எப்படி மாறியது.. விசாரிக்கும் ஓபிஎஸ்.. சொந்த ஊரில் தொடர்ந்து முகாம்.. கட்சிக்காரர்கள் திகைப்பு
தேனி: சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் கடும் போராட்டத்திற்கு பிறகே வெற்றி பெற்றார். பல பூத்களில் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்காததால் அவர் அப்போது வருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வாக்குகள் குறைவாக பதிவான பூத் நிர்வாகிகளை அழைத்து ஏன் வாக்குகள் குறைந்தது என கடந்த ஒரு வாரமாக ஓபிஎஸ் விசாரித்து வருவதாக தகவல்கள் பரவி வருகிறது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. தென் மாவட்டங்கள், வடமாவட்டங்கள் மற்றும் சென்னை மண்டலம், திருச்சி டெல்டா மண்டலங்களில் பெரிய அளவில் தோற்றுப்போனது. முக்கிய தலைவர்கள் பலரும் இந்த முறை தோற்றுப்போனார்கள்.
தென் மாவட்டங்களில் வெற்றி பெறுவது அதிமுக தலைவர்களுக்கு இந்த முறை கடும் சவாலாக இருந்தது. இந்நிலையில் அதிமுகவின் தோல்வி குறித்து இபிஎஸ் - ஓபிஎஸ் ஆகியோர் கடந்த 2 மாதங்களாக கட்சிக்குள் தனித்தனி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.

கொங்கு மண்டலம்
எடப்பாடி பழனிசாமிக்கு சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு அதிகம் இருந்தது அதனால் தான் அதிமுக எல்லா பகுதியிலும் தோல்வியை சந்தித்த போதும் கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றது. கொங்கு மண்டலத்தில் கணிசமான வெற்றியை பெறாமல் இருந்திருந்தால், அதிமுக மிக மோசமான தோல்வியை சந்தித்து இருக்கும் .

போடியில் சவால்
இந்நிலையில் கொங்கு மண்டலத்தில் எடப்பாடிக்கு ஆதரவு அதிகம் என்றால் தென் மாவட்டங்களில் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. ஆனால் தேர்தல் நேரத்தில் இடஒதுக்கீடு விவாகரம் மற்றும் வேளாளர் பெயர் விவகாரம் உள்ளிட்டவற்றில் அதிமுக தலைமை எடுத்த சில முடிவுகளால் ஓ பன்னீர்செல்வத்திற்கு சொந்த தொகுதியான போடியிலேயே வெற்றி பெறுவது சவாலாக இருந்தது.

குறைந்த வாக்குகள்
போடியில் ஓ பன்னீர்செல்வத்தை எதிர்த்து தங்க தமிழ்செல்வன் களம் இறக்கப்பட்டார். முதல் சில ரவுண்டுகளில் தங்கதமிழ்செல்வன் கையே ஓங்கியது. ஆனால் அடுத்தடுத்த சுற்றுகள் முடிவில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றிபெற்றார். ஓ.பன்னீர்செல்வம் 1,00,050 வாக்குகளும் அவருக்கு அடுத்தபடியாக தங்கதமிழ்செல்வன் (திமுக) 89,029 வாக்குகளும் பெற்றனர். சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார். இந்த நிலையில் போடிநாயக்கனூர் தொகுதியில் கூட எதிர்பார்த்த ஓட்டு தனக்கு கிடைக்கவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் ஆதங்கப்பட்டு வருகிறார் .

வாக்குகள் கிடைக்கவில்லை
போடி தொகுதியில் வெற்றிக்காக கடுமையாக போராடிய ஒபிஎஸ், தேர்தலுக்கு முன் பூத் வாரியாக கட்சி நிர்வாகிகளை கவனித்தார். ஒவ்வொரு ஊரிலும் வாக்குகளை பெற வியூகம் வகுத்தார். அது மட்டுமல்லாது அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தமிழகம் முழுவதும் ஓபிஎஸ் சுற்றுப்பயணம் செய்து அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி போட்டியிட்ட தொகுதி உள்ளிட்ட சில இடங்களுக்கு மட்டுமே ஓபிஎஸ் பிரசாரத்துக்கு சென்றார். மற்ற நாட்கள் முழுவதும் தனது தொகுதியிலேயே இருந்து, தேர்தல் பணியாற்றி வந்தார். ஆனாலும், அவர் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை.

ஏன் வாக்களிக்கவில்லை
இதனால் கோபம் அடைந்த ஓ.பன்னீர்செல்வம், கடந்த 10 நாட்களாக தொகுதியில் முகாமிட்டு, பூத் வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது. ஏன் குறைந்த அளவு ஓட்டு எனக்கு கிடைத்துள்ளது? இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும் என்று . கட்சிக்காரர்களை அழைத்து விசாரித்தாராம். மக்கள் ஏன் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை என்று கேட்டு வருகிறாராம்.

வழக்கமானது
ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. பொதுவாகவே ஓ பன்னீர்செல்வம் தொகுதிக்கு வந்தால் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுவது வழக்கம். அந்த வகையில் தான் பேசுவதாக கூறப்படுகிறது. எனினும் ஊடகங்களில் பரவும் தகவல்களால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications