அதிகாலை 2.19 மணிக்கு நடந்த சம்பவம்.. திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது.. பரபரப்பு!
திருநெல்வேலி: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள பரசாலா ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை அதிகாலை ஏற்பட்ட நிலச்சரிவால், பிலாஸ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின் தடம் புரண்டது. இந்த சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் நல்வாய்ப்பாக காயம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும், அங்கு 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இப்போது தென்மேற்கு பருவமழை முடிந்து வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு பருவமழை நமது நாட்டிற்கு எதிர்பார்த்த மழையை கொடுக்காத நிலையில், வடகிழக்கு பருவமழையாவது ஓரளவுக்கு மழை தர வேண்டும் என்பதே பொதுமக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், அதை மிஞ்சும் வகையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

தடம் புரண்டது
தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி நமது அண்டை மாநிலமான கேரளாவிலும் கூட கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதற்கிடையே பிலாஸ்பூர் - திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் வியாழக்கிழமை அதிகாலை 2.19 மணியளவில் பரசாலா அருகே நிலச்சரிவு ஏற்பட்டதால் நிறுத்தப்பட்டது. அப்போது ரயில் இன்ஜின் தடம் புரண்டது தெரிய வந்தது. சரியான நேரத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
எஞ்சின் தடம் புரண்டதை தொடர்ந்து ரயிலை நகர்த்துவதற்காக மாற்று இன்ஜின் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்காக விபத்து நிவாரண ரயில், தேவையான ஊழியர்கள் மற்றும் உபகரணங்களுடன் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரயில் சேவை பாதிப்பு
இந்த சம்பவத்தால் வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த மூன்று ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் சிறப்பு ரயில் ஏரணியலிலும், மதுரை - புனலூர் எக்ஸ்பிரஸ் வடக்கு பணகுடியிலும், தாம்பரம் - திருவனந்தபுரம் சென்ட்ரல் அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் நாங்குநேரியிலும் நிறுத்தப்பட்டன.
மேலும், ஐந்து ரயில்களின் தாமதமானது. கன்னியாகுமரி - மங்களூரு சென்ட்ரல் பரசுராம் எக்ஸ்பிரஸ், நாகர்கோவில் சந்திப்பு - புனலூர் ரயில், திருவனந்தபுரம் வடக்கு - நாகர்கோவில் ரயில், புனலூர் - கன்னியாகுமரி ரயில் மற்றும் திருவனந்தபுரம் சென்ட்ரல் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் புறப்பாடு தாமதமானதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதுதவிர குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் மற்றும் புனே - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையும் தாமதமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நாகர்கோவில்-திருவனந்தபுரம், கொல்லம் இடையே 6 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்து என்ன
பாதிக்கப்பட்ட ரயில் பாதையில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பணிகள் முடியும் வரை அந்த வழித்தடத்தில் ரயில் சேவைகள் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்திற்கு நேற்று புதன்கிழமை வானிலை மையம் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும், அக்டோபர் 22 முதல் 25ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் எனக் கணித்து மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
