துரை வைகோ கனவிலும் நினைச்சிருக்க மாட்டாரு.. சுயேட்சை செய்த மேஜிக்.. ஆச்சர்யத்தில் திருச்சி
திருச்சி: திருச்சி லோக்சபா தொகுதியில் 14 ஆயிரம் வாக்குகள் பெற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார் சுயேச்சை வேட்பாளர் ஒருவர். தீப்பெட்டி என நினைத்து பிஸ்கட் சின்னத்திற்கு வாக்காளர்கள் குழப்பத்தில் வாக்களித்த காரணத்தால் இப்படி வாக்குகள் அதிகமானதாக திமுகவினர் கூறுகிறார்கள்.
திருச்சி லோக்சபா தொகுதியில் தனிசின்னமாக தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளர் துரை வைகோ சுமார் 3 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உதய சூரியனுக்கு பதில் சுயேட்சை சின்னமான தீப்பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோ 5 லட்சத்து 42 ஆயிரத்த 213 வாக்குகள் பெற்று அசத்தினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் 229119 வாக்குகள் மட்டுமே பெற்றார்.. 3வது இடத்தை பிடித்த நாம் தமிழர் வேட்பாளர் ராஜேஸ் 107458 வாக்குகள் பெற்றார். பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் 100747 வாக்குகள் பெற்றார்.

இந்நிலையில் திருச்சி லோக்சபா தேர்தல் முடிவில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் 14 ஆயிரத்து 796 வாக்குகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்தது தான். திருச்சி தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ்க்கு ஒவ்வொரு சுற்றிலும் 700-க்கும் அதிகமான வாக்குகள் கிடைத்த வண்ணம் இருந்தது.
அது எப்படி சுயேட்சை ஒருவர் எல்லா பகுதியிலும் கணிசமான வாக்கு வாங்க முடியும் என்று வாக்குச்சாவடி மையத்திலேயே திமுக, அதிமுக முகவர்கள் குழம்பிபோனார்கள்.. இதற்கு காரணமும் இருக்கிறது. ராமநாதபுரம் ஓபிஎஸ் பாணியில் இங்குமே துரை வைகோ பெயரை ஒத்த பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் துரை, அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பையா பெயரை கொண்ட இன்னொரு சுயேச்சை வேட்பாளரும் களம் இறங்கி இருந்தார். ஆனால் அவர்கள் எல்லாருமே மிக மிக குறைவான வாக்குகளே பெற்றிருந்தனர்.
இதில் சுயேட்சை செல்வராஜ்க்கு தேர்தல் ஆணையம் பிஸ்கட் சின்னம் ஒதுக்கியுள்ளது. வாக்கு கேட்டு மக்களிடம் எந்தவித பிரசாரமும் மேற்கொள்ளாத நிலையில் செல்வராஜுக்கு 14 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் எப்படி கிடைத்தது? என்பதை ஆச்சர்யமாக பார்த்தனர். இதனிடையே விசாரித்தால், செல்வராஜ் போட்டியிட்ட பிஸ்கட் சின்னம் செவ்வக வடிவத்தில், ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ போட்டியிட்ட தீப்பெட்டி சின்னத்தை போன்றே வாக்குப்பதிவு எந்திரத்தில் இருந்திருக்கிறது. இதனால் ஏற்பட்ட சின்ன (சின்னம்) குழப்பத்தில் வாக்காளர்கள் பலர் பிஸ்கட் சின்னத்துக்கு வாக்களித்துள்ளார்களாம்.
செல்வராஜுக்கு திருச்சி கிழக்கு தொகுதியில் 1,788 வாக்குகளும், திருச்சி மேற்கு தொகுதியில் 1,791 வாக்குகளும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,570 வாக்குகளும், திருவெறும்பூர் தொகுதியில் 2,432 வாக்குகளும், கந்தர்வகோட்டை தொகுதியில் 3,279 வாக்குகளும், புதுக்கோட்டையில் 2,921 வாக்குகளும், 15 தபால் ஓட்டுகள் உள்பட திருச்சி தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பரவலாக வாக்குகள் கிடைத்த காரணத்தால் 14 ஆயிரத்து 796 வாக்குகளை பெற்றுள்ளார். இதன்மூலம் 53 பேர் போட்டியிட்ட திருச்சி தொகுதியில் சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications