ED நடத்திய ரெய்டு.. டெல்லிக்கு ஓடி மோடியை பார்க்கிறார் மு.க.ஸ்டாலின்.. சீமான் சொன்ன கணக்கு!
திருச்சி: அமலாக்கத்துறை ரெய்டு வந்ததால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓடி சென்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பார்ப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காத முதலமைச்சர், இம்முறை பங்கேற்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
டெல்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அடுத்தடுத்து சோதனை நடத்தியுள்ள நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்த ரத்தீஷ், ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் தலைமறைவாகி இருக்கின்றனர்.

இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணம் விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க திமுக தரப்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளாக நடந்த நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இம்முறை செல்வது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், 3 நிதி ஆயோக் கூட்டத்திற்கு முதல்வர் செல்லவில்லை. இப்போது மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்திற்கு ஏன் செல்கிறார்? அமலாக்கத்துறை ரெய்டு வந்தால், ஓடி போய் மோடியை பார்த்துவிடுகிறார்கள்.
திமுகவுக்கு பயம்.. எங்களுக்கு அப்படி கிடையாது என்று தெரிவித்தார். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் திமுகவை வீழ்த்த ஓரணியில் நிற்க வேண்டும் என்ற கருத்து தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாட்டில் யார் எதிர்க்கட்சி என்ற கேள்வி உள்ளது. ஏனென்றால் திமுக மற்றும் அதிமுக இடையே எந்த கொள்கை வேறுபாடும் கிடையாது. காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையில் கொடிகள் மட்டுமே வேறு.
கொள்கைகள் ஒன்றுதான்.. மாற்று என்றால் புதிய கருத்தியல் மட்டுமே இருக்க முடியும். திமுகவும் வாக்குக்கு காசு கொடுப்பார்கள்.. அதிமுகவும் காசு கொடுப்பார்கள்.. திமுக இலவசங்களை அறிவித்தால், அதிமுகவும் இலவசங்களை அறிவிப்பார்கள். இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications