தாராபுரம் தேவாலயம் முன்பு ஒரே நேரத்தில் வந்த தவெக - திமுகவினர்! எதிர் எதிராக வந்ததால் பரபரப்பு
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் தேவாலயம் முன்பு 3 அமைச்சர்கள் தலைமையில் தவெகவினரும், கே என் நேரு தலைமையில் திமுகவினரும் நேருக்கு நேர் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது தேவாலயத்தில் இருந்து வெளியே வந்தவர்களிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என தவெகவினரும், உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என திமுகவினரும் நோட்டீஸ் விநியோகித்தனர்.
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் இவ்விரு தொகுதிகளிலும் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. தெரு தெருவாக, வீடு வீடாக சென்று கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இருதொகுதிகளும் திமுக, தவெக, அதிமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட்கள் என 5 முனை போட்டி நிலவுகிறது.

தவெக மற்றும் திமுகவினர் இன்று தாராபுரத்தில் ஒரே தேவாலயம் முன்பு நேருக்கு நேர் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது கவனத்தை பெற்றது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை சாலையில் உள்ள CSI எல்லிஸ் நினைவாலய கிறிஸ்தவ ஆலயத்தில், திமுக மற்றும் தவெக கட்சியினர் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுகன்யாவுக்கு ஆதரவாக தேர்தல் தொகுதி பொறுப்பாளர் கே. என். நேரு, மாவட்டச் செயலாளர் பத்மநாபன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், பிரார்த்தனை முடித்து வெளியே வரும் கிறிஸ்தவ மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக ஆலயத்தின் ஒரு பகுதியில் காத்திருந்தனர்.
அதே நேரத்தில் தவெக சார்பில் அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், அருண்ராஜ், செங்கோட்டையன், பர்வேஸ் உள்ளிட்டோர் ஆலயத்தின் மறுபுறம் நின்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் எதிரெதிரே நின்றிருந்த நிலையில், ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்ததுடன், நலம் விசாரித்துக் கொண்டனர். எனினும் தவெக தொண்டர்கள் ஒருபுறம் தவெக.. தவெக.. என்றும், திமுக தொண்டர்கள் திமுக.. திமுக எனவும் முழக்கம் இட்டதால் அங்கு பரபரப்பு உண்டானது.
இதையடுத்து தேவாலய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டதின் பேரில் அமைதியானார்கள். போலீசாரும் அங்கு வந்து இரு தரப்பினரையும் அமைதியாக நிற்க வைத்தனர். தவெகவினர் ஒருபுறமாகவும், திமுகவினர் ஒருபுறமாகவும் நிற்க வைக்கப்பட்டனர். தொடர்ந்து இரு கட்சியினரும் தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு, ஆலயத்தில் இருந்து வெளியே வந்த மக்களிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கினர். தேவாலயத்தில் இருந்து வெளியே வந்தவர்களிடம் விசில் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என தவெகவினரும், உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு போடுங்க என திமுகவினரும் நோட்டீஸ் விநியோகித்தனர்.
எதிரெதிர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில் நின்று வாக்கு சேகரித்தாலும், ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் கவனம் பெற்றது. இதனிடையே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இரு தரப்பினரையும் தனித்தனியாக பிரித்து நிறுத்தினர். ஆலயத்தின் முன்பு செய்தியாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை போலீசார் தடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுக தேர்தல் தொகுதி பொறுப்பாளர் கே. என். நேரு, "அவர்கள் அவர்களது பணிகளைச் செய்கிறார்கள்.. இங்கு எந்தப் பிரச்சனையும் நடக்காமல் மட்டும் பார்த்துக் கொள்ளுங்கள்" என போலீசாரிடம் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
