எம்ஜிஆர், ஜெயலலிதானு நினைப்பு.. சவுண்ட் விடும் எடப்பாடி பழனிசாமி! திருப்பூரில் விளாசிய மு.க.ஸ்டாலின்
திருப்பூர்: எடப்பாடி பழனிசாமி ஏதோ தன்னை எம்.ஜி.ஆர்., என்று நினைத்துக் கொண்டு, ஜெயலலிதா அம்மையார் மாதிரி நினைத்துக் கொண்டு சவுண்டு விடுகிறார். ஆனால், அவருடைய வண்டி கிளம்பியதும், சொந்த கட்சிக்காரங்களே என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதோடு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர்," 10 ஆயிரத்து 491 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகள், நலத் திட்ட உதவிகள், திருப்பூர் மாவட்டத்திற்கு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வளவு சாதனைகளையும், 4 ஆண்டுகளில் நம்முடைய திருப்பூருக்காக நாம் செய்திருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் பேச்சு
ஆனால், அதிமுக ஆட்சியில் திருப்பூரின் வளர்ச்சிக்காக குறிப்பிட்டு சொல்லும்படியாக ஏதாவது செய்திருக்கிறார்களா? அதிமுக ஆட்சிக்காலத்தில் திருப்பூர் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். 2006 முதல் 2011 வரையிலான கழக ஆட்சியில், திருப்பூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் 3 ரயில்வே பாலங்கள் உட்பட, 5 பாலங்களை கட்டுவதற்கு ஆணையிட்டார். ஆனால், 2011-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடனே, அந்தப் பணிகளை எல்லாம் முடக்கிவிட்டார்கள். 2021-ஆம் ஆண்டு மீண்டும் கழக ஆட்சி மலர்ந்த பிறகுதான் மீண்டும் அந்தப் பணிகளை முழுவீச்சில் இப்போது நாம் செய்து கொண்டு வருகிறோம்.
எடப்பாடி பழனிசாமி
இன்றைக்கு பார்க்கிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் இந்த பகுதிக்கு வந்தால் மட்டும் தன்னை மேற்கு மண்டலத்துக்காரர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் உறுதியோடு சொல்கிறேன் - பழனிசாமி அவர்களின் ஆட்சிக் காலத்தை விட, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில்தான் மேற்கு மண்டலத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்கு அதிக திட்டங்கள், சாதனைகள் செய்யப்பட்டிருக்கிறது - தொடர்ந்து செய்யப்பட்டும் - தொடர்ந்து செய்து கொண்டே இருப்போம் - இன்னும் தொடர்ந்து நாங்கள் தான் செய்து கொண்டு இருப்போம்.
அதிமுக தோல்வி
அதில் எந்த மாற்றமும் கிடையாது. அதனால் தான் சொல்கிறேன், எந்த தைரியத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த பகுதியில் இருந்து தன்னுடைய பிரசாரத்தை தொடங்குவார் என்று எனக்குப் புரியவில்லை. ஆனால், நிச்சயமாகச் சொல்கிறேன் - அதிமுக-வின் 2026 தேர்தல் தோல்வி இங்கே இருந்துதான் தொடங்கப் போகிறது. ஏற்கனவே, 2024 தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களில் இந்த மண்டலத்திலிருந்து தான் அவர் தோல்வியை பார்த்துவிட்டார்.
சட்டமன்றத் தேர்தல்
அதுதான் வருகின்ற சட்டமன்றத் தேர்தலிலும் அது தொடரப் போகின்றது. ஊர் ஊராக சுந்தரம் டிராவல்ஸ் பஸ்ஸில் சென்று, பொய்களை கத்தி கத்தி உரக்கப் பேசினால், தன்னுடைய அலங்கோல ஆட்சியை மக்கள் மறந்துவிட்டு, இவர் பேசுவதை எல்லாம் நம்புவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்! ஆனால், அவர் ஆசையில் மண் விழுகின்ற மாதிரி, உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் என்று நம்முடைய அரசின் திட்டங்கள் மக்களிடம் பெரிய 'ஹிட்' ஆகிவிட்டது.
தி.மு.க. அரசு
அந்த வயிற்றெரிச்சலில் தான், தி.மு.க. அரசு மேலும், மேலும் ஸ்கோர் செய்துவிடக் கூடாது - மக்களுக்கு நன்மை நடந்திடக் கூடாது என்று மக்கள் நலத் திட்டங்களுக்கு தடை விதிக்க நீதிமன்றம் சென்றார்! ஆனால், நீதிமன்றம் என்ன சொன்னது? அரசியல் காழ்ப்புணர்ச்சியை தீர்த்துக் கொள்வதற்கு நீதிமன்றத்தை நாடுவது தவறு என்று சொன்னது மட்டுமல்ல, நம்முடைய அரசுக்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் - 10 இலட்சம் ரூபாய் நன்கொடை தருவது போல - மாண்பமை உச்சநீதிமன்றம் 'ஃபைன்' போட்டு அனுப்பிவிட்டார்கள்.
தமிழ்நாடு
இது உங்களுக்கு அவமானமாக இல்லையா? அதுமட்டுமல்ல, பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவிலேயே பெஸ்ட் மாநிலம் தமிழ்நாடு தான் என்று, நாங்கள் சொல்லவில்லை - அவர்களின் கூட்டணியில் இருக்கின்ற ஒன்றிய பா.ஜ.க. அரசே அறிக்கையை வழங்கியிருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து அவருக்கு அடி மேல் அடி விழுகிறது. இதனால், விரக்தியின் உச்சத்துக்கே எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் போய்விட்டார். அதனால்தான், முதலமைச்சர் என்கின்ற மக்கள் அளித்த பொறுப்புக்குக் கூட மரியாதை தராமல், தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசிக் கொண்டு வருகிறார். அதைப் பற்றியெல்லாம் நாம் கவலைப்படவில்லை.
எம்ஜிஆர் - ஜெயலலிதா
இன்னும் பேசுங்கள்; இன்னும் இறங்கிப் பேசுங்கள். நான் அதைப் பற்றி கவலையேபடவில்லை. எங்கள் பணி, மக்கள் பணி. உங்களுக்கெல்லாம் பதில் சொல்லி, என்னுடைய நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரைக்கும், பேச்சைக் குறை - செயலில் மட்டுமே காண்பிக்கவேண்டும். ஏதோ தன்னை எம்.ஜி.ஆர்., என்று நினைத்துக் கொண்டு, ஜெயலலிதா அம்மையார் மாதிரி நினைத்துக் கொண்டு சவுண்டு விடுகிறார். ஆனால், பாவம் அவருக்குத் தெரியவில்லை. அவருடைய வண்டி கிளம்பியதும், சொந்த கட்சிக்காரங்களே என்ன கமெண்ட் அடிக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியவில்லை.
திராவிட மாடல் 2.0
அவருடைய எந்த சதித் திட்டமும் நம்முடைய அரசின் சாதனைகள் முன்னால் எடுபடவில்லை, இனியும் எடுபடாது! நம்முடைய திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து நாம் செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அனைவருக்குமான நல்லாட்சியை நடத்திக் கொண்டு வருகிறோம். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரவேண்டும் என்றுதான் மக்களாகிய நீங்கள் விரும்புகிறீர்கள். இந்த நல்லாட்சி எந்நாளும் தொடரும். உங்கள் விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்! திராவிட மாடல் 2.0-ல் இதுவரை அடையாத புதிய உச்சங்களை தமிழ்நாடு நிச்சயம் அடையும்! இது உறுதி!" என்றார்.












Click it and Unblock the Notifications