தேனியில் அய்யோ அஞ்சலி.. 19 வயதில் தலையில் புழுவெட்டு.. கனவிலும் இப்படி நடக்க கூடாது! என்ன நடந்தது
தேனி: தேனி அஞ்சலி தலைமுடி உதிர்வு பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. சாதாரண முடி உதிர்வு என நினைத்த நிலையில், ஒட்டுமொத்தமாக முடி கொட்டி வழுக்கையானதால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சலே இந்த விபரீத முடிவுக்குக் காரணமாக அமைந்துள்ளது. அஞ்சலிக்கு தலையில் என்னதான் பிரச்சனை? ஏன் இந்த விபரீத முடிவு?
தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ளது உப்பார்பட்டி என்ற கிராமம்.. இந்த ஊரை சேர்ந்தவர் தான் கருப்பையா. இவரது மகள் அஞ்சலிக்கு 19 வயதாகிறது.

அஞ்சலிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென தலைமுடி உதிர ஆரம்பித்துள்ளது. சாதாரண முடி உதிர்வுதானே என்று முதலில் நினைத்திருந்தார்.. ஆனால், நாளுக்கு நாள் தலையில் இருந்த முடிகள் அனைத்தும் கொத்து கொத்தாகக் கொட்ட ஆரம்பித்துவிட்டன.. ஒருகட்டத்தில் ஒட்டுமொத்தமாக வழுக்கையாக மாறியதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் அஞ்சலி அதிர்ச்சியானார். 19 வயசிலேயே இப்படி தலைமுடி மொத்தமாகப் போச்சே என்று தாங்க முடியாத மனவேதனைக்கும், கடுமையான மன உளைச்சலுக்கும் ஆளானார்.. யாரிடமும் சரியாக பேசாமல், தனக்குள்ளேயே இந்த விஷயத்தை நினைத்து குழம்பியும், பயந்தும் போனார்..
தேனி அஞ்சலி தலைமுடி உதிர்வு
இந்த நிலையில் தான், சம்பவத்தன்று இரவு வீட்டில் குடும்பத்தினர் யாரும் இல்லாத அந்த நேரத்தில், தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். வீட்டிற்குள் நுழைந்த குடும்பத்தினர், மகளின் சடலத்தை கண்டு கதறி அழுதது காண்போரை நிலைகுலைய வைத்தது.
அஞ்சலியின் உடலைக் கைப்பற்றிய போலீசார் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 19 வயதே ஆன ஒரு இளம் பெண், வெறும் தலைமுடி உதிர்ந்த விரக்தியில் தன் உயிரையே மாய்த்துக் கொண்ட சம்பவம் தான் இப்போது தேனியையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.
புழுவெட்டு என்றால் என்ன
ஆனால் இந்த புழுவெட்டு என்றால் என்ன? ஏன் இப்படி உயிரைப் பறிக்கும் அளவுக்கு மன உளைச்சலைத் தருகிறது?
உண்மையைச் சொல்லப்போனால், புழுவெட்டு என்பது தலைமுடி, புருவம் அல்லது தாடி போன்ற இடங்களில் வட்ட வட்டமாகக் கொட்டி சொட்டை விழும் ஒரு வகையான சரும பிரச்சனையாகும்.. இதை ஆங்கிலத்தில் "அலோபீசியா அரியேட்டா" (Alopecia Areata) என்று சொல்வார்கள்.
இது ஏதோ புழுக்களால் ஏற்படும் நோய் கிடையாது! நமது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலமே, தவறுதலாக நமது சொந்த மயிர்க்கால்களை எதிரியாக நினைத்து தாக்கும் "ஆட்டோஇம்மூன்" (Autoimmune) பிரச்சனை தான் இது. அதிகப்படியான மனஅழுத்தம், பரம்பரை மரபணுக்கள், சத்துக் குறைபாடு மற்றும் தைராய்டு போன்ற ஹார்மோன் மாற்றங்களால் இது உருவாகிறது. பாதிக்கப்பட்ட இடத்தில் வட்ட வடிவில் முடி உதிர்வது, அரிப்பு ஏற்படுவது மற்றும் நகங்களில் சிறு சிறு கோடுகள் தோன்றுவது இதன் அறிகுறிகளாகும்.
தீர்வு என்ன
இதற்குத் தீர்வே கிடையாதா என்றால், கண்டிப்பாக இருக்கிறது! புழுவெட்டு நோய்க்கு ஆரம்பத்திலேயே சரியான சிகிச்சை எடுத்துக்கொண்டால், நிச்சயமாக முடியை மீண்டும் வளர வைக்க முடியும். பயப்படாமல் சரும மருத்துவரை (Dermatologist) அணுகினால், தடவும் மருந்துகள், பூச்சுகள் அல்லது ஊசி சிகிச்சைகள் மூலம் மயிர்க்கால்களை மீண்டும் உயிர்ப்பிக்கலாம்.
அத்துடன் மனதை அமைதிப்படுத்தும் தியானம், சின்ன வெங்காயச் சாறு, நெல்லிக்காய், கருவேப்பிலை போன்ற இயற்கை சிகிச்சைகள் மற்றும் சத்துள்ள உணவுகள் மூலம் மயிர்க்கால்களைப் பலப்படுத்தி, உதிர்ந்த முடியை மீண்டும் முழுமையாகப் பெற முடியும் என்பதே நிதர்சனம்..!
கடந்த மாதம்வரை மகிழ்ச்சியாக இருந்த தேனி இளம்பெண் அஞ்சலி, 30 நாட்களில் ஏற்பட்ட தலைமுடி பாதிப்பால் உயிரையே மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை தந்து வருகிறது..!!


Click it and Unblock the Notifications
