திருநெல்வேலியில் ஆண் நண்பருக்குத் தங்க நகைகளைக் கொடுத்த மனைவி.. கணவனுக்கு காத்திருந்த ட்விஸ்ட்!
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுன் வடடஃசி தெருவைச் சேர்ந்த பாலககுருசாமி என்ற பாத்திர வியாபாரி வசித்து வருகிறார். இவரது வீட்டில் 33 பவுன் நகை கொள்ளைபோன சம்பவத்தில் மிகப்பெரிய திருப்பமாக அவரது மனைவியே சிக்கியுள்ளார். அவர் தனது ஆண் நண்பருக்கு நகைகளைக் கொடுத்துவிட்டு கொள்ளை நடந்ததாக நாடகமாடியது காவல் துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
திருநெல்வேலி மாநகரம் வடடஃசி தெருவில் பாத்திர வியாபாரி பாலககுருசாமி வசித்து வருகிறார். இவர் கோவில் திருவிழாக்களில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார். இதற்காகக் கடந்த வாரம் சங்கரன்கோவில் அருகே உள்ள தென்மலைக்குச் சென்றுள்ளார். அப்போது தனது மனைவியான 36 வயதாகும் ரேவதி, தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தென்மலையில் உள்ள தனது தங்கை வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனால் அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது.

வியாபாரம் முடிந்து குடும்பத்தினருடன் வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 33 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து பாலககுருசாமி திருநெல்வேலி டவுன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகையைப் பதிவு செய்து ஆய்வு செய்தபோது, கைரேகை உள்ளிட்ட தடயங்களை மறைக்க மர்ம நபர்கள் மிளகாய்ப் பொடி தூவிச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
அதே நேரத்தில் வீட்டின் வெளிக்கதவு பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்த நிலையில், பீரோவின் கதவு உடைக்கப்படாமல் சாவியால் நைஸாகத் திறக்கப்பட்டிருந்தது. இதனால் வீட்டில் உள்ளவர்களின் உதவி இல்லாமல் சாவியை எடுத்து பீரோவைத் திறந்து நகையைக் கொள்ளையடிக்க வாய்ப்பில்லை என்று காவல்துறையினர் சந்தேகித்தனர். தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள்.
இதில் பாலககுருசாமியின் மனைவி ரேவதியின் செல்போன் அழைப்பு விவரங்களைச் சேகரித்தனர். அதில், அவருக்குப் பழக்கமான கூத்தன்குழி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் நவநீத கிருஷ்ணன் (40) என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நேற்று முன்தினம் அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து நெல்லை டவுன் தனிப்படையினர் நடத்திய விசாரணையில், பாத்திர வியாபாரி பாலககுருசாமியின் மனைவி ரேவதிக்கும், ஆட்டோ ஓட்டுநர் நவநீத கிருஷ்ணனுக்கும் நீண்ட நாட்கள் பழக்கம் இருந்தது. இந்த பழக்கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ரேவதி தனது நகைகளைச் சிறிது சிறிதாக அவரிடம் கொடுத்து வந்துள்ளார்.
அந்த நகைகளை நவநீத கிருஷ்ணன் தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் ரூ.35 லட்சத்திற்கு அடகு வைத்துப் பணம் வாங்கியிருந்தார். சம்பவம் நடப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு பாலககுருசாமி தன் வீட்டிற்கு அருகே உள்ள ஒரு இடத்தை வாங்குவதற்காக ரேவதியை அணுகியுள்ளார். "உனது நகைகளை வைத்து தான் அந்த இடத்தை வாங்க வேண்டும்" எனக்கூறியுள்ளார். அதற்கு ரேவதியும் சம்மதித்துள்ளார்.
ஆனால் வீட்டில் நகைகள் இல்லாதது கணவருக்குத் தெரிந்தால் பிரச்சினை ஆகிவிடும் என ரேவதி பயந்துள்ளார். எனவே அவர் தனது ஆண் நண்பர் நவநீத கிருஷ்ணனுடன் சதித்திட்டம் தீட்டினார். அதாவது வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து நகையை திருடியது போல் நாடகமாட முடிவு செய்துள்ளார்.
அதன்படி, சம்பவத்தன்று பாலககுருசாமியுடன் ரேவதி கோவிலுக்குச் சென்றார். அப்போது ரேவதி, தனது ஆண் நண்பரான நவநீத கிருஷ்ணனைத் தனது வீட்டிற்கு வரச்சொல்லி, கொள்ளையர்கள் வந்து நகையைக் கொள்ளையடித்துச் சென்றது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தக் கூறியுள்ளார். அதன்படி, நவநீத கிருஷ்ணனும் அங்கு வந்து நகைகளைத் திருடியது போல் அனைத்துப் பொருட்களையும் சிதறவிட்டுவிட்டு, பீரோவையும் திறந்து வைத்துள்ளார். ஆனால், வீட்டின் பூட்டை உடைக்காமல், சாவியும் இல்லாமல் பீரோவைத் திறக்க முடியாது என்ற புள்ளியில் ரேவதி சிக்கிக்கொண்டார். அவரைத் காவல்துறையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.




Click it and Unblock the Notifications
