ஜொலித்த தங்க கைச்செயின் - மோதிரம்.. திமுகவினருக்கு தேனி எம்பி தங்க தமிழ்செல்வன் கொடுத்த ‛கிப்ட்’
தேனி: தேனி லோக்சபா தொகுதியில் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் போட்டியிட்ட நிலையில் அவரை வீழ்த்தி திமுகவின் தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் தேர்தலில் தீவிரமாக பணியாற்றிய நிர்வாகிகளுக்கு தங்க தமிழ்செல்வன் உதயசூரியன் பொறித்த தங்க கைச்செயின், தங்க மோதிரத்தை பரிசாக வழங்கி கவனம் ஈர்த்துள்ளார்.
தேனி லோக்சபா தொகுதி எம்பியாக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். திமுகவை சேர்ந்தவர். இவர் முதலில் அதிமுகவில் செயல்பட்டார். அதன்பிறகு டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தார். பின்னர் அங்கிருந்து திமுகவில் சேர்ந்தார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அவரை எதிர்த்து திமுகவின் தங்க தமிழ் செல்வன் களமிறங்கினார்.
இதனால் தேனி லோக்சபா தேர்தல் என்பது குரு - சிஷ்யன் இடையேயான போட்டியாக மாறியது. இந்த தேர்தலில் டிடிவி தினகரனை வீழ்த்தி தங்க தமிழ்செல்வன் வெற்றி பெற்றார். தங்க தமிழ்செல்வன் மொத்தம் 5 லட்சத்து 71 ஆயிரத்து 493 ஓட்டுகள் பெற்றர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 2 லட்சத் 92 ஆயிரத்து 668 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் தங்க தமிழ்செல்வன் 2 லட்சத்து 78 ஆயிரத்து 825 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் விடி நாராயணசாமி 3ம் இடம் பிடித்தார். அவர் மொத்தம் 1 லட்சத்து 55 ஆயிரத்து 587 ஓட்டுகள் பெற்றார். சீமானின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜே மதன் 76,834 ஓட்டுகள் பெற்றார். இந்நிலையில் தான் லோக்சபா தேர்தலில் உழைத்து தன்னை வெற்றி பெற வைத்த திமுக நிர்வாகிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
அதாவது உசிலம்பட்டி சட்டசபை தொகுதி மதுரை மாவட்டத்தில் உள்ளது. இந்த உசிலம்பட்டி தொகுதி தேனி லோக்சபா தொகுதிக்குள் வருகிறது. அந்த வகையில் உசிலம்பட்டி சட்டசபை தொகுதியில் தனது தேர்தல் வெற்றிக்காக உழைத்த திமுக நிர்வாகிகளுக்கு கறிச்சோறு போட்டு தங்க தமிழ்செல்வன் நன்றி தெரிவித்தார். அதுமட்டுமின்றி முக்கிய நிர்வாகிகளுக்கு தங்க தமிழ் செல்வன் தங்க ஆபரணங்களை பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தார்.
அதாவது உதயசூரியன் பொறிக்கப்பட்ட தங்க கைச்செயின் மற்றும் தங்க மோதிரங்களை அவர் திமுக நிர்வாகிகளின் கைகளில் அணிவித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனால் திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications