சமையல் கேஸ் சிலிண்டர் மானியம்.. கைரேகைக்காக கேஸ் ஏஜென்சிகளில் குவியும் மக்கள்.. பின்னணி
திருச்சி: தமிழகம் முழுவதும் மானிய விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கும் நுகர்வோரிடம் கைரேகைகளை கேஸ் ஏஜென்சி ஊழியர்கள் பதிவு செய்து வருகிறார்கள்.
20 வருடங்களுக்கு முன்பு சமையல் கேஸ் என்றால் பணக்காரர்கள் மற்றும் ஓரளவு வசதிப்படைத்தவர்கள் வீடுகளில் தான் இருக்கும். ஆனால் இப்போது சமையல் கேஸ் என்பது கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் இருக்கிறது. இதற்கு பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறத.

நாடு முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்களுக்கு இலவசமாக கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்க வேண்டும் என்று பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டம் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாக கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 41 லட்சம் பேர் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்களோடு சேர்த்து சிலிண்டர் இணைப்பினை தமிழகத்தில் 2.33 கோடி பேர் பெற்றுள்ளனர். தமிழகத்தில் உஜ்வாலா திட்டத்தில் கேஸ் இணைப்பு பெற்றுள்ளவர்களுக்கு மானியத்தில் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டருக்கு 300 ரூபாய் மானியம் கிடைக்கும். உதாரணமாக தற்போது சிலிண்டர் மற்றவர்களுக்கு 800 ரூபாய் என்றால், உஜ்வாலா திட்டத்தில் உள்ளவர்களுக்கு வெறும் 500 ரூபாய் அளவிற்கு தான் சிலிண்டர் தரப்படுகிறது.
சமையல் எரிவாயு மானியத்திட்டத்தில் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் சமையல் கேஸ் சிலிண்டர்களை வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. இதுதவிர தனியார் நிறுவனங்களும் சிலிண்டர் விநியோகம் செய்கின்றன.
இந்நிலையில் சமையல் கேஸ் சிலிண்டா் இணைப்பை பெற்றுள்ள வாடிக்கையாளர்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்கும் வேலைகள் தொடங்கி உள்ளது. இதற்காக வாடிக்கையாளரின் கைவிரல் ரேகையை பதிவு செய்யும் பணியை நிறுவனங்கள் தொடங்கி உள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்கின்றன. பொதுமக்கள் சிலிண்டர் வாங்கியதும், வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் மத்திய அரசின் மானியத்தொகை செலுத்தப்படுகிறது. 'பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா' திட்டத்தின் கீழ், இலவசகேஸ் இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கு கூடுதல் மானியம் வழங்கப்படுகிறது.
இந்த சூழலில் மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, இலவச கேஸ் பயனாளிகளுக்கு மட்டும் முதலில் கைரேகை பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது, அனைத்து வாடிக்கையாளருக்கும் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது கேஸ் ஏஜென்சிகளில், கைரேகை மற்றும் முக பதிவு வாயிலாக, வாடிக்கையாளரின் சரிபார்ப்பு நடந்து வருகிறது.
ஏஜென்சிக்கு வர முடியாத மூத்த குடிமக்களுக்கு, டெலிவரி ஊழியர்களின் செல்போன் செயலி மூலம், முக பதிவு செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. வாடிக்கையாளரின் உண்மை சரிபார்ப்பு பணிக்கு அவகாசம் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறிய அதிகாரிகள் , கைரேகை பதியவில்லை என்றாலும் தொடர்ந்து சிலிண்டர் விநியோகம் செய்யப்படும் என்றும் வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.












Click it and Unblock the Notifications