ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.. அண்ணாமலை பரபர பேட்டி
நெல்லை: இந்த ஒரு இடைத்தேர்தல் வருவதனால் திமுகவின் ஆட்சி மாறப்போகிறதா..திமுகவின் பெரும்பான்மை எதுவும் மாறப்போவது இல்லை. மக்களவை தேர்தலுக்கே இன்னும் 14 மாதங்கள் உள்ளது. இது ஒரு இடைத்தேர்தல் அவ்வளவுதான். 31 ஆம் தேதி வரை நேரம் உள்ளது. நல்ல முடிவு வலுவான முடிவு எடுப்போம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நெல்லையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திமுகவில் அமைச்சர் பொறுப்புக்கு வரவேண்டும் என்றால் மிக முக்கிய தகுதி கல் எடுத்து குறிபார்த்து அடிக்க வேண்டும் போல் தெரிகிறது.
ஆவடி நாசர் கல் எறிந்த விவகாரம்! இப்படி ஒரு அமைச்சரை இந்திய வரலாற்றில் பார்த்ததுண்டா? அண்ணாமலை கேள்வி

பிஏவை கல் எடுத்து அடிக்க பாய்ந்த...
இன்று காலை பால்வளத்துறை அமைச்சர் நாசர் தனது பிஏவை கல் எடுத்து அடிக்க பாய்ந்ததை பார்த்தோம். திமுக அரசு 20 மாதங்களாக செய்வதை இதுதான் காட்டுகிறது. பட்டப்பகலில் அத்தனை பேர் மத்தியில் ஒரு அமைச்சர் கல்லை எடுத்து பிஏவை அடிக்க போகிறார். இந்த அமைச்சருக்கு இது புதிது கிடையாது. திமுக அமைச்சர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை மக்கள் மன்றத்தில் வெட்ட வெளிச்சமாக இன்றைக்கு தெரியப்படுத்தும் வகையில் உள்ளது.

திமுகவின் பயத்தை தான் காட்டுகிறது.
களத்தில் இருக்கக் கூடிய முதல் ஆள்தான் ஜெயிக்க வேண்டும் என்பது எப்போதுமே அவசியம் இல்லை. நான் முதலில் போனேனால் ஜெயித்துவிடுவேன் என்று சொல்வதெல்லாம் மக்கள் மன்றத்தில் செல்லாது. திமுகவை பொறுத்தவரை அவர்களின் நிலைமை மோசமாக உள்ளது. மக்கள் மன்றத்தில் கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். அதனால் வேகம் வேகமாக அமைச்சர்களாகி வைத்து குழுவை போடுகின்றனர். இது எல்லாம் திமுகவின் பயத்தை தான் காட்டுகிறது.

ஆளும் கட்சி தோல்வி அடையும்
இடைத்தேர்தலில் 80 சதவீத்தத்திற்கும் மேல் ஆளும் கட்சிதான் வெற்றி பெற்றிருக்கிறது. இதற்கு ஆளும் கட்சியின் பணபலம் அதிகார பலம் தான் காரணம். சுதந்திரத்திற்கு பிறகு நடைபெற்ற இடைத்தேர்தல்களில் 80 சதவீதம் ஆளும் கட்சிதான் வென்றுள்ளது. ஆனால் கொஞ்சநாளில் பொதுத்தேர்தல் வரும் போது ஆளும் கட்சி தோல்வி அடையும். இடைத்தேர்தலில் பணமழையாக கொட்டுவதே இதற்கு காரணம்.

31 ஆம் தேதி வரை நேரம் உள்ளது
இந்த ஒரு இடைத்தேர்தல் வருவதனால் திமுகவின் ஆட்சி மாறப்போகிறதா.. திமுகவின் பெரும்பான்மை எதுவும் மாறப்போவது இல்லை. மக்களவை தேர்தலுக்கே இன்னும் 14 மாதங்கள் உள்ளது. இது ஒரு இடைத்தேர்தல் அவ்வளவுதான். எனவே மக்கள் மன்றத்தில் புரூப் பண்ண வேண்டிய இடத்தில் பாஜக இல்லை. 31 ஆம் தேதி வரை நேரம் உள்ளது. நல்ல முடிவு வலுவான முடிவு எடுப்போம். முக்கிய முடிவு என்னவென்றால் திமுகவை எதிர்த்து நமது வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் நோக்கமே தவிர இது பலப்ப்ரிட்ச்ச அல்ல..இந்த கட்சியின் பலம் என்ன..அந்த கட்சியின் பலம் என்ன? என்பது இந்த தேர்தலில் தேவையில்லாத பேச்சு.

நேரம் இருக்கு.. காலம் இருக்கு..
நமது கூட்டணியில் அதிமுக வலுவான கட்சி. அங்கே இருக்கக் கூடிய வேட்பாளர்கள் அமைச்சர்களாக இருந்தவர்கள். இதில் வேறு வேறு வேட்பாளரை நிறுத்தி நாம் என்ன சாதிக்க போகிறோம். முழு மெஜாரிட்டியோடு நம்முடைய சைடில் எல்லோரும் ஒன்றாக இணைந்து நிற்க வேண்டும். நாம ஒன்றாக இருக்கிறோம். பாஜகவை பொறுத்தவரை எங்கள் நிலைப்பாடு வெகுவிரைவில் அறிவிப்போம். நேரம் இருக்கு.. காலம் இருக்கு.. எந்த அவசரமும் யாருக்கும் இல்லை.

பிரிவு இருக்கக் கூடாது
மக்கள் மன்றத்தில் இருக்கும் அதிருப்தி திமுகவிற்கே வெட்ட வெளிச்சமாக தெரிவதால் பிரசாரத்தை அவர்கள் முதலில் தொடங்கியிருக்கிறார்கள். அதிமுகவில் இருப்பது உள்கட்சி பிரச்சினை. அவர்கள் தொண்டர்களாக சேர்ந்து முடிவெடுக்கிறார்கள். நாங்கள் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரிவு இருக்கக் கூடாது. பாஜக நிலைப்பாடு எடுக்கட்டும் நாங்கள் சொல்கிறோம் என நிறைய கட்சிகள் சொல்லி இருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.