பாஜக முன்னெடுத்ததாக தகவல்கள் வலம்வந்தன.. முதலாவதாக, திமுகவுக்கு எதிரான கட்சிகளை எல்லாம் ஒன்று திரட்டுவது, அந்த கட்சிகளுக்கு பக்கபலமாக துணை நிற்பது, தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வைப்பது, அவைகளில் இருந்து வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் பதவி தந்து, டெல்லியில் உட்கார வைத்து, திமுகவுக்கு டஃப் கொடுப்பது.. இதுதான் அந்த முதல் பிளானாம். இரண்டாவதாக, இந்துக்களுக்கு எதிரான கட்சியாக திமுகவை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதாகும்.. ஆனால், இந்த செயலை, அரசியல் கட்சிகள் மூலம் இல்லாமல், மடாதிபதிகள், ஆதீனங்கள், வைத்து, திமுகவுக்கு எதிராக பேச வைப்பதாம்..

டபுள் டிஜிட்
இதன்மீது திமுக மீது வெறுப்பை கக்க வைத்து, வரப்போகும் தேர்தலில் 10 சீட் அதாவது டபுள் டிஜிட் சீட்களையாவது தமிழகத்தில் பெற வேண்டும் என்பதே நோக்கம் என்கிறார்கள். 3 மாதங்களுக்கு முன்பு, இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்ரமணி இதற்கான முதல் மணியையும் அடித்திருந்தார்.. "விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும்... ஏனென்றால், செந்தில் பாலாஜி 40 எம்எல்ஏக்களின் ஆதரவை வைத்துள்ளார் என தகவல்கள் வருகின்றன.. தமிழக அரசியல் விரைவில், தற்போதைய மகாராஷ்டிரா அரசியல் போல் மாற உள்ளது" என்று பேசியிருந்தார்..

குழப்பம்
கோவை திமுகவுக்குள் குழப்பத்தையும், செந்தில் பாலாஜி மீதான நல்லெண்ணத்தையும் கெடுப்பதற்காக இவ்வாறு பழி கூறப்படுவதாகவே அப்போதே திமுகவில் கண்டனங்கள் எழுந்தன... அதேபோல, 40 எம்எல்ஏக்களை கையில் வைத்துக் கொண்டு செந்தில்பாலாஜி, திமுகவை மிரட்டப்போகிறார் என்ற பொய்க்கணக்குகள் அனைத்தும் நாளடைவில் நொறுங்கிவிட்டதாகவே தெரிகிறது.. அந்த 2 வியூகங்களும் கை கொடுக்காத நிலையில், இப்போது மீண்டும் திமுகவை வீழ்த்த வேறு ரூட்களை பாஜக கையில் எடுக்க போவதாக தெரிகிறது.

பெரிய தோல்வி
இந்நிலையில், வரும் தேர்தலில் திமுக தோற்கும் என்று மீண்டும் காடேஸ்வரா சுப்பிரமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், இந்து முன்னணி மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.. இதில் பங்கேற்றபிறகு, செய்தியாளர்களிடம் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணி சொன்னதாவது: "தமிழகத்தை ஆளும் திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமான அரசாக, இந்து விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.. எங்களை முடக்கும் நோக்கத்தில் இந்து அமைப்பினர் நடத்தும் நிகழ்ச்சிகளை தடை செய்வது, கைது செய்வது போன்ற செயல்களையும் செய்கிறது...

கிறிஸ்துமஸ்
ஒருபக்கம் மதச்சார்பற்ற அரசு என்று சொல்லிக் கொண்டு, இன்னொரு பக்கம் கிறிஸ்துவர்களின் கூட்டத்தில், இது உங்களுக்கான ஆட்சி, உங்களால் தான், திமுக ஆட்சிக்கு வந்தது என்று முதல்வர் சொல்கிறார். ஆனால் தீபாவளி, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து சொல்வது கிடையாது.. ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற விழாக்களுக்கு வாழ்த்து சொல்கிறார்.. இது, ஒருதலை பட்சமாக நடக்கும் அரசாக உள்ளது. இந்துக்கள் மத்தியில் திமுக மீது வெறுப்புணர்வு உருவாகிக் கொண்டு இருக்கிறது...

காடேஸ்வரா
வரும் தேர்தலில், திமுக நிச்சயம் தோற்கத்தான் போகிறது.. கோவில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று கோர்ட்டில் கேஸ் நடந்து வருகிறது... தனி வாரியம் அமைத்து, அந்த வாரியத்திடம் கோவில்களை ஒப்படைக்க வேண்டும். கோவில் மற்றும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டு என்று கோர்ட் சொல்லியும், இந்த அரசு செய்யவில்லை.. பலகோவில் இடங்களை, அரசியல்வாதிகள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் என்று குற்றஞ்சாட்டி உள்ளார் காடேஸ்வரா சுப்பிரமணி.. இதனிடையே 40 எம்எல்ஏக்களை செந்தில்பாலாஜி தன்பக்கம் வளைத்து பிடித்துள்ளார் என்பதும், மகாராஷ்டிரா போல தமிழகத்திலும் ஆட்சி கவிழும் என்று சொன்னது என்னாச்சு? என்ற கேள்வியும் இணையத்தில் கிளம்பி வருகிறது.