தஞ்சாவூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உலகின் சிறிய கோழி; குட்டை மாடு; மினி தியேட்டர்! - சுற்றுலாத்தலமாக மாறும் தஞ்சை தரிசு நிலம்

Google Oneindia Tamil News

தஞ்சாவூர்: பலரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருமலை சமுத்திரம் ஊராட்சி, அப்படி என்ன செய்துவிட்டது இந்த ஊராட்சி என்ற கேள்வி எழுகிறதா?

தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தைப் பசுமை நிறைந்த வனமாக மாற்றியிருக்கிறது. இந்த முன்னெடுப்பை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தியுள்ளார், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.

 அன்று தரிசு நிலம்; இன்று அழகிய வனம்

அன்று தரிசு நிலம்; இன்று அழகிய வனம்

அதாவது, கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஒரு புதிய வனத்தை உருவாக்கும் முயற்சியில் தஞ்சை மாவட்ட நிர்வாகம் களமிறங்கியது. இந்த நிலம் இதற்கு முன்னால் காய்ந்த பூமியாக பயன்பாடற்றுக் கிடந்துள்ளது. அதைக் கண்டறிந்து அதில் வனத்தை உருவாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வனத்தில் ஏறக்குறைய 216 வகையான மரக்கன்றுகளை நட்டுள்ளார்கள். இதில் பல அரியவகை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது கூடுதலாகச் சொல்ல வேண்டிய செய்தி.

ருத்ராட்சம், திருவோடு என்று அழிவின் விளிம்பில் உள்ள மரச் செடிகளைத் தேடித்தேடிக் கொண்டு வந்து நட்டுள்ளனர். அது வளர்ந்து இன்று ஒரு குட்டி வனமாக மாறியுள்ளது. இந்த வனத்தைப் பார்ப்பதற்கே உற்சாகமாக உள்ளது.

கேட்பாரற்றுக் கிடந்த பூமி, இன்று வருமானம் தரும் வளமான பூமியாக மாறியது எப்படி எனப் போய் பார்த்தோம். நாம் உள்ளே நுழையும்போதே அழகான பலகை ஒன்று, 'விருட்ச வனம்-மரங்கள் சரணாலயம்' என நம்மை வரவேற்கிறது.

 40 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை

40 ஏக்கரில் ஒருங்கிணைந்த பண்ணை

இதுகுறித்து நம்மிடம் பேசிய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர், ''திருச்சி டு தஞ்சாவூர் வருகின்ற வழியில் எந்தவொரு சுற்றுலாத் தலமும் இல்லை. ஆகவே, இந்தப் பகுதியில் காடுகளை வளர்த்து இதை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும். அதுவே எங்கள் இலக்கு. தற்போது கூடுதலாக 40 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி உள்ளோம். அதை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதுவரையில், எந்தவிதப் பராமரிப்பும் இல்லாமல் புறம்போக்காகக் கிடந்த நிலம் இது. சில ஆக்ரமிப்புகளும் இருந்துள்ளன. அரசு துரிதமாகச் செயல்பட்டு, அந்த ஆக்ரமிப்புகளை மீட்டு வனத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியது'' என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், '' இங்கு பெரிய குளம் ஒன்றை வெட்டும் வேலைகள் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே ஒரு சிறிய குளம் இருந்தாலும் அதைவிடப் பெரிதாக ஒரு குளம் தேவை என்பதை உணர்ந்து இதை முன்னெடுத்துள்ளனர். அந்தக் குளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்ததும், அதில், படகு விடுவதற்கான தளம் அமைக்கப்பட உள்ளது. கூடவே, மீன் வளர்ப்பு திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் மரக்கன்றுகளின் வகைகளை 500 ஆக மாற்றவும் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வெறுமனே மரம் வளர்ப்பு என்பதுடன் நின்றுவிடாமல், விரிவாக்கம் செய்ய உள்ள 40 ஏக்கரில் கொய்யா மற்றும் தென்னையைப் பயிரிடும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

அதன்மூலம் ஊராட்சியின் வருவாயைப் பெருக்குவதற்கான முயற்சியாக இது மாறும். இப்படி ஊராட்சியின் வருவாயை அதிகப்படுத்தி, தமிழ்நாட்டில் முன்னுதாரணமான ஊராட்சியாக திருமலை சமுத்திரம் ஊராட்சியைக் கட்டமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது" என்றார்.

 மலேசிய குட்டைக் கோழி

மலேசிய குட்டைக் கோழி

தஞ்சையில் நடந்துள்ள இந்த அற்புதமான மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பேசுகையில், '' ஊராட்சி நிர்வாகத்துடன் சேர்ந்து மாவட்ட நிர்வாகம் இந்தப் பணியைச் செய்துள்ளது. முழுக்க முழுக்க முதலமைச்சர் ஸ்டாலினின் ஆலோசனையின்படி இத்திட்டம் உயிர்பெற்றுள்ளது.

அவர்தான் மாநிலம் முழுவதும் இப்படி தரிசு நிலமாகக் கிடக்கும் நிலங்களில் பசுமையான வனங்களை உருவாக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அவரது யோசனையின்படி, இந்த விருட்ச மரங்கள் நடப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது.

இந்த வனத்துக்கு நம்முடைய பள்ளி மாணவர்கள் அழைத்துவரப்பட்டு, அவர்களுக்கு மரங்களைப் பற்றிய அறிமுகத்தைச் செய்து வைக்கிறோம். இந்த வனத்தில் கோழி இனங்களை வளர்த்து வருகிறோம். அதிலும்கூட, வழக்கமான கோழிகளை வளர்க்காமல், உலகிலேயே மிகச் சிறிய கோழி இனமான, மலேசிய இனத்தை வளர்த்து வருகிறோம். அதேபோல் உலகிலேயே பெரிய இனமான கோழிகளையும் வளர்த்து வருகிறோம்.

 அரியவகை புங்கனூர் பசுக்கள்

அரியவகை புங்கனூர் பசுக்கள்

அதையும் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்து வருகிறோம். மிக அரிய வகையான புங்கனூர் பசுக்களை வளர்த்து வருகிறோம்.

இத்துடன் ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டத்தைச் செயல்படுத்தி உள்ளோம். அதையும் மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான வகுப்புகளை நடத்திப் புரிதலை உருவாக்கி வருகிறோம். காளான் வளர்ப்புக்காக கொட்டகை அமைக்கப்பட்டு, வளர்க்கப்பட்டு வருகிறது. இதையும் மாணவர்களுக்குச் சொல்லித் தருகிறோம்'' என்கிறார்.

மேலும், ''காய்கறித் தோட்டம் அமைக்கப்படும் வேலைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல பூந்தோட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.இந்த வனத்தை வெறும் பொழுதுபோக்கும் மனநிலைக்காக அமைக்கவில்லை. அதனுடன் மாணவர்கள் அறிவுப்பூர்வமான செயல்களைக் கூடவே அறிந்து கொள்வதற்காகவும் ஆலோசித்து செயல்படுத்தியுள்ளோம்'' என்கிறார்.

 அழகிய மினி திரையரங்கம்

அழகிய மினி திரையரங்கம்

தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், ''இதில் குழந்தைகளுக்காக ஒரு பூங்கா உருவாக்கப்பட உள்ளது. இதை எல்லாம் மிஞ்சும் விஷயமாக ஒரு சின்ன திரையரங்கம் கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தத் திரையரங்கில் நாட்டின் வளங்களைப் பற்றியும் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளும் வகையிலும் நிறைய குறும்படங்களைத் திரையிடும் முயற்சிகளும் நடக்க உள்ளன'' என்றார்.

''இந்த வனம், தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய வனமாக உருவாக்கப்பட்டுள்ளது. அது எங்கள் மாவட்டத்துக்குப் பெருமை தரும் செய்தி" என்கிறார், தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஐ.ஏ.எஸ்.

 உற்சாகத்தில் ஊர் மக்கள்

உற்சாகத்தில் ஊர் மக்கள்

''இதுக்கு முன்னாடி தரிசா கிடந்த பூமி. இப்போது கன்றுகள் நட்டு, பார்க்கவே பசுமையாக இருக்கிறது. எங்களுக்கும் இதன்மூலம் ஒரு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. வெறும் காசுக்காக மட்டும் வேலை பார்க்காமல் மனப்பூர்வமாக இந்தக் காட்டை காப்பாற்றி வருகிறோம்.

இவ்வளவு நாள்களாக இந்த ஊரில்தான் பிறந்து வளர்ந்திருக்கிறோம். ஆனால் இப்படி ஒரு பூமி இந்தப் பகுதியில் கேட்பாரற்று கிடக்கிறது என்பது எங்களுக்கே தெரியாது. அதைத்தான் இப்போது அரசு கையில் எடுத்துச் சிறப்பா செய்திருக்கிறது. பார்க்கவே கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கிறது" என்கிறார்கள், இந்தத் திட்டப்பணிகளில் ஈடுபாட்டுடன் வேலை செய்து வரும் ஊர் மக்கள்.

 லாபம் தரும் காளான் வளர்ப்பு

லாபம் தரும் காளான் வளர்ப்பு

திருமலை சமுத்திரம் ஊராட்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வனத்தில் பலவகையான மர வகைகள் உள்ளன. மிக உயரமாக வளரக்கூடிய மரங்கள். மிகவும் குட்டையாக வளரக்கூடிய மரங்கள். படர்ந்து செல்லக் கூடிய மரங்கள். நிழல் தரக்கூடிய மரங்கள் எனப் பல வகைகளை உள்ளே கொண்டு வந்துள்ளனர். அந்தவகையில், பலவகைகளில் சிறப்புப் பெற்றதாக இந்த வனம் அமைந்துள்ளது.

இங்குள்ள ஒருங்கிணைந்த பண்ணையில் காளான் வளர்ப்புத் திட்டத்தில் பல பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒருவரிடம் பேசியபோது, "ஆளுக்கு 500 ரூபாய் வசூல் செய்து முதலீடு போட்டு காளான் உற்பத்தியைச் செய்து வருகிறோம். இதுவரை 20 கிலோ காளான் எடுத்துள்ளோம். 5,400 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளோம்.

இதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வங்கிக்கணக்கை உருவாக்கி உள்ளோம். வங்கி இருப்பில் 2,500 ரூபாய் உள்ளது. மீதி 2,500 ரூபாய்க்குத் தேவையான மூலதனப் பொருள்களான விதை, பிளாஸ்டிக் கவர், வைக்கோல் எனப் பலவற்றை வாங்க வைத்துள்ளோம்.

ஒரு படுக்கை காளான் போடுவதற்கு 250 ரூபாய். அதில் 150 ரூபாய் செலவு போனால் 100 ரூபாய் லாபம் கிடைக்கும். ஒரு படுக்கைக்கே இந்த லாபம் என்றால் 10 படுக்கை போட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.

ஆகவே, இந்தத் தொழில் மூலம் எங்களது தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு நிரந்தர வருமானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்படுத்தித் தந்துள்ளார். அவருக்கு எங்களது நன்றி" என்கிறார்

English summary
A Villagre is changing Tanjore Wasteland into tourist destination: Tamilnadu torusim latest news in tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X