சீமான், சாட்டை துரைமுருகனுக்கு கொலை மிரட்டல்.. தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது வழக்கு!
தேனி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் பேச்சாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த விஜய் தலைமையிலான தவெக கட்சியின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி கருவேலநாயக்கன் பட்டியைச் சேர்ந்தவர் லெப்ட் பாண்டி (எ) பாண்டியன். தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக அடிக்கடி வீடியோக்களை லெப்ட் பாண்டி வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டு வந்தார். மேலும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் விஜய்யையும், தவெக தொண்டர்களை குறித்தும் கட்சி மேடைகளில் விமர்சித்து வந்தார். இந்நிலையில், தவெக மாவட்ட செயலாளர் லெப்ட் பாண்டி சீமான், சாட்டை துரைமுருகன் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் ஆகியோரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டி விடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தேனி மாவட்ட கிழக்கு செயலாளர் ஜெயக்குமார் தேனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தேனி தெற்கு மாவட்ட செயலாளர் பாண்டி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லெப்ட் பாண்டியை விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.
விரைவில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தேர்தல் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார் விஜய். நேற்று தவெக செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்றது. இந்தச் சூழலில், தவெக நிர்வாகி கொலை மிரட்டல் வழக்கில் சிக்கியுள்ளது தவெகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications