20 கிமீ சுற்றளவில் வசிப்பவர்கள் சுங்கச்சாவடிகளில் இலவசமாக பயணிக்கலாமா? நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம்
திருப்பூர்: மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி மூலமாக வசூலித்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் என்பது ஒவ்வொரு ஊரிலும் வேறுபடுகிறது. அதேநேரம் எல்லா சுங்கச்சாவடிகளிலும், சுங்கச்சாவடிகளின் அருகாமையில் உள்ளவர்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதேநேரம் ஆதார் அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி பயணிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இது குறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் மாநிலத்தின் முக்கியமான நெடுஞ்சாலைகள் உள்ளன. சென்னை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, பெங்களூரு- மதுரை தேசிய நெடுஞ்சாலை, கோவை-சேலம் தேசிய நெடுஞசாலை என மாநிலத்தின் பெரும்பாலான சாலைகள் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் சாலைகளும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் வருகின்றன. தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தனியார் பங்களிப்புடன் சாலைகளை சீரமைத்து, அதற்கான கட்டணத்தை வாகன ஓட்டிகளிடம் இருந்து சுங்கச்சாவடி மூலமாக வசூலிக்கிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் மட்டுமே சுமார் 75 சுங்கச்சாவடிகள் உள்ளன. நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளை கடந்து செல்லும் கார், ஜீப், ஆட்டோ, பஸ், லாரி, டெம்போ உள்பட பல்வேறு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது வழக்கம்.
இந்த சூழலில் சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வாகன ஓட்டிகள் தங்களது ஆதார் உள்ளிட்ட முகவரிக்கான அடையாள அட்டையை காண்பித்து கட்டணம் இன்றி கடந்து செல்லலாம் என்று ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் அந்த தகவலுக்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
அதில் "தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில், அடையாள அட்டையை காண்பித்தால் உள்ளூர் வாசிகள் கட்டணம் இன்றி பயணிக்கலாம் என்பது தவறான கருத்தாகும். உள்ளூர்வாசிகளுக்கு கட்டணமில்லா பயணம் கிடையாது. ஆனால் சுங்கச்சாவடிக்கு அருகில் வசிக்கும் உள்ளூர் மக்களுக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதற்காக உள்ளூர் மாதாந்திர பாஸ் முறை நடைமுறையில் இருக்கிறது.
சுங்கச்சாவடியை சுற்றி 20 கிலோமீட்டர் சுற்றளவில் வசிப்பவர்கள் மட்டுமே இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள். குறிப்பிட்ட அந்த சுங்கச்சாவடிக்கென அறிவிக்கப்பட்டுள்ள விதிகளின்படியே இந்த பாஸ்கள் வழங்கப்படுகிறது. எனவே, அடையாள அட்டையை காண்பித்து கட்டணமில்லாமல் செல்லலாம் என்று கருத வேண்டாம். சலுகை பெற விரும்புவோர் அந்த சுங்கச்சாவடியின் விதிகளைப் பின்பற்றி முறைப்படி உள்ளூர் மாதாந்திர பாஸை பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி பாஸ் பெற்றால் மட்டுமே பாஸை காண்பித்து எத்தனை முறை வேண்டுமானாலும் ஒரு மாதத்தில் பயணிக்க முடியும்.


Click it and Unblock the Notifications
