கருட வாகனத்தில் மலையப்ப சுவாமிகள்! திருப்பதியில் கொட்டும் மழையிலும் விண்ணை பிளந்த கோவிந்தா முழக்கம்
திருப்பதி: திருமலை திருப்பதி பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று கருட சேவையையொட்டி மாலை 6.30 மணிக்கு கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார். திருமலையில் கனமழை பெய்து வரும் நிலையில் மாட வீதிகளில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுகிறது. இதில் 9 நாட்களும் மலையப்ப ஸ்வாமி பல்வேறு அலங்காரங்களில் வீதியுலா வருவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 12 ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிரம்மோற்சவத்தின் 5ஆம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
இதைத் தொடர்ந்து பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான கருட சேவை இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கியது. இது இரவு 11 மணி வரை நடைபெறும். கருட வாகனத்தில் மாட வீதிகளில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்தார். அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டது விண்ணை பிளந்தது.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கருடசேவையை காண திருமலையில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் திருமலை மாட வீதிகளில் குவிந்தனர். பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீஸாரும், 1300 தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். ஆக்டோபஸ் கமாண்டோ படையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் திருமலையில் கனமழை பெய்து வருகிறது. எனினும் கொட்டும் மழையில், கடுங்குளிரில் கருட சேவையை காண பக்தர்கள், 4 மாட வீதிகளிலும் குவிந்திருந்தனர்.
4ஆவது நாளான நேற்றைய தினம் மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி- பூதேவி சமேத கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளினார். 3ஆவது நாளான கடந்த 14 ஆம் தேதி காலை சிம்மவாகனத்திலும், இரவு முத்துப்பல்லக்கு வாகனத்திலும் எழுந்தருளினார்.
கருட சேவையை தரிசித்தால் தீயசக்திகள் ஏதும் நம்மை நெருங்கவிடாமல் கருடன் காப்பாற்றுவார் என்பது ஐதீகம், ஆரோக்கியம் சிறப்பாக அமையும். தோல் நோய், தடைகள், பிரச்சினைகள் என எதுவாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டும் வரலாம் என்பது நம்பிக்கை. குடும்ப ஒற்றுமை, செல்வ வளம் ஆகியவற்றை அளிப்பதுடன் பயங்கள், விபத்துகளால் ஏற்படும் ஆபத்துகளையும் கருடன் நீக்குவார் என்கிறார்கள்.




Click it and Unblock the Notifications
