திமுகவில் தேனி தொகுதிக்கு குறிவைக்கும் 2 இஸ்லாமிய பிரமுகர்கள்! என்ன பின்னணி?
தேனி: திமுக சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட 2 இஸ்லாமிய பிரமுகர்கள் காய் நகர்த்தி வருகின்றனர்.
தேனி நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரை கம்பம், போடி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, சோழவந்தான், உசிலம்பட்டி என 6 சட்டமன்ற தொகுதிகள் வருகின்றன. பிறமலைக்கள்ளர், நாயக்கர், சிறுபான்மையினர், ஒக்கலிக கவுடர், ஆதி திராவிடர் உள்ளிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கணிசமான வாக்கு வங்கியை கொண்டுள்ளார்கள்.

அதிமுகவின் ஆதிக்கம் நிறைந்த தொகுதியாக பார்க்கப்படும் தேனியில், கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் மற்றும் திமுக தலா 2 முறை மட்டுமே வெற்றிபெற்றிருக்கிறது. மீதி எல்லா தேர்தல்களிலும் அங்கு அதிமுக கொடி தான் பறந்துள்ளது. இந்நிலையில் தற்போது ஓ.பனீர்செல்வம் டீம் எடப்பாடி நிறுத்தும் வேட்பாளரை தோற்கடிக்க எவ்வித சமரசத்துக்கும் தயாராகிவிட்டடாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் திமுக இந்த முறை தேனியை கோட்டை விடக் கூடாது எனக் கணக்குப் போடுகிறது.
அமைச்சர் ஐ.பெரியசாமியின் உடல்நலம், துரத்தும் வழக்கு, உள்ளிட்ட காரணங்களால் தேனி தொகுதியை கவனிக்கும் பொறுப்பை அமைச்சர் மூர்த்தி வசம் திமுக தலைமை கொடுத்துள்ளது. வெற்றிபெறவில்லை என்றால் தலைமைக்கு பதில் சொல்ல முடியாது என்பதால் திமுக தேர்தல் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன. தேனி மாவட்டத்தில் நிலவும் கோஷ்டிப்பூசலை சரிசெய்வது தான் தலைமைக்கு சற்று தலைவலியாக உள்ளது.
இதனிடையே தங்கதமிழ்ச்செல்வன் டெல்லி அரசியலில் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் பெயருக்கு தேனியை கேட்கிறார். அதேபோல் தேனி மாவட்ட முன்னாள் பொறுப்பாளர் கம்பம் ஜெயக்குமாரும் தேனி தொகுதியை கேட்கிறார். மேலும் இவர்களை தவிர இரண்டு இஸ்லாமிய பிரமுககளும் தேனி தொகுதியில் சீட் கேட்கின்றனர். காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஹாரூன் ரஷீதின் இளைய மகனும் திமுக இளைஞரணி நிர்வாகியுமான இம்ரான் ஹாரூன் மற்றும் நடிகரும், தொழிலதிபருமான ஜெ.எம்.பஷீர் ஆகிய இருவரும் சீட் எதிர்பார்க்கின்றனர்.
முஸ்லீம் லீக்கிற்கு ஒரு தொகுதி ஒதிக்கியது போக மனிதநேய மக்கள் கட்சியும் 1 எம்.பி. சீட் கேட்கிறது.ஒரு வேளை திமுகவில் இஸ்லாமியர்கள் கோட்டாவில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என இவர்கள் நம்புகின்றனர்.
இதில் கூடுதல் தகவல் என்னவென்றால் தேனி கிடைக்கவில்லை என்றால் மயிலாடுதுறை தொகுதியிலாவது சீட் வாங்கிவிட முயற்சிக்கிறார் இம்ரான் ஹாரூன்.












Click it and Unblock the Notifications