2 அமைச்சர்களும் வரலையே.. துரை வைகோ வேட்புமனு தாக்கல்.. கே. என் நேரு, அன்பிலை காணோம்.. என்னாச்சு?
திருச்சி: திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்விற்கு அம்மாவட்ட திமுக அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் இரண்டு பேருமே வரவில்லை என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் திருச்சி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் மதிமுக தலைவர் வைகோவின் மகன் துரை வைகோவை அறிமுகப்படுத்தும் கூட்டம் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது.

இதில் பேசிய துரை வைகோ மிகவும் உணர்ச்சிவயப்பட்டு பேசியது பெரிய சர்ச்சையானது. இனி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் ; செத்தாலும் தனி சின்னம் தான். உதய சூரியன் சின்னத்தில் எங்களுக்கு மரியாதை இருக்கிறது என்று ஆவேசமாகப் பேசினார்.
இதனை மௌனமாகவே கேட்டுக்கொண்டிருந்தார் அமைச்சர் நேரு. உதயசூரியன் சின்னத்தை உயரிய மரியாதையில் அவர் சொல்லியிருந் தாலும் கூட்டத்தில் கலந்துகொண்ட உடன்பிறப்புகள், உதயசூரியனை அவமரியாதை செய்திருப்பதாகவே பேசிக்கொண்டனர்.
செத்தாலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம் என சொல்வது திமுகவை காயப்படுத்தியுள்ளது என்று ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்ப ட்டிருக்கிறது. மேலும், துரை வைகோவின் பேச்சின் வீடியோவும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேடையை தட்டி அவர் பேசும் வீடியோவை முழுமையாக பார்த்த ஸ்டாலின், முகம் மாறியது. ஆனாலும் அதனை பெரிதுபடுத்தாமல், அமைச்சர் நேருவை தொடர்புகொண்டு, துரை வைகோவின் பேச்சை விவாதித்துள்ளார்.
நேருவும், சிறு வயசு தானே ; அதனால் கொஞ்சம் உணர்ச்சி வயப்பட்டிருக்கிறார் என சொல்ல, நம் தொண்டர்கள் வெக்ஸாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வைகோவிடம் நான் பேசுகிறேன் என்று சொல்லியிருக்கிறார் ஸ்டாலின் என்று கூறப்பட்டது.
அமைச்சர்கள் வரவில்லை: இப்படிப்பட்ட நிலையில்தான் திருச்சி மதிமுக வேட்பாளர் துரை வைகோ நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்விற்கு அம்மாவட்ட திமுக அமைச்சர்கள் கே என் நேரு, அன்பில் மகேஷ் இரண்டு பேருமே வரவில்லை என்பது விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் எங்கே அமைச்சர்கள் இவரின் நிகழ்வை புறக்கணித்துவிட்டனரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக துரை வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அமைச்சர்கள் ஏன் இந்த நிகழ்விற்கு வரவில்லை என்று கேட்டனர்.
இதற்கு துரை வைகோ அளித்த பதிலில், அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைங்க. நாங்க நன்றாக இருக்கிறோம். எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் இருக்கும். நான் அப்படி பேசியது உணர்வுகள், உணர்ச்சிகளின் வெளிப்பாடு.
எங்களுக்குள் பிரச்சனைகள் இல்லை. அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். மனக்கசப்பு எதுவும் இல்லாமல்தான் இருக்கிறோம், மனு தாக்கல் செய்ய வருவதற்கு முன்னர் அமைச்சர் கே.என்.நேருவை பார்த்துவிட்டுதான் வந்தேன். அவர் வீட்டுக்கு சென்றேன். என்னை மகன் போல நடத்தினார்.
என்னை வாசல் வரை வந்து வழி அனுப்பிவிட்டு சென்றார். என்னை அவர் தனது மகனாக பாவித்து அவர் நடத்துகிறார். அப்படி இருக்க எங்களுக்குள் என்ன பிரச்சனை இருக்க முடியும். தேர்தல் பிரச்சாரத்தில் எல்லாம் ஒன்றாக இருப்போம். ஒரே மேடையில் தோன்றுவோம். மற்றபடி எங்களுக்குள் ஒரு பிரச்சனையும் இல்லைங்க. நாங்க நன்றாக இருக்கிறோம்., என்று துரை வைகோ விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications