திருப்பூரில் வெளியூர் ரேஷன் கார்டு.. பெண் கேட்ட சரமாரி கேள்வி.. அறிய வேண்டிய பெரிய உண்மை
திருப்பூர் அருகே பெருமாநல்லூர் ரேஷன் கடையில் பெண் ஒருவர் எங்களது உரிமையை தான் கேட்கிறோம், ஒசியாக அல்ல எனவும், 10 கிலோ அரிசியை மட்டும் வழங்கிவிட்டு, 10 கிலோ அரிசியை ஏன் தர மறுக்கிறீர்கள் என ரேசன் கடை விற்பனையாளரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பிய வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. கடையில் உள்ள ஏராளமான அரிசி மூட்டைகளை வீடியோ பதிவு செய்த பெண், வெளியூர் ரேஷன் கார்டுகளுக்கு ஏன் அரிசி முறையாக வழங்குவது இல்லை என்று கேள்வி எழுப்பினார்.
வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள், புதிதாக வீட்டிற்கு குடியேறிய உடனே கேஸ் பில்லை மட்டும் வைத்து, இ சேவை மையத்தில் சென்று முகவரியை எளிதாக மாற்றலாம். உங்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் டைப் செய்ய தெரியும் என்றால், வீட்டிலேயே இருந்தபடியே, கேஸ்பில்லை புகைப்படம் எடுத்து ஆன்லைனிலேயே முகவரியை மாற்ற முடியும். வெறும் ஒரு வாரத்தில் உங்கள் முகவரி மாறிவிடும். அதன்பிறகு அதிலேயே உங்கள் கடை எண்ணும் மெசேஜ் ஆக தெரிவிக்கப்படும்.

அதனை வைத்து எளிதாக, உரிமையுடன் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க முடியும். இல்லாவிட்டால் மாத கடைசியில் சென்றால் மட்டுமே பார்த்து பார்த்து பொருட்களை தருவார்கள். ஏனெனில் வெளியூர் கார்டுகளை பொறுத்தவரை மாத கடைசியில் போய் தான் பொருட்களை வாங்கும் நிலை பல ஊர்களில் இருக்கிறது. அதேபோல் எல்லா பொருளும் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் ஒரு சில பகுதிகளில் உள்ளது. அப்படி ஒரு குற்றச்சாட்டு தான் திருப்பூரில் எழுந்துள்ளது.
திருப்பூர் அருகே பெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க ரேஷன் கடையில் பெண் ஒருவர், தனது ரேஷன் அட்டைக்கு 20 கிலோ அரிசி வழங்க வேண்டும் என்றும் ஆனால் 20 கிலோவுக்கு பில் போட்டுவிட்டு தனக்கு பத்து கிலோ மட்டும் கொடுத்ததாகவும் குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் ரேஷன் கடையில் போடப்பட்ட பொருட்களை வீட்டுக்கு சென்று எடை போட்டு பார்த்த போது ஒன்பது கிலோ மட்டுமே இருந்ததாகவும், தனக்கு வழங்கப்பட வேண்டிய 20 கிலோ அரிசியில் வழங்க வேண்டும் என்றும் அந்த பெண் கோரிக்கை வைத்தள்ளார்.
இதுபற்றி ரேஷன் கடைக்கு சென்று ரேஷன் கடை ஊழியரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பிய அந்த பெண், வெளியூர் கார்டுகளுக்கு அரசு 20 கிலோ தான் வழங்க வேண்டும் என ஏதாவது சொல்லி உள்ளதா அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருகிறது. ஆனால் ஆயில் வழங்கவில்லை ஏன் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளியூர் கார்டுதாரர்களுக்கு மாதக்கடைசியில் வாருங்கள் அரிசி வழங்குகிறோம் எனக் கூறுகிறீர்கள்.. ஆனால் மாதத்தில் கடைசி தேதியில் வந்தால் கூட உள்ளே அரிசி வழங்குவதில்லை.. பக்கத்தில் இருக்கக்கூடிய மற்றொரு ரேஷன் கடையிலும் இதே போல் தான் செய்கின்றனர்.. ஆனால் தற்போது ரேஷன் கடைக்குள் இவ்வளவு மூட்டைகள் அரிசி இருந்தும் அரிசி இல்லை என கூறுவது சரியா என்று ஆவேசமாக கேட்கிறார்.
பின்னர் எங்களுக்கான நியாயத்தை தான் நான் கேட்கிறேன் என சொல்லி வீடியோ பதிவு செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்ததை அறிந்த ரேஷன் கடை விற்பனையாளர் அரிசியை வாங்கிச் செல்லுங்கள் என்று தனது தரப்பு விளக்கத்தை கூறி சமாதானம் செய்தாராம். எனினும் எங்களது நியாயத்தை தான் கேட்கிறோம் எனக் கூறி அந்த பெண் வெளியிட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டுகளுக்கும் முறையாக அரிசி, சர்க்கரை, ஆயில் உள்பட அனைத்து பொருட்களையும் மாதத்தில் எப்போது போனாலும் தர வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும் என்று வெளியூர் கார்டு வைத்துள்ளவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications