தவெகவுக்கு 20% வாக்கு வங்கி உள்ளதா? கொஞ்சம் இந்தியா டுடே சர்வேவை பாருங்க.. அமைச்சர் எ.வ.வேலு பதில்!
திருவண்ணாமலை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 20 சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட கணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு கருத்து கூறியுள்ளார். பிரசாந்த் கிஷோரை விடவும் 2 நாட்களுக்கு முன்பு வெளியான இந்தியா டுடே கணிப்பை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் தரப்பில் தவெக தலைவர் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய் உடன் எப்போதும் 8 முதல் 11 பேர் வரை பிஎஸ்எஃப் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் உடனிருப்பர். இதனிடையே தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் விஜய்-ன் தவெகவுக்கு தமிழ்நாட்டில் 15 முதல் 20 சதவிகிதம் வரை வாக்கு வங்கி இருப்பதாக கூறப்பட்டது.

கிட்டத்தட்ட அதிமுகவுக்கு நிகரான வாக்கு வங்கி விஜய்-க்கு இருப்பதாக பிரசாந்த் கிஷோர் கூறியிருப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் விஜய் ஆகிய இரு தரப்பு மீதும் தொடர்ந்து அரசியல் கட்சிகளின் கவனம் திரும்பி இருக்கிறது. தவெக உடன் சில கூட்டணி பேச்சுவார்த்தையும் சில கட்சிகள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் விஜய்-க்கு Y பிரிவு பாதுகாப்பு மற்றும் பிரசாந்த் கிஷோரின் வாக்கு சதவிகித கணிப்பு குறித்து அமைச்சர் எ.வ.வேலு கருத்து தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்து எ.வ.வேலு பேசுகையில், Y பிரிவு பாதுகாப்பு கூட்டம் மற்றும் அச்சுறுத்தல் இருந்தால், மத்திய அரசு பாதுகாப்பு வழங்கும். அவருக்கு ஏதாவது அச்சுறுத்தல் இருந்திருக்கலாம். அதனால் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பிரசாந்த் கிஷோர் ஒன்றும் தமிழ்நாட்டை ஸ்ருஷ்டித்தவர் அல்ல. அது அவரின் வியாபார நோக்கத்திற்காக சொல்லப்பட்டது. இந்தியா டுடே என்ற பத்திரிகை தரப்பில் கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா டுடே ஒன்றும் திமுகவின் உறுப்பினர் அல்ல. வெகு காலமாக மக்கள் மத்தியில் பார்க்கப்பட்டு வரும் பத்திரிகை அது. அவர்கள் நடத்திய சர்வேயில் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 47 சதவிகித வாக்கினை பெற்றது.
தற்போது நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஓராண்டில் திமுகவின் வாக்கு சதவிகிதம் 5 கூடியுள்ளது. தேர்தல் நடத்தினால் திமுக கூட்டணி 52 சதவிகித வாக்குகளை பெறும் என்று தெரிவித்துள்ளது. இந்தியா டுடேவா, பிரசாந்த் கிஷோரா என்று கேட்டால், இந்தியா டுடேவின் கணிப்பையே அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications