ரேசன் ஊழியர்களுக்கு வார்னிங்.. கடைக்குள் வெளியாள் இருந்தால் அரெஸ்ட்! பணியின் போது ஐடி கார்டு அவசியம்
திருப்பூர்: கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது எச்சரிக்கை, பணியின் போது அடையாள அட்டை அவசியம் அணிய வேண்டும் என ரேசன் கடை ஊழியர்களுகு திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் கூறியுள்ளார்
தமிழக அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவுத் துறை மற்றும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறையின் கீழ் ரேஷன் கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் 34 ஆயிரத்து 792 ரேஷன் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமார் 33,000 கடைகள் நேரடியாகக் கூட்டுறவுத் துறை மூலம் நடத்தப்படுகின்றன.
ஒரு பகுதியில் ஆயிரம் குடும்ப அட்டைகளுக்குக் குறைவாக உள்ள பகுதிகளில் 18,782 முழு நேர ரேஷன் கடைகளும், பகுதி நேரமாக 9388 ரேஷன் கடைகளும் இயங்கி வருகின்றன.

ஆயிரத்திற்கு மேல் குடும்ப அட்டைகள் கொண்ட பகுதிகளில் முழு நேரமாக 4,352 ரேஷன் கடைகளும் செயல்படுகின்றன. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 2 கோடியே 23 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன்பெறுகின்றனர். இதற்கிடையே ரேஷன் கடை ஊழியர்கள் மீது அடுத்தடுத்து பல மாவட்டங்களில் புகார்கள் குவிந்து வருகிறது.
குறிப்பாக ரேஷன் கடைகளுக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அங்கு விற்பனையில் ஈடுபடுவதாகவும், அடையாள அட்டை இல்லாததால் யார் ஊழியர்கள் என்பதை கண்டறிய முடியவில்லை என பொதுமக்கள் தொடர்ந்து புகார் கூறி வந்தனர், இந்நிலையில், ரேஷன்கடைகளில் தேவையின்றி வெளி ஆட்கள் இருந்தால் கைது செய்யப்படுவார்கள் எனவும், பணியின் போது அடையாள அட்டை அவசியம் அணிய வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன்கடைகளில் சம்மந்தப்பட்ட பணியாளர்களை தவிர வெளிநபர்கள் யாரும் இருக்கக்கூடாது. அவ்வாறு வெளிநபர்கள் ரேஷன்கடைகளில் இருந்தால், இதுகுறித்து காவல் துறை மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, கைது உள்ளிட்ட குற்றவியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் வெளிநபர்கள் கடையில் அனுமதித்து, அவர்களுக்கு துணைபோகும் ரேஷன்கடை விற்பனையாளர்கள் மீதும் மேற்குறிப்பிட்ட குற்றவியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஏற்கெனவே மாநில கூட்டுறவு துறை தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அதை உடனடியாக திருப்பூர் மாவட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டுமென திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கத்தைச் சேர்ந்த சரவணன் முதல்வரின் முகவரியில் புகாரளித்திருந்தார்.
இந்த நிலையில் இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட கூட்டுறவு துறை துணைப்பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்). எம்.தேவி சரவணனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்," கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும் வெளி நபர்கள் அனுமதிக்கக்கூடாது என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியின் போது அடையாள அட்டை அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications