“பிரதமரே இங்கு வந்தாலும் விஜய்யின் ஒற்றை முகத்தால் தோற்றுவிடுவார்” - இசக்கி சுப்பையா பரபர பேச்சு!
நெல்லை: "எப்பேர்பட்ட ஆள் வந்தாலும் சரி... எங்களுடைய முதல்வர் விஜய் ஒற்றை முகம் வந்துவிட்டு சென்றால்போதும், பாரத பிரதமரே வந்தாலும் முடியாது" என அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்து இசக்கி சுப்பையா பேசியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் 100 நாள் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தவெக செயலாளரும், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளருமான இசக்கி சுப்பையா பங்கேற்றுப் பேசினார்.

இசக்கி சுப்பையா பேசுகையில், "இங்கே பேசியவர்கள் அனைவரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்று கூறினார்கள். எனக்கு அதில் சில முரண்பாடு உள்ளது. என்னை பொறுத்தவரை அடுத்த பிரதமர் அவர் தான். ஏனென்றால் சமீபத்தில் அசாம் மாநிலத்திற்கு சென்றபோது டிரைவர் ஒருவர் என்னிடம் பாஜக வேஸ்ட், தவெக தான் ஒர்த் என்று கூறினார்.
இசக்கி சுப்பையா ராஜினாமா செய்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நான் ராஜினாமா செய்யவில்லை. என்னை ராஜினாமா செய்ய வைத்துவிட்டனர். திமுகவை எதிர்த்து ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காகத்தான் எம்ஜிஆர் அதிமுகவை உருவாக்கினார். ஆனால் திமுகவும், அதிமுகவும் இணைந்து ஆட்சியமைத்தால் நன்றாக இருக்காது. அதற்கு முயற்சி நடந்ததால் தான் நான் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தேன்.
எனவே, தான் நாங்கள் 25 பேர் சட்டமன்றத்தில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம். அப்போது எடப்பாடி பழனிசாமி என்னை தகுதி நீக்கம் செய்யப் போவதாகக் கூறினார். எனவே, நானாகவே பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். எனக்கு பதவி ஆசை இல்லை. திமுகவில் சேரச்சொல்லி என்னை பலமுறை அழைத்தனர். ஆனால் நான் செல்லவில்லை.
மக்களுக்கு பொது சேவை செய்யும் இயக்கத்திற்கு மட்டும்தான் நான் ஆதரவளிப்பேன். அதனால் தான் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளேன். எங்கள் தலைவரின் ஒற்றை முகம் வந்துவிட்டு சென்றால் பிரதமரால் கூட இங்கு வெற்றி பெற முடியாது. அதிமுகவும், இரட்டை இலையும் எனது உயிர் மூச்சு. எனவே அதை மறக்க மாட்டேன். ஆனால் அதிமுக இப்போது எங்கே இருக்கிறது? ஜெயலலிதாவை அசிங்கப்படுத்தியவர்களுடன் கூட்டணி வைக்க முயன்றனர். எடப்பாடி பழனிசாமியால் இதை மறுக்க முடியுமா?
புதுச்சேரி விடுதியில் சட்டமன்ற உறுப்பினர்களை ஏன் அடைத்து வைத்தீர்கள்? அப்போது திமுகவுடன் கூட்டணி வைத்து நான் முதலமைச்சர் ஆவேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அம்பாசமுத்திரம் தேர்தலில் குப்பன் நின்றாலும் சரி, சுப்பன் நின்றாலும் சரி, எங்கள் முதல்வரின் ஒற்றை முகம் வரும் அந்த ஒற்றை முகம் தான் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராகப் பணியாற்றிய இசக்கி சுப்பையா, கடந்த திமுக ஆட்சியின்போது அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 2026 தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் நிலவிய குழப்பங்களுக்கு மத்தியில் இசக்கி சுப்பையா தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா தவெகவில் இணைந்தார். அம்பாசமுத்திரம் தொகுதியில் செல்வாக்கு வாய்ந்த இசக்கி சுப்பையாவுக்கு தவெக தலைவர் விஜய் அண்மையில் கட்சியில் பொறுப்புகளை வழங்கினார்.


Click it and Unblock the Notifications
