வீட்டிலிருந்து சட்டசபை லைவ் பார்க்கும் நிலைக்கு ஸ்டாலின் தனித்து விடப்பட்டுள்ளார்: அமைச்சர் ரமேஷ்
திருச்சி: முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் தற்போது தனித்துவிடப்பட்டுள்ளார் என அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்துள்ளார். காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் தனித்துவிடப்பட்டுள்ளார் என ஸ்டாலின் விமர்சித்ததற்கு ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
மாமன்னர் தீரன் சின்னமலையின் 212வது நினைவு தினத்தையொட்டி திருச்சி கலெக்டர் அலுவலகம் எதிரில் போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள தீரன் சின்னமலையின் உருவ சிலைக்கு அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ், சட்டசபை உறுப்பினர்கள் நவல்பட்டு விஜி, தினேஷ், கதிரவன் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் ரமேஷ் சந்தித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் உள்ள தலைவர்கள் பாராட்டும் வகையில் ஆட்சியில் நடத்தி வருகிறார். வரலாற்றிலேயே மிகுந்த மாற்றத்தை உருவாக்கி வருகிறார்.
மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்து இன்று வாக்களிக்காதவர்கள் கூட மகிழ்ந்திருக்கும் படியான நம்முடைய முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றார்.
காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய் தனித்து விடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், "யார் தனித்து விடப்பட்டுள்ளார் என மைக்கை நீட்டி கேட்டால் தெரியும். முன்பெல்லாம் சட்டமன்றத்தில் இருந்து பேசிக் கொண்டிருந்த ஸ்டாலின், இன்று சட்டமன்ற நிகழ்வுகளை வீட்டில் இருந்து பார்த்துக் கொண்டு இருக்கும் வகையில் தனித்து விடப்பட்டிருக்கிறார் என்பதுதான் உண்மை அது மக்களுக்கு தெரியும் என்றார்.
மேகதாது பிரச்சனை குறித்து முதல்வர் பேசவில்லை எனவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஏன் நடத்த ஏன் தாமதம் என்ற கேள்விக்கு , "எல்லா விஷயத்தையும் பேசி செய்ய வேண்டிய அவசியமில்லை. செயலில் காட்டினாலே போதும்.
எங்கள் முதல்வர் செயலில் காட்டக் கூடிய முதல்வர்.
இடைத்தேர்தலுக்காக வெறியோடு காத்திருப்பதாக சீமான் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, "அவரும் 15 வருடமாக பயிற்சி பணிகள் என்று கூறி இன்னும் பயிற்சி செய்து கொண்டே இருக்கிறார். இதுபோன்று வெறுப்பு அரசியலை விதைப்பது தலைவருக்கு எதிராக பேசுவதை விட்டுவிட்டு உண்மையிலேயே வெற்றி பெறுவதற்கான நோக்கத்தோடு செயல்பட்டால், வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஏதாவது இடம் பெற்று வெற்றி பெற வாய்ப்புள்ளது என அவரை கேட்டுக் கொள்கிறேன்.
"நான் ஓடி ஒளியவில்லை, தவெக என் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளது" என செந்தில் பாலாஜி கூறி உள்ளாரே என்ற கேள்விக்கு , "அப்படி ஓடி ஒளியவில்லை என்றால் எங்கே காணாமல் போனார். தைரியமாக நிற்க வேண்டியதுதானே. கோர்ட் என்ன செல்கிறது என்று பார்க்க வேண்டியது தானே. களத்தில் வந்து சந்திக்க வேண்டியது தானே இந்த ஆட்சியை பொறுத்தவரை ஊழல் செய்த யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
அறநிலை தொடர்பான ஊழல் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு , "வெள்ளை அறிக்கை வெளியிட தொடர்பான ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் கோயில் சொத்துக்கள் பல்வேறு இடங்களில் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அதற்கான தனி தனி குழுக்கள் கூடிய விரைவில் அமைப்போம். கோவில் சொத்துக்கள் பாதுகாக்கப்படும் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications
