உறவினர் சாவுக்கு சென்ற காதல் கணவர் மாயம்.. கண்ணீர் அஞ்சலி போஸ்டரால் மனைவி அதிர்ச்சி.. ஆணவ கொலையா?
திருவள்ளூர்: உறவினர் ஒருவரது இறப்புக்காக சென்ற கணவரை அவரது வீட்டார் ஆணவக் கொலை செய்துவிட்டதாக திருவள்ளூரில் மனைவி புகார் அளித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் அயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் அமுல். இவர் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வந்தார்.
ரயில் மூலம் சென்னைக்கு வேலைக்கு செல்லும் போது இவருக்கு ஆரணியை அடுத்த காரணி கிராமத்தில் வசிக்கும் வேறு சமூகத்தைச் சேர்ந்த கவுதம் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

காதலுக்கு எதிர்ப்பு
இந்த விவகாரம் கவுதமின் வீட்டாருக்கு தெரிந்தவுடன் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து வேறு வழியில்லாமல் கடந்த 2019ஆம் ஆண்டு கவுதம் தனது பெற்றோரின் எதிர்ப்பை மீறி அமுலை திருமணம் செய்து கொண்டார். இருவரும் இரு ஆண்டுகளாக சென்னையில் வசித்து வந்தனர்.

தாய், தந்தை
வார இறுதி நாட்களில் கவுதம் மட்டும் தனது ஊருக்கு சென்று தாய், தந்தையை பார்த்து வந்தார். இந்த நிலையில் கர்ப்பமான அமுல், பிரசவத்திற்காக அக்காவின் ஊரான ஆவூரில் இருவரும் குடிபெயர்ந்துள்ளனர். கடந்த மாதம் அமுலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த சூழலில் செப்டம்பர் 17ஆம் தேதி கவுதமின் உறவினர் ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் கிடைத்தது.

கவுதம் வீடு
அந்த உறவினருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தனது கிராமத்திற்கு சென்ற கவுதம் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அமுல் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அவரது இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அமுலின் உறவினர்கள் கவுதமின் ஊருக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் இறந்துவிட்டதாக வைக்கப்பட்ட கண்ணீர் அஞ்சலி போஸ்ட்டர்களையும் பதாகைகளையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குடும்பத்தினர் மீது நடவடிக்கை
இதையடுத்து கணவரின் இறப்பை மறைத்த அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆரணி காவல் நிலையத்தில் அமுல் கைக்குழந்தையுடன் வந்து புகார் அளித்துள்ளார். மேலும் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தனது காதல் கணவரின் மரணத்தை கூட மனைவியான தனக்கு சொல்லாமல் உடலை எரித்துவிட்டதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். மேலும் தனது கணவரை ஆணவக் கொலை செய்து தடயங்களை மறைக்கவே தனக்கு தகவல் கொடுக்காமல் அவசர அவசரமாக சடலத்தை எரித்துவிட்டதாகவும் புகார் கூறப்பட்டுள்ளதை அடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications