கூடை கூடையாக திருப்பூர் மார்க்கெட்டில் மீன்கள்.. விலையைக் கேட்டு திக்குமுக்காடிய அசைவப் பிரியர்கள்
திருப்பூர்: திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் வழக்கத்திற்கு மாறாக ஒரே நாளில் சுமார் 80 டன் மீன்கள் குவிந்ததால், அதன் விற்பனை விலை அதிரடியாகக் குறைந்து மீன் பிரியர்களைப் பெரு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஆடி மாத பிரதோஷ நாளில் அசைவப் பிரியர்களின் கூட்டம் சற்று குறைவாக இருந்தபோதிலும், தமிழகம் மற்றும் பக்கத்து மாநிலங்களில் இருந்து கூடை கூடையாக மீன் வரத்து அதிகரித்ததே இந்த விலைச் சரிவுக்கு முக்கிய காரணமாகும்.
வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமை விடிவதற்கு முன்பே திருப்பூர் தென்னம்பாளையம் பகுதி, பரபரப்பில் மூழ்கிவிடும். காரணம் அதிகாலை 2 மணிக்கெல்லாம் ஆட்கள் நடமாட்டமும், மீன் வண்டிகளின் சத்தமும் பரபரத்து விடும்.

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்
ஆனால் நேற்றைய தினம் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.. ஆடி பிரதோஷம் என்பதால் வழக்கமான அசைவப் பிரியர்களின் கூட்டம் தென்படவில்லை..
வருடா வருடம் ஆடி மாதம் பிறந்துவிட்டாலே ஆன்மீக வழிபாடுகள், மாலை அணிந்து விரதம் இருப்பது எனப் பொதுமக்கள் அசைவ பக்கம் போவதைக் கொஞ்சம் குறைத்துக் கொள்வது வழக்கம். அதனால் மீன் வரத்தும் குறைவாகவே கரைக்கு கொண்டு வரப்படும. அநற்றைய தினம் தென்னம்பாளையம் சந்தைக்கு வந்த மீன்களின் அளவு, அசைப்பிரியர்களை மலைக்க வைத்தது.
கூடை கூடையாக மீன்கள்
தமிழக கடலோரப் பகுதிகள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகா, அதுமட்டுமில்லாமல் மேட்டூர் போன்ற முக்கிய அணைப்பகுதிகளில் இருந்தும் லாரி லாரியாக மீன்கள் வந்து குவிந்தன. கடந்த வாரங்களை விட வரத்து அதிகமாகவே இருந்ததால், சந்தையே மீன்களால் நிரம்பி வழிந்தது.
மொத்தம் 80 டன் மீன்கள் ஒரே நாளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் வஞ்சிரம், மத்தி, நெத்திலி போன்ற கடல் மீன்கள் மட்டுமே சுமார் 35 டன் வந்திருந்தன. அதேபோல் ஜிலேபி, கட்லா, ரோகு போன்ற அணை மீன்கள் 45 டன்களைத் தொட்டன. இப்படி வரத்து பன்மடங்கு உயர்ந்ததால், விற்பனையாளர்கள் மீன்களின் விலையைக் கணிசமாகக் குறைக்க வேண்டிய சூழல் உருவானது.
80 டன் மீன்கள் வரத்து
விலை சரிந்த செய்தி உடனே சுற்றுவட்டாரத்தில் பரவவும், சில்லறை வியாபாரிகளும், உள்ளூர் பொதுமக்களும் போட்டிபோட்டுக் கொண்டு சந்தையில் குவியத் தொடங்கினர்.
விலை நிலவரத்தைப் பார்த்தால், கடந்த வாரம் கிலோ ரூ.1350 வரை விற்ற வஞ்சிரம் மீன், நேற்று தடாலடியாக சரிந்து ரூ.800 முதல் ரூ.900 வரையிலும் விற்பனையானது. கிலோ ரூ.600-க்கு விற்ற பாறை மீன் ரூ.400-க்கும், சங்கரா ரூ.300 முதல் ரூ.350-க்கும், அயல மற்றும் கிழங்கா ரூ.200 முதல் ரூ.230-க்கும் விற்றன.
அதேபோல விளா மீன் ரூ.400, கணவாய் ரூ.450, இறால் ரூ.450, நண்டு ரூ.300, வாளை மீன் ரூ.300, நெத்திலி ரூ.120, சாலை மீன் ரூ.160 என ரகத்திற்கு ஏற்ப கிலோவிற்கு ரூ.10 முதல் ரூ.100 வரை விலை குறைந்து காணப்பட்டது. அணை மீன்களை பொறுத்தவரை ரோகு ரூ.160, டேம் பாறை ரூ.130, நெய் மீன் ரூ.130, ஜிலேபி ரூ.100 வரை விற்றதால் பொதுமக்கள் கைநிறைய மீன்களை வாங்கிச் சென்றனர்.
ஆடி மாத விரத சூழலிலும் கூட, இந்த எதிர்பாராத விலை வீழ்ச்சியால், அசைவப் பிரியர்கள் திக்குமுக்காடிப் போய்விட்டனர்.. மார்க்கெட்டிற்கு வந்த பொதுமக்கள் மற்றும் சில்லறை வியாபாரிகள் பலரும் இந்த விலைக் குறைப்பால் மிகுந்த மகிழ்ச்சியுடன் மீன்களை வாங்கிச் சென்றனர்...!!
ராமநாதபுரம் கருவாடு விலை
இதனிடையே, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி வி.வி.ஆர். நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஏராளமான கருவாட்டு கம்பெனிகளில், இப்போது ஆழ்கடல் மீன்பிடிப்பு காரணமாக மீன்களின் வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது.
நரிப்பையூர், மூக்கையூர், மாரியூர், வாலிநோக்கம், முந்தல், தூத்துக்குடி, பாம்பன் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய கடலோரப் பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் சீலா, நெத்திலி, ஊலி, நகரை, பண்ணா, சூடை, சாளை, கணவாய், திருக்கை, வாளை, காரா, முட்டைப் பாறை போன்ற பல்வேறு வகையான மீன்கள், தென்னைநார் விரிப்புகளில் பரப்பப்பட்டு 2 நாட்கள் சுட்டெரிக்கும் வெயிலில் காய வைக்கப்பட்டு உயர்தரக் கருவாடாக மாற்றப்பட்டு வருகின்றன.
உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தைகளுக்குப் பெருமளவில் அனுப்பி வைக்கப்படும் இந்தச் சூழலில், மீன்களின் வரத்து எதிர்பாராத வகையில் குவிந்துள்ளதால், கருவாட்டின் ரகத்திற்கு ஏற்ப கிலோவிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை திடீர் விலைக் குறைவு ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது...!!


Click it and Unblock the Notifications
