ராணிப்பேட்டையில் ரசாயன கழிவுநீர் தண்ணீர்.. அரிப்பு உள்பட பல்வேறு நோய்கள் வருவதாக பொதுமக்கள் அச்சம்!
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை சிப்காட் குடியிருப்பு பகுதியில் ரசாயன கழிவுநீர் தண்ணீருடன் கலந்து வந்ததால் குரோமிய கழிவால் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் வருவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டையில் வடக்கு பகுதியில் எம்.பி.டி சாலை அமைந்துள்ள நிலையில் தெற்கு பகுதியில் சிப்காட் குடியிருப்பு மற்றும் எமரால்டு நகர் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஓடும் மழைநீரில் அதிக அளவில் மஞ்சள் நிற ரசாயன கழிவுநீர் கலந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நீரில் கால் வைத்தால் அரிப்பு மற்றும் புண்கள் ஏற்படுவதாகவும் அதேபோல் ரசாயன கழிவுநீரை குடித்த கன்றுக்குட்டி ஒன்று உயிரிழந்ததாகவும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கடும் குற்றம்சாட்டை தெரிவித்ததோடு இந்த ரசாயன கழிவுநீர் டி.சி.சி தொழிற்சாலை வளாகத்திலுள்ள குரோமிய கழிவுகளில் இருந்து கசிந்து வருகிறதா அல்லது வேறு தொழிற்சாலையில் இருந்து வெளியேறுகிறதா என்பது தெரியவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனால் தற்போது டி.சி.சி வளாகத்திலுள்ள குரோமிய கழிவுகளை பாதுகாப்பான தொட்டிகளில் அடைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மழையின் போது கழிவுநீர் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் ரசாயன கழிவுநீர் எங்கிருந்து வெளியேறுகிறது என்பதை உடனடியாக கண்டறிந்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவதை தடுக்க வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
