சென்னையே காலி.. ஆனால் திருப்பூரில் கூட்டம் அலைமோதுகிறது! தீபாவளி நாளில் என்னாச்சு பாருங்க
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் வடமாநிலத்தவர்கள் அதிகளவில் வசித்து வரும் நிலையில், அவர்கள் தீபாவளி பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்காக கடந்த சில நாட்களாகவே ரயில் மூலம் கிளம்பி வருகிறார்கள். தீபாவளி நாளான இன்றும் கூட திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பின்னலாடை தொழிலுக்கு பெயர் பெற்ற திருப்பூரில், வேலைவாய்ப்பு தேடி பல்வேறு மாநிலங்கள் இருந்து ஏராளமானோர் வந்து தங்கி பணிபுரிகின்றனர். இங்கு இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

தீபாவளி
இவர்களில் பலரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களாகவே சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தீபாவளியுடன் சாத் பூஜையையும் கொண்டாடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். இதனால் ஷாலிமார், பரவுனி உள்ளிட்ட வடமாநில நகரங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இதனால் கடந்த ஒரு வாரமாகவே திருப்பூர் வழியாக செல்லும் பல்வேறு ரயில்களில் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது. வடமாநில ரயில்களில் கூட்டம் உச்சத்தில் இருக்கிறது. தீபாவளி நாளான இன்றும் காலை முதலே ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது. குறிப்பாக, ஷாலிமார் செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் மற்றும் பரவுனி செல்லும் சிறப்பு ரயில்களில் ஏராளமானோர் பயணம் செய்தனர்.
கூட்டம்
முன்பதிவு இல்லாத பெட்டிகளில் ஏறுவதற்காக பயணிகள் ஒருவரையொருவர் முந்திக்கொண்டு முண்டியடித்தனர். பெட்டிகளுக்குள் ஏற்கெனவே பயணிகள் நிரம்பியிருந்ததால், பலருக்கு நிற்பதற்குக் கூட இடம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இருப்பினும், கிடைக்கும் சிறிய இடத்திலும் நின்றபடி பயணம் செய்ய பலரும் முயன்றனர்.
கூட்ட நெரிசலுக்கு இடையே பெண் பயணிகளும் ரயிலில் ஏறுவதற்கு பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். சிலர் ரயில் பெட்டிகளின் ஜன்னல் வழியாகவே உள்ளே ஏறி இடம்பிடிக்கும் நிலை ஏற்பட்டது. அடித்து பிடித்து கொண்டு பணிகள் ஜன்னல் வழியாக ஏறிய காட்சிகள் காண்போரை பரிதாபப்பட வைத்தன.
சென்னை vs திருப்பூர்
தீபாவளி நாளான இன்று சென்னையில் டிராபிக்கோ கூட்டமோ இல்லாமல் இருக்கிறது. கடந்த சில நாட்களிலேயே பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிட்டனர். இதனால் சென்னை ஏர்போர்ட் கூட காலியாகவே இருக்கிறது. ஆனால், திருப்பூர் ரயில் நிலையத்தில் அதற்கு நேர்மாறாக கூட்டம் இருக்கிறது.
தீபாவளி பண்டிகை நாளான இன்றும் திருப்பூர் ரயில் நிலையத்தில் இப்படி கூட்டம் குறையாமல் காணப்படுவதற்கு, வடமாநில தொழிலாளர்களே காரணமாகும். தீபாவளியுடன் சாத் பூஜையையும் கொண்டாட வடமாநிலம் செல்லும் அவர்கள், திரும்ப வர பல வாரங்கள் கூட ஆகும் என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
