"மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை.. குடைச்சல் கொடுக்கிறது" அமைச்சர் நாசர்!
திருவள்ளூர்: மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை என்றும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்றும் பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து திட்டங்களை ஆய்வு செய்யும் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இது தமிழக அரசியலில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அடுத்த சில நாட்களில் 50 மத்திய அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வரவுள்ளதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இந்த கருத்தின் மூலம் தமிழகத்தில் பாஜக கால்பதிக்க தீவிரமாக பணியாற்றி வருவது தெரிகிறது.
பாஜகவுடன் திமுக சமரசமா?ஆணித்தரமான மறுப்பு சொல்லாத முதல்வர் ஸ்டாலின்- திராவிட சப்போர்ட்டர்ஸ் அப்செட்?

பியூஷ் கோயல் குற்றச்சாட்டு
இதனிடையே நேற்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழகத்தில் குடும்ப அரசியல் செய்கின்றனா். பிரதமரைக் கண்டு திமுக அரசு அஞ்சுகிறது. மத்திய அரசின் திட்டங்களில் பிரதமரின் படத்தைக்கூட இடம்பெறச் செய்வதில்லை. மத்திய அரசு தரமான அரிசியை வழங்குகிறது. ஆனால், தரமற்ற அரிசியை நியாயவிலைக் கடைகளில் மாநில அரசு விநியோகிக்கிறது என்று நேரடியாகவே விமர்சித்தார்.

திமுக கூட்டம்
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் போரக்ஸ் நகரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டார்.

அமைச்சர் நாசர் பேச்சு
இக்கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் சிறப்பான வெற்றி பெற பூத் கமிட்டி அமைக்க வேண்டும். 40 தொகுதிகளிலும் திமுக வெல்லும். திருவள்ளூர் தொகுதியில் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மாவட்டச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர் என பல்வேறு பதவிகள், தலைவரால் கிடைத்தது. நீங்கள் உழைக்க வேண்டும். எங்கள் காலம் முடிந்து விட்டது. நீங்கள் பதவிக்கு வர வேண்டும்.

மத்திய அரசு ஒத்துழைப்பில்லை
மத்திய அரசின் ஒத்துழைப்பு தமிழக அரசுக்கு இல்லை. 15 மசோதாக்கள் தூங்கிக் கொண்டிருக்கிறது. கோடிக்கணக்கான பணம் ஜிஎஸ்டியில் வரவில்லை. தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கஜானா காலியாக இருந்தாலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சராக இருக்கும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது என்று தெரிவித்தார்.

திமுக vs பாஜக
மத்திய அமைச்சர்கள் தமிழக அரசு மீது நேரடி குற்றச்சாட்டுகளை முன்வைக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழக அமைக்கர்களும் மத்திய அரசை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தல் பணிகளை கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசியல் திமுக vs பாஜக என்று மாறி வருகிறது. இந்த மோதல் வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்கும் என்றே பார்க்கப்படுகிறது.