கார்த்திகாவால் கலாட்டா.. தாராபுரம் ஸ்டேசனை குறிவைத்த தம்பிகள்! குவிந்த போலீஸ்.. ரெடியான வஜ்ரா!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை விடுதலை செய்யக் கோரி தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவுகள் பரவி வருகின்றன. இதையடுத்து, தாராபுரம் பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் நகரப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.
தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் கடந்த அக்டோபர் 6-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலின்போது நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கார்த்திகா மற்றும் அக்கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பொதுமக்களுக்கும் மாற்றுக் கட்சியினருக்கும் இடையூறு ஏற்படுத்தியதாகவும், முதலமைச்சரின் வாகன அணிவகுப்பு சென்ற பாதையில் சாலை மறியலில் ஈடுபட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், கார்த்திகா உள்ளிட்டோர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
நாதக கார்த்திகா
இதற்கிடையே இடைத் தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கார்த்திகாவை போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர், இரவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை, நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி உத்தரவின்பேரில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து, இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவர் கோவை மத்திய சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.
நாம் தமிழர் கட்சியினர்
கார்த்திகா சிறையில் அடைக்கப்பட்ட தகவல் அக்கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இந்நிலையில், கார்த்திகாவை விடுதலை செய்யாவிட்டால் தாராபுரம் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாகக் குறிப்பிடப்பட்ட போஸ்டர் ஒன்று, நாம் தமிழர் கட்சியினர் பெயரில் நேற்று இரவு வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
முற்றுகை அறிவிப்பு
இதனால், தாராபுரம் காவல் நிலையத்தை நோக்கி கட்சி நிர்வாகிகள் திரளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்தப் பதிவுகள் பரவி வரும் நிலையில், காவல் நிலையத்தில் டிஎஸ்பி சிவகுமார் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
போலீஸ் பாதுகாப்பு
இதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் கூடுதல் போலீசார் தாராபுரத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் வஜ்ரா வாகனமும் தாராபுரம் காவல் நிலையம் முன்பு தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தை முற்றுகையிட யாரேனும் திரண்டு வந்தால், அவர்களைத் தடுத்து சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கும் வகையில் அவர்களை கைது செய்யவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். காவல் நிலையத்தின் முன்புறம் மட்டுமின்றி, அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தாராபுரத்தில் பரபரப்பு
சமூக வலைதளங்களில் பரவி வரும் முற்றுகை தொடர்பான பதிவுகளால், நாம் தமிழர் கட்சியினர் எந்த நேரத்திலும் தாராபுரம் காவல் நிலையம் முன்பு திரளக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனால், போலீசார் உஷார் நிலையில் இருந்து நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
