கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: திருவாரூர் முத்துப்பேட்டையில் 4 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை!
திருவாரூர்: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து திருவாரூர் முத்துப்பேட்டையில் 4 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக இறந்து போன ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மதகலவரத்துக்கு முயற்சி.. முதல்ல அண்ணாமலையிடம் விசாரிங்க.. கோவை கார் வெடிப்பில் திவிக போர்க்கொடி

என்.ஐ.ஏ. விசாரணையில் முபின்
கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் இறந்த முபின், 2019-ம் ஆண்டு என்.ஐ.ஏ. அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டவர். இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்களில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்புடைய அசாருதீன் என்ற பயங்கரவாதியுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர் முபின். அசாருதீன் தற்போது கேரளா சிறையில் உள்ளார். ஆகையால் 2019-ம் ஆண்டு முபின், என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டார்.

நெல்லையில் 2 பேரிடம் விசாரணை
இதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக என்.ஐ.ஏ.வால் விசாரிக்கப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட நபர்கள் மீதான போலீஸ் பிடி இறுகி உள்ளது. நெல்லையில் மதகுரு உள்ளிட்ட 2 பேரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது. அதேபோல் திண்டிவனத்தில் இஸ்மாயில் என்பவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். நெல்லை மேலப்பாளையம் முகமது உசைன் மன்பை, கோவையில் மதகுருவாக இருந்துள்ளார். இஸ்லாமிய பிரச்சார இயக்கத்திலும் அங்கம் வகித்தவர். உசைன், கோவைக்கு அடிக்கடி சென்றும் வந்திருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்தனர்.

திண்டிவனம் இஸ்மாயில்
2018ம் ஆண்டு இந்து முன்னணி தலைவர்களை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியதாக திண்டிவனத்தை சேர்ந்த இஸ்மாயில் உட்பட 5 பேர் கோவையில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்.ஐ.ஏ. விசாரித்து பூவிருந்தவல்லி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் திண்டிவனம் ரத்தின சபாபதி தெருவில் உள்ள இஸ்மாயில் வீட்டில் திண்டிவனம் ஏ எஸ் பி அபிஷேக் குப்தா தலைமையான போலீசார் சுமார் அரை மணி நேரமாக சோதனை செய்தனர்.

முத்துப்பேட்டையில் 4 பேர் வீட்டில் சோதனை
இதனைத் தொடர்ந்து இன்று திருவாரூர் முத்துப்பேட்டையில் அசாருதீன், இடியாஸ், சாஜஸத், ரிஸ்வான் ஆகிய 4 பேர் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த 4 பேர் மீது ஏற்கனவே வேறு சம்பவங்களில் என்.ஐ.ஏ. வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.