Tiruppur Nurse: ஊத்துக்குளி காட்டில் உத்திராவுக்கு கொடூரம்! அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்!
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நர்ஸை கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து அவரது உடலை காட்டுக்குள் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். இந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (27). கட்டடத் தொழிலாளி. அவருடைய உறவினர் மகள் உத்திரா (26). இவர்களுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு பிறகு தம்பதியர், திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அங்கிருந்தபடியே ரஞ்சித்குமார் கட்டட வேலைக்கு சென்று வந்தார். அது போல் உத்திரா தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்தார்.
ரஞ்சித் குமார்
இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி காலை ரஞ்சித்குமார், வழக்கம் போல் கட்டட வேலைக்கு கிளம்பினார். அப்போது உத்திராவையும் மருத்துவமனையில் இறக்கிவிட்டுவிட்டு கிளம்பினார்.
உத்திரா வீட்டில் இல்லை
இதையடுத்து வேலை முடிந்து ரஞ்சித் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு உத்திரா வீட்டில் இல்லை. ஒரு வேளை கடைத்தெருவுக்கு போயிருப்பார் என காத்திருந்தார். ஆனால் நீண்ட நேரமாகியும் உத்திரா வீட்டிற்கு வரவில்லை.
அதிர்ச்சி
இதனால் அதிர்ச்சி அடைந்து, உத்திரா பணியாற்றிய மருத்துவமனை, அவரது உறவினர்கள், தோழிகள், உடன் பணியாற்றியவர்கள் உள்ளிட்டோரிடம் உத்திரா குறித்து கேட்டும் எந்த தகவலும் கிடைக்காததால், ரஞ்சித்குமார், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே காட்டுக்குள் ஒரு உடல் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
போலீஸார் கண்டெடுப்பு
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸார் சென்ற போது அங்கு முட்புதரில் நிர்வாணமாக உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் இருந்தது. இதையடுத்து அந்த உடலை கைப்பற்றிய போலீஸார் பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
உத்திராவுக்கு நடந்தது என்ன?
இந்த நிலையில் அந்த பெண் உத்திராதானா என அடையாளம் காட்ட ரஞ்சித்குமாரை போலீஸார் மருத்துவமனைக்கு வரவழைத்தனர். அப்போது ரஞ்சித்குமார், அந்த உடல் உத்திராவாக இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டே சென்றார்.
கதறிய ரஞ்சித்குமார்
ஆனால் அவரது துரதிருஷ்டம் அந்த உடல் உத்திராவுடையது! மனைவியின் உடலை பார்த்ததும் ரஞ்சித் குமார் கதறி அழுதார். அவரை அங்கிருந்த காவலர்கள் எல்லாம் சமாதானப்படுத்தினர். எனினும் துக்கம் தாங்காமல் அங்கிருந்த ஒரு மரக்கிளையில் ரஞ்சித் குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
மர்ம நபர்கள் கொலை
அவரை போலீஸார் பத்திரமாக மீட்டனர். உத்திரா மரணம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உத்திராவை மர்ம நபர்கள் கடத்திச் சென்று கொடூரமாக கொலை செய்து காட்டுப்பகுதியில் உடலை வீசியது தெரியவந்தது.
என்ன நடந்தது உத்திராவுக்கு!
இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலைக்குச் சென்ற நர்ஸ், முட்புதரில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார், கொலையாளிகளுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? இல்லாவிட்டால் யாரேனும் போதை ஆசாமிகள், தனியாக சென்ற உத்திராவை கடத்தி கொன்றனரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.




Click it and Unblock the Notifications
