திருச்சி, காரைக்குடி நெடுஞ்சாலை 4-லேன் மேம்பாடு.. போக்குவரத்து நெரிசல் நீங்க போகும் பெரிய நிம்மதி!
திருச்சி: திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாராகும் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.. இந்த நான்கு வழி சாலை அகலப்படுத்துவதால் கிடைக்கக்கூடிய வசதிகள், நன்மைகள் என்னென்ன தெரியுமா? இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை விரைவில் நான்கு வழிச்சாலையாக மாறப்போகிறது.. இந்த 81 கி.மீ. சாலை, சுமார் 15 வருடங்களுக்கு முன்பே இரண்டு வழி சாலையாக, நடைபாதைகளுடன், சிறு பாலங்கள் கட்டப்பட்டு மேம்படுத்தப்பட்டது.

திருச்சி டூ காரைக்குடி
அந்த நேரத்தில் இதனை நான்கு வழி சாலையாக மாற்ற திட்டமிட்டிருந்தாலும், அப்போதைய போக்குவரத்து நெரிசல் அதற்கேற்ப இல்லை.. இதற்கு பிறகுதான் இரண்டுவழிச் சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிவிட்டதால், மேம்படுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
காரணம், இந்த சாலையை தினமும் சுமார் 20,000 வாகனங்கள் பயன்படுத்துகிறார்கள். இது, NHAI நிர்ணயித்துள்ள நான்கு வழி சாலைக்கான தரநிலையான 10,000 PCU-வை விட இரு மடங்கு அதிகமாகும். எனவேதான் இது நான்கு வழிச்சாலையின் தேவை அதிகரித்தது..
திட்ட அறிக்கை தயார்
தற்போது இதற்கான திட்ட அறிக்கை (DPR) வெளியிடப்பட்டு, சாலையின் அகலம் 45 மீட்டராக உயர்த்தப்பட உள்ளது.
எப்படியும் இந்த திட்ட அறிக்கை அடுத்த 6 மாதங்களுக்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலையின் புதிய பாதை (alignment) இறுதி செய்யப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இந்த புதிய பாதைக்கு திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து ஒப்புதல் பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்புதலும் கிடைத்தவுடன், நிலம் கையகப்படுத்துவதற்கான திட்டங்கள் (land plan survey - LPS) இறுதி செய்யப்படும்.
பணிகள் நடைபெறும்போது, இந்த சாலையையொட்டி உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்கள் பாதிப்படையாமலும், போக்குவரத்து சீராக செல்லவும், bypass திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
கையகப்படுத்தப்படும் நிலம்
இந்த 2 வழி சாலையை நான்கு வழி சாலையாக மாற்ற 45 மீட்டர் நிலம் தேவைப்படுகிறது. எனவே, சாலையின் இருபுறமும் தலா 7.5 மீட்டர் நிலத்தை கையகப்படுத்த வேண்டியிருக்கும். எனினும், கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி மற்றும் திருமயம் போன்ற இடங்களில் ஏற்கனவே புறவழிச் சாலைகள் (bypasses) இருப்பதால், அங்கு நிலம் கையகப்படுத்தும் தேவை இருக்காது என்கிறார்கள்.
இந்த விரிவாக்க பணிகள் முழுமையாக முடிந்தால், இந்த சாலை வியாபாரம், சுற்றுலா மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகும் என்றும், வாகன ஓட்டிகளுக்கும் எளிதான பயணத்தை ஏற்படுத்தி தரும், நெரிசலை குறைத்து நேரத்தை மிச்சப்படுத்தி தரும் என்றும் நம்பப்படுகிறது.
நன்மைகள் - பலன்கள்
இரண்டு வழிச்சாலை இருந்தபோது, நிறைய விபத்துகள் ஏற்பட்டன.. ஆனால், இப்போது இந்த விரிவாக்கத்தால் விபத்துகள் தடுப்பதுடன், பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்கு பயண நேரமும் குறையும், பாதுகாப்பும் அதிகரிக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்..
மொத்தத்தில் திருச்சி-காரைக்குடி நெடுஞ்சாலை விரிவாக்கமானது, பொதுப் போக்குவரத்து வசதியை தருவதுடன், சரக்கு போக்குவரத்துக்கும் இது பெரிதும் உதவும். இதனால், இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இது ஒரு உந்து சக்தியாக அமையும், சுற்றுலா கட்டடங்கள், உணவகம், தங்கும் இடங்கள் போன்ற தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் அதிகாரிகள்.












Click it and Unblock the Notifications